ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளுக்கும் அரசும் கட்சிகளும் லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நட்டதாகக் கூறுகின்றன. அப்படிப் பார்த்தால் நம் நாடு முழுதும் இன்று வனமாக மாறியிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். 100 மரங்கள் நடப்பட்டால் 30 தான் வளர்கின்றன. மற்றவை ஏதேதோ காரணங்களுக்காக வெட்டப்படுகின்றன.
மரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. இருந்தாலும் ஏன் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுகின்றன? எளிமையான வாழ்க்கை முறை மாறி, இன்னும் வசதிகள் வேண்டும், வேண்டும்' என்கிற மனிதனின் பேராசைதான் காரணம்.
சாலைகளும், வீடுகளும், மருத்துவமனைகளும், கல்விக்கூடங்களும் வேண்டும் தான். ஆனால் இவற்றைவிட முக்கியம் சுவாசிக்கக் காற்றும், குடிக்கத் தண்ணீரும். நான்கு வழிச் சாலைகளும், ஆறு வழிச் சாலைகளும், எட்டு வழிச் சாலைகளும் இருந்தால் பயணம் செய்யும் நேரம் குறையும் என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டினால் நம் வாழ்க்கைப் பயணத்தின் நேரமும் அல்லவா குறைந்து போகும்? ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து மரங்கள் நட வேண்டுமென்று சட்டம் இயற்றி விட்டு, அரசாங்கமே பல காரணங்கள் கூறி மரங்களை வெட்டுகிறது.
நம்மைவிட பின்தங்கியுள்ள கென்யாவில், பெருநகரங்களின் சாலைகள் எல்லாம் இருபுறமும் மிகப் பெரிய மரங்களோடு காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, சாலைகளின் நடுவிலும் மிகப் பெரிய மரங்கள் வரிசையில் உள்ளன. அவற்றின் மேல் கூடுகள் கட்டிக் கொக்குகள் வாழ்கின்றன. வாகனங்கள் பொறுமையாக நகர்கின்றன. நம்மூர் போல் யாரும் ஒலிப்பான்களை அலற விடுவதில்லை.
நம்மைவிட அதிகம் முன்னேறியுள்ள சீனாவில், குறுகிய சாலைகளிலும் கூட இருபுறமும் பெரிய பெரிய தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் சிறிய வகை மரங்கள் இரண்டுஅடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் அதிகம் ஓடும் இச்சாலைகளில் காற்று மற்றும் ஒலி மாசு பெருமளவில் குறைவதோடு, இம்மரங்களின் பல வண்ணப்பூக்கள் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கின்றன. நம் நாட்டில் எந்தவொரு கட்டுமானம் என்றாலும், முதலில் வெட்டு மரங்களை' என்ற கண்ணோட்டத்துடன்தான் செயல்படுகின்றனர். இது மாற வேண்டும்.
இதுவரை வெட்டியது போதும். இனியாவது இருக்கும் மரங்களை வெட்டாமல், இயற்கையோடு இணைந்து முன்னேற வேண்டும். ஒரு கட்டடம், அது வீடாக இருந்தாலும் சரி, வணிக வளாகமாக இருந்தாலும் சரி, அதற்கு அனுமதி தரும்போதே, இத்தனை சதுர அடிக்கு இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டும் என்று அரசு வரையறுக்க வேண்டும். அவ்விதம் வளர்க்கப்படுகின்றன என்பதை உறுதிசெய்யவும் வேண்டும்.
பொதுமக்களில் பலரும் மரங்களால் குப்பை சேருகிறது, வீட்டை மறைக்கிறது, பெயர்ப் பலகையை மறைக்கிறது என்று பல காரணங்கள் கூறி, மரங்களை வெட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அப்படி வீட்டின் முன் உள்ள மரத்தை வெட்டினால் அபராதம் விதிப்பது, குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது போன்ற தண்டனைகளைத் தர வேண்டும்.
தில்லி, புணே போன்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் மரங்கள் பாதுகாப்பு ஆணையம்' இங்கும் அமைக்கப்பட வேண்டும். இதில் அரசு அதிகாரிகளோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இவ்வாணையத்தின் அனுமதி பெறாமல் எந்த ஒரு மரத்தையும் வெட்ட முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும், இது குறித்து எல்லா பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும்.
மரம் வெட்டப்பட்டால் புகார் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண் அறிவிக்கப்பட வேண்டும். புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காடுகளுக்குள் சென்றால், வனத்துறை ஊழியர்கள் மேலும் மேலும் மரக்கன்றுகள் நட்டு வைப்பதைக் காணலாம். ஏற்கெனவே ஏராளமாக மரங்கள் இருக்கும்போது இன்னும் வைக்கிறார்களே என்று நாம் எண்ணலாம். திடீரென்று காட்டின் ஒரு பக்கம் காட்டுத் தீயால் அழிந்தாலும், இன்னொரு பக்கம் தப்பிப் பிழைத்த மரங்கள் அவ்விழப்பை ஈடு செய்யும்.
பட்டுப் போன மரங்களைக் கூட வனங்களில் வெட்ட மாட்டார்கள். அம்மரத்தில் எறும்பு, கரையான், பல்லி, மரங்கொத்திப் பறவை, ஆந்தை, தேரை, தேள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் வாழும், அவற்றுக்குச் சேதம் ஏற்படுத்தக் கூடாது என்னும் நல்லெண்ணத்தினால்தான்!
அரசும் மக்களும் ஒன்று சேர்ந்து மிச்சமிருக்கும் மரங்களைக் காப்பாற்றினால் தான் அடுத்த தலைமுறைக்குக் காற்றும், நீரும் கிடைக்கும். ஒரு மரத்தை ஒரு நாளில் வெட்டிவிடலாம். ஆனால், ஒரு நாளில் வளர்த்து விட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய வாழ்க்கையைச் செளகரியமாய் வாழ்வதற்காக நாளைய வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது. மரங்களை இழந்துதான் நாம் முன்னேற வேண்டும் என்பது, கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவது போல. நம் பிள்ளைகளுக்கு நாம் எவற்றை விட்டுச் செல்லப் போகிறோம்? பணம், வீடு, கார், சாலைகள், அடுக்குமாடிக் கோபுரங்கள் ஆகியவற்றையா? அல்லது தூய காற்று, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றையா? முடிவு செய்ய வேண்டிய நேரமிது!
மனிதன் இல்லாமல் மரங்கள் வாழலாம், மரங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது நினைவிருக்கட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

