/

முட்டுக்கட்டைகள் நீங்கட்டும்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் சமீபத்திய இரண்டு நடவடிக்கைகள் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:36 pm

ப. இசக்கி

மத்தியில் ஆளும் பாஜக அரசின் சமீபத்திய இரண்டு நடவடிக்கைகள் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றன. முதலாவது, மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 15 வார கால அடிப்படைப் பயிற்சிக்கு பிறகே அவர்கள் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் ஒதுக்கப்படும் என்பது. இரண்டாவது, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலர் பதவிக்கு இணையான 10 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் என்பது.
முதலாவது நடவடிக்கை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அது பாஜகவுக்கு அணுக்கமானவர்கள் மற்றும் ஆதரவானவர்களை அக்கட்சி விரும்பும் மாநிலத்தில் பணி நியமனம் செய்யவும், அதன் மூலம் அரசின் மறைமுக செயல்திட்டங்களை நிறைவேற்றவும் வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கடுமையான தேர்வு முறைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளில் ஒரு சாரார், அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நடவடிக்கை, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலர் பதவிக்கு இணையான 10 இடங்களுக்கு நேரடி யமனத்துக்கானஅறிவிக்கையை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மாதம் 15 - ஆம் தேதி தொடங்கி அடுத்த மாத இறுதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே, அரசு இதில் இறுதி முடிவு எடுத்தாகி விட்டது.
அரசுத் துறைகளில் இந்த நேரடி நியமனமானது, வெளியே தனியாரிடம் உள்ள அறிவு, ஆற்றல், அனுபவம், திறமை, நிபுணத்துவம் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என்று காரணம் கூறப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதம் அல்ல. இந்த நேரடி நியமனம் மூன்று வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முதலாவது, அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுதான் பணியில் சேருகின்றனர். பல ஆண்டுகள் திறமையாக பணியாற்றினால்தான் இணைச் செயலர் நிலையை எட்ட முடியும் (அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் முறைகேடுகள் விதிவிலக்கானவை). அரசுப் பணியாளர்களின் திறமையையும், நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ள அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் முடிந்த அளவு முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். 
தனியார் துறைகளில் அளிக்கப்படும் ஊக்கமும், வசதிகளும், வாய்ப்புகளும், சுதந்திரமும் அரசுத் துறையினருக்கு அளித்து முறையான கண்காணிப்பை மேற்கொண்டால் அவர்களாலும் அரசு எதிர்பார்க்கும் பலனை அளிக்க முடியும். இதற்கு வெளியே இருந்துதான் ஆள்களை கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
இரண்டாவது, தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவோரை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதால், அரசு மற்றும் மக்களின் நீண்ட கால நலன்கள் பாதிக்கப்படும். ஒரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் பணி நியமனம் பெற்றவர், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அந்தப் பணியில் தொடர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது உள்ள நடைமுறையில் ஒப்பந்த நியமனங்கள் எல்லாம் ஆட்சி மாற்றத்தின்போது அகற்றப்பட்டு விடுகின்றன. எனவே, அரசின் தொடர் நடவடிக்கைகள் துண்டிக்கப்படலாம். 
அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவோர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தனியார் நிறுவனங்களில் பணியாற்ற முடியும் என்று இதுவரை இருந்தது இப்போது ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற உடனே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அரசுத் துறைகளுடனான தமது தொடர்பின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதாயம் பெற்றுத் தருவதைத் தடுக்கவே இந்த நடைமுறை இருந்தது. ஆனால், இப்போது அரசுத் துறைகளில் உயர் பதவி வகித்தவர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்று ஆலோசகர்' என்ற பொறுப்பில் நியமித்துக் கொள்கின்றன. அவரது அரசுத் துறை தொடர்புகளைப் புதுப்பித்து அதன் மூலம் ஆதாயம் பெற்று வருகின்றன.
இந்தப் பின்னணியில், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுவோரில் அரசின் ஒப்பந்த நியமனம் பெற தகுதி உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை அரசுத் துறைகளுக்குள் புகுத்தி ஆதாயம் தேட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், பன்னாட்டு நிறுவனத் தொடர்பு உள்ளவர்களை அரசின் முக்கிய துறைகளில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பணி செய்ய அனுமதிப்பது நாட்டு நலன் மற்றும் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. 
இப்போது வெளியாட்கள் 10 பேரை நியமனம் செய்ய விவசாயம், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட சில துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி' என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களால் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, பறிபோகும் அரசு வேலைவாய்ப்பு. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான உடனே வந்ததுதான் இந்த ஒப்பந்த முறை. இந்த வகை பணி நியமனம் என்பது, ஊழியருக்கும், நிறுவனத்துக்குமான உறவின் மாண்பையே இழக்கக் செய்கிறது. நீண்ட கால உறவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் ஊழியர்களின் பணி அர்ப்பணிப்பும் குறைகிறது. நியமனம் பத்து பேர் என்று இருப்பது நாளை அதிகரிக்கப்படலாம். 
எனவே, நிர்வாகத்தில் அரசு எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வர, உள்ளுக்குள் இருக்கும் சக்தியை ஒருமுகப்படுத்தி, முட்டுக்கட்டைகளை நீக்கினால் புதிய பாதை புலப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.