/

கோடை விடுமுறையைக் கழிக்க...

சுட்டெரிக்கும் வெயிலில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வெயிலின் கொடுமை தெரியாமல் இருப்பதற்காக

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:58 pm

ஆர். வேல்முருகன்

சுட்டெரிக்கும் வெயிலில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வெயிலின் கொடுமை தெரியாமல் இருப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக வசதி உள்ளவர்கள் வெளி மாநில கோடை வாசஸ்தலங்களுக்கும் செல்வார்கள்.

ஆனால் எல்லோராலும் 'ஊர் சுற்ற' முடிவதில்லையே! பொதுவாக கோடை விடுமுறை தொடங்கிவிட்டாலே, குழந்தைகள் உள்ள வீடுகளில் இருப்பவர்களுக்குப் பெரிய பிரச்னைதான். சுமார் 2 மாதங்களுக்கு குழந்தைகளை 'எங்கே விடுவது' என்ற பிரச்னையில் விடுமுறைக் கால வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். 

ஆனால் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க வேறு வழிகளும் உள்ளன. ஒவ்வொரு நாளும், வங்கி, அஞ்சலகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு நம்முடைய பணிக்கு இடையிலேயே, நம் குழந்தைகளுக்கும் அந்த அமைப்புகளின் நிர்வாகம் செயல்பாடு குறித்து கற்றுத் தரலாம். இதன் மூலம், அஞ்சல் வழி தகவல் தொடர்பு, சேமிப்பின் அவசியத்தை சிறார்கள் உணர்ந்து கொள்வார்கள். வீட்டு பட்ஜெட்டை விடுமுறையில் குழந்தைகளே போடுமாறு செய்து அவர்களையே கடைகளுக்கு அழைத்துச் சென்று பொருள்களை வாங்கப் பழக்க வேண்டும்.

என்னதான் படிப்பிலும் பிற பழக்க வழக்கங்களிலும் நன்கு செயல்பட்டாலும் நமது உடலைப் பேணிக் காக்காவிட்டால் பயனில்லை. கோடை விடுமுறையில் ஏதாவது ஒரு விளையாட்டை முழுமையாகக் கற்றுத் தர முயற்சிக்கலாம். அதைத் தொடர்ந்து விளையாடினால், அதில் ஏற்றம் பெற்று விளையாட்டையே வாழ்க்கையாகக் கொள்ள வாய்ப்புள்ளது. கற்றுக் கொள்ளும் விளையாட்டில் உச்சம் பெற முடியாவிட்டாலும் நமது பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு நகரங்களில் வசிப்போரில் பெரும்பாலானவர்கள் மிக இளம் வயதில் வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியாது. கோடை விடுமுறையில் பிள்ளைகளை நீச்சல் வகுப்பில் சேர்த்து, நீந்தப் பயிற்சி பெறச் செய்யலாம். நீச்சல் என்பது உயிர் காக்கும் பயிற்சி. அதைப் பயின்றுவிட்டால் ஆயுள்காலம் முழுவதும் மறவாது. சதுரங்கம், பாட்மின்டன் போன்ற பிற விளையாட்டுகளுக்கும் கோடைப் பயிற்சி முகாம்கள் இருந்தால் அதில் சேர்க்கலாம். ஓவியம் பயிற்றுவிக்கலாம்.

இன்று எல்லாம் கணினிமயம்தான். எனவே, பள்ளியில் கணினியில் நேரடி பரிச்சயம் இல்லாத சிறார்களுக்கு கணினியின் அடிப்படைப் பயிற்சியைக் கற்றுத் தர ஏற்பாடு செய்யலாம். இப்போதைய நடைமுறைச் சூழ்நிலையில் ஆங்கிலம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் பயிற்சி அளிக்கும் வகுப்பில் சேரலாம். 

உலகம் உள்ளங்கை அளவில் சுருங்கிவிட்டது. இச்சூழலில் ஹிந்தி மட்டுமில்லாமல் ஜெர்மன், பிரெஞ்ச், சீன மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவருக்கும் கூடுதல் பலம் சேர்க்கும். இவ்வாறு பிற மொழிகளைத் தெரிந்து கொள்வது வேலைவாய்ப்பு எதிர்நோக்கும்போது கூடுதல் தகுதியைத் தரும்.

இதையெல்லாம்விட முக்கியமானது, விவசாய நாடான நம் நாட்டில் விவசாயிகள் பற்றிய விழிப்புணர்வும், மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்து இளம் சிறார்களுக்குப் புரிய வைப்பதும். நம் சொந்த கிராமம், அல்லது தெரிந்தவர்களின் கிராமத்துக்குச் சென்று ஓரிரு நாட்களாவது கிராமியச் சூழலில் தங்கி அந்த வாழ்வியலைச் சுவைக்க வேண்டும்.

மாணவ, மாணவியருக்கு மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி குறிப்பிட்ட பொது இடத்தில் அல்லது தெருவில் மரம் நட்டு அதைப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யக் கற்றுத் தர வேண்டும்.

விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிக்க உறவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். உறவுகளில் பெரும்பாலானவர்கள் கண்டிப்பாகக் கிராமங்களில் இருப்பார்கள். கிராமங்களுக்குச் சென்று அந்தச் சூழலை முழுமையாக உணர வைக்க வேண்டும். அவற்றின் மேம்பாட்டுக்கு- இப்போது இல்லாவிட்டாலும், பின்னாளில் வாய்ப்பு வரும்போது உதவும் மனநிலை ஏற்படும்.

அருகே உள்ள முதியோர் இல்லங்களுக்கும், ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று அவ்வாறான இடங்கள் எதனால் உருவாகின, அங்குள்ள முதியோர்களும் தங்கள் வயதொத்த குழந்தைகள் அநாதைகளானார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, உறவுகளின் அருமையை உணர்த்த வேண்டும்.

ஒவ்வொரு விடுமுறைக்கும் குறைந்தபட்சம் 4 அல்லது 5 நாள்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் வரும் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து மனம்விட்டுப் பேச முடியும். சிறிதாவது ஓய்வெடுத்தது போலவும் இருக்கும்.

சுற்றுலா செல்வதன் மற்றொரு முக்கிய நோக்கம் மனதுக்கு மகிழ்ச்சி கிடைத்து புத்துணர்வு ஏற்படும். 

சென்று வந்த சுற்றுலா தொடர்பான பதிவுகள் மனதில் எப்போதும் அசை போடும் வாய்ப்பு உள்ளது. 

சுற்றுலா செல்வது செலவுதான் என்றாலும் அதற்கேற்ப ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. திட்டமிட்டுச் செயல்பட்டால், ஒவ்வொரு கோடையும் பயனுள்ளதாக மாறும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.