விதிமீறலே வாழ்க்கையா?
ஒரு காரியத்தைச் செய்யாதே என்றால் அதைச் செய்ய வேண்டும் என்று துடிப்பது மனித மனோபாவம்.


ஒரு காரியத்தைச் செய்யாதே என்றால் அதைச் செய்ய வேண்டும் என்று துடிப்பது மனித மனோபாவம். கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை, கோவை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சுமார் 40 பேர் தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதிக்குள் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள். இவர்கள் வழக்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுவார்களாம். குரங்கணி மலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் மாண்டனர்.
இப்போதே இந்த விவகாரம் பற்றி பல மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உரிய அனுமதி இருந்ததா என்பது பற்றி, சரியான பாதையில் சென்றார்கள் என்பது பற்றி ஐயங்கள். இதில் விரைவில் தெளிவு பிறக்கட்டும்.
ஆனால் துக்கத்துக்கிடையிலும், வழக்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்றால் சிறுவர்களை எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெஞ்சைக் கவ்வும் இத்தகைய சோக சம்பவம் தவிர்த்திருக்கக் கூடியதுதானா?
இவ்வாறு அடிக்கடி மலையேற்றத்துக்குச் செல்வார்கள் என்றால் வனத் துறையினருக்குத் தெரியாமல் நடக்குமா? வனத் துறையினர் தரப்பில் கீழ்மட்ட நிலையில் இருப்பவர்கள் சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு, முன்னெச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்தத் துயரம் அரங்கேறிவிட்டதா? எச்சரிக்கும் தகவல்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டனவா? சிறியது என்று நினைக்கும் விதிமீறல்களால்தான் இன்று பல இளம் உயிர்கள் பலியாகிவிட்டனவா?
வனத்துறை விவகாரத்தில் கேரள அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். வனப் பகுதிக்குள் 5 மணிக்குள் செல்ல வேண்டும் என்றால், அது அமைச்சராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கடந்து சென்றாக வேண்டும். அங்கு அமைச்சர், அதிகாரிகள், கீழ்மட்ட ஊழியராக இருந்தாலும் வனத் துறையில் சட்டத்தை வளைப்பதில்லை. ஆனால் தமிழகத்தில்?
பொதுவாக தமிழகத்தைப் பொருத்தவரையில் வருமுன் எதையும் தடுப்பதென்பது பெரும்பாலும் கிடையாது என்றே கூறிவிடலாம். ஆனால் ஒரு பிரச்னை வந்த பின்பு, மீண்டும் அது போல் எதுவும் நடைபெறக் கூடாது என்ற கட்டுப்பாடும் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே. ஒரு பிரச்னை வரும்போது மட்டுமே அதைப் பற்றிப் பேசுகிறோம். அதன் பின் வசதியாக அதைப்பற்றி மறந்துவிடுகிறோம். யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்கி, அது பெரும்பாலும் இடை - கடை நிலை ஊழியர், அவருக்கு தண்டனை தருகிறோம்.
கும்பகோணத்தில் நடைபெற்ற பள்ளித் தீ விபத்தில் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த பின் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டனவா? இப்போதும் ஓடுகளை மேற்கூரையாகக் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கிராமங்களில் உள்ளனவே.
குடியிருப்புக் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஒரு மாடிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு 3 அல்லது 4 மாடிகள் கட்டிக் கொண்டு வாடகைக்கு விடுவது; அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் வரியையும் செலுத்துவது; ஏதாவது விபத்து நடைபெற்ற பின் கட்டட அனுமதி கொடுக்கும் பிரிவு அலுவலர், உள்ளாட்சி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள அலுவலர், அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர், அரசின் மற்ற துறை அலுவலர்கள் உள்பட அனைவரும் சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பார்கள். இது முன்பே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியாதா? முதலிலேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்படும் நிலையில் சரிந்து விழுந்து ஏராளமான உயிர்களை பலி வாங்கியதும், பல மாடி வணிக கட்டடம் தீக்கிரையானதும் விதிமீறல்களின் விளைவால்தானே?
இதுபோன்ற விதிமீறல்களில் உயிரிழப்போர் அல்லது பாதிக்கப்படுவோர் தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஆதாயம் பெறுவோர் அதைப் பெற்றுக் கொண்டிருப்பார்களா?
பெரும்பாலான விதிமீறல்களிலும் கடைசியாக கீழ்மட்ட ஊழியர்கள்தான் தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்பது கண்கூடு. அவர்கள்தான் பலிகடா. சிறிது காலம் கழித்து, பிரச்னையின் தீவிரம் முடிந்தபின், அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இன்னும் என்னென்ன விதமான விதிமீறல்கள்... ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது முதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுவரை விதவிதமான போக்குவரத்து விதிமீறல்கள். இவற்றால் ஏற்படும் விபத்துகளால் பேரிழப்புகள் ஏற்படும்போதுதான் அந்தச் சிறு விதிமீறலின் தீவிரம் புரிகிறது.
இரவு நேரத்தில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி சாலையோரத்தில் படுத்துறங்கும் பாதசாரிகள் பலியாகின்றனர்.
அண்மையில் சென்னையில் பள்ளி மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடும்போது கீழே விழுந்து ஒரு மாணவர் இறந்தார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிமீறல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நம்மில் பலரும் விதிமீறல்களைச் செய்கிறோம். பலரின் வாழ்க்கையே விதிமீறலாக இருக்கிறது. விதிமீறல்கள் விதிவிலக்காக இருந்தால் சமூகம் அதை ஜீரணித்துக் கொண்டுவிடும். ஆனால், அன்றாட வாழ்வானாலும் அரசியலானாலும், விதிவிலக்குகளே நடைமுறையாகிவிட்டால் அந்த சமூகமே சீரழிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...