/

கடலில் கலப்பது வீண் அல்ல

கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி வளி மண்டலத்துக்குச் செல்கிறது. பின்னர், அது மேகமாகி மழையாக நிலத்தில் பெய்கிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:22 pm

ப. இசக்கி

கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி வளி மண்டலத்துக்குச் செல்கிறது. பின்னர், அது மேகமாகி மழையாக நிலத்தில் பெய்கிறது. அந்த மழைநீர் ஆறுகள் வழியாக பாய்ந்தோடி மீண்டும் கடலில் கலக்கிறது. இது ஓர் சங்கிலித் தொடரான இயற்கை சுழற்சி. இந்த சங்கிலியின் ஒரு கண்ணியை துண்டிக்க முயன்றால் விளைவுகள் விபரீதமாகும். ஆனால் ஏனோ பலரும், பருவமழைக் காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதை தடுத்து முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 இப்போது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நாளொன்றுக்கு சுமார் 5 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் 352 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு சுமார் 13 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் 41,637 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது தமிழக முதல்வரும், "மழைக் காலங்களில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.
 சரி, மழைக்காலத்தில் ஆற்றுநீர் முழுவதையும் நாமே பயன்படுத்திக் கொண்டு அது கடலில் கலக்காமல் தடுத்து விட்டால் என்ன ஆகும்? கடல் நீரின் வேதித்தன்மை மாறும். உப்புத் தன்மை அதிகரிக்கும். கடல் சூழலியல் பாதிக்கப்படும். அதனால் கடலின் மேற்பரப்பின் வெப்ப நிலையிலும் பாதிப்பு ஏற்படும். இது கடலுக்கும்,
 வளி மண்டலத்துக்குமான காற்றோட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கும். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஆற்றுநீர் மூலம் கடலுக்கு வந்து சேர வேண்டிய கடல் வாழ் உயிரினங்களுக்கான உணவுப் பொருள்கள் தடைபடும். கடலில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் முதல் உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டியான திமிங்கலம் வரை உணவு கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். மீன்வளம் அழியும். கடல் பாசிகள் பட்டுப்போகும். மொத்தத்தில் கடல்வளத்துக்கு ஆபத்து வந்து சேரும்.
 மண்ணில் விழும் மழைநீர், ஆற்றில் கலந்து கடலுக்கு சென்று சேருகிறது. இந்த தண்ணீரில் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான கரைந்த ஆக்ஸிஜன் அதிகம் இருக்கும். ஆறுகள் அடித்து வரும் நுண் சத்துக்கள் அனைத்தும் ஆறும், கடலும் கலக்கும் கழிமுகங்களில் வந்து படியும். பிறகு அலைகளின் போக்குக்கு ஏற்ப அவை மெல்ல மெல்ல கடலின் கரையோரங்களில் பரவும். இவைதான் மீன்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்குமான உணவு. அவை கடல் வாழ் உயிரினங்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் கழிமுகங்களுக்கும், கரையோரங்களுக்கும் வந்து உணவை உண்டு செல்வதோடு இப்பகுதியில் இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு கடலுக்குள் சென்று பல்கிப் பெருகும்.
 கடல் வாழ் உயினங்களுக்குத் தேவையான 75 சதவீத நைட்ரஜனை ஆற்றுநீர்தான் அடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறது. எனவேதான், ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் மீன் வளம் அதிகம் இருக்கிறது. எனவே, கடல் வளத்துக்கு ஆற்றுநீர்தான் ஆதாரம்.
 ஆற்றுநீர் கடலுக்கு செல்லாவிட்டால் கடல்வளம் பாதிக்கப்படும். அதனால், மீன்வளமும் பாதிக்கப்படும். மீன் உற்பத்தியில் மேற்கு வங்கம், ஆந்திரம், குஜராத்ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகம் உள்ளது. இங்கு கடந்த 2016-இல் 7.09 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. மழை குறைந்ததால் கடந்த ஆண்டில் மீன் உற்பத்தி 6.69 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்து விட்டது.
 தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் மொத்தம் உள்ள 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையோரங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 10 லட்சம் மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்வளத் துறையின் புள்ளிவிவரப்படி சுமார் 5,300 விசைப் படகுகளும், இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் இயந்திரம் பொருத்தப்படாத சுமார் 31,000 நாட்டுப் படகுகளும் உள்ளன. கடல்தான் மீனவர்களின் வாழ்வாதாரம். கடல்வளத்துக்கு பங்கம் ஏற்பட்டால் மீனவர்களின் கதி என்னவாகும்?
 தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல் உணவுப் பொருள்களின் பங்களிப்பு 0.7 சதவீதம். கடந்த 2015-16-ஆம் ஆண்டின் மீன்வளத் துறையின் கொள்கைக் குறிப்பின்படி அதற்கு முந்தைய ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 93,477 மெட்ரிக் டன் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ. 5,308 கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது.
 மேட்டூர் அணைக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டிய பங்கு நீரைத் திறந்து விடா விட்டால் விவசாயிகளும், அரசியல்வாதிகளும் கொந்தளிக்கின்றனர். அதேபோல் கடல் வளம் செழிக்க அதற்கான பங்கு நீரை கொடுக்காமல் முழுவதையும் நாமே பயன்படுத்திக் கொண்டால், பாதிக்கப்படும் மீனவர்களுக்காக யார் குரல் கொடுப்பது? காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கூட, தனது தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கான நீர்ப் பங்கீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டி.எம்.சி.யையும், அதில் கடலில் கலக்கவிடுவதற்காகவே 4 டி.எம்.சி.யையும் ஒதுக்கியது. அதை உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
 ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைந்து வருகிறது. எனவே, மழைநீரை சேமிக்க வேண்டியதும், ஆறுகளில் வரும் நீரை அணைகள் மற்றும் நீர்நிலைகளில் தேக்கி வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதும் அவசியமே. அணைகளையும், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை சேமித்தால் பற்றாக்குறையை குறைக்கலாம். அதை விடுத்து, ஆறுகளில் செல்லும் நீரில் ஓரு சொட்டு நீரைக் கூட கடலுக்கு விடக் கூடாது என்றும், கடலில் கலக்கும் நீர் முழுவதும் வீண் என நினைப்பதும் இயற்கைக்கு முரணானது. எனவே, இனிமேலாவது "ஆற்றுநீர் கடலுக்குச் சென்று வீணாகிறது' என்று கூறாது இருப்போம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.