/

காந்தியத்தை கடைப்பிடிப்போம்!

காந்தியம் என்ற உங்கள் சித்தாந்தத்தை விரிவாக விளக்க முடியுமா என ஓர் இளைஞர் அண்ணல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்: 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:58 pm

முனைவா் அ. பிச்சை

காந்தியம் என்ற உங்கள் சித்தாந்தத்தை விரிவாக விளக்க முடியுமா என ஓர் இளைஞர் அண்ணல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்: 
நமது தேசத்தில் பழமையான பண்பாடுகள், பாரம்பரியம் மிக்க கலாசாரத்தில் நல்லவற்றை நான் எடுக்கிறேன். அவற்றை என் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். அவற்றுக்கு நான் உரிமை கொண்டாட முடியாது. புத்தரும், ரமணரும், விவேகானந்தரும், சித்தர்களும், யோகிகளும் ஏற்கெனவே நமக்குக் கற்பித்தவை அவை. 
சத்தியம், அஹிம்சை, சமத்துவம், சகோதரத்துவம் என்பவை இந்தியப் பண்பாட்டின் கூறுகளல்லவா? அவற்றுக்கு காந்தியம் என்று நீங்கள் பெயர் சூட்டினால், நான் என்ன செய்ய முடியும்? எனப் பதிலுரைத்தார். 
அண்ணல் 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, தேசம் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. மக்களோ பல அவலங்களுக்கு ஆட்பட்டுக் கிடந்தார்கள். விடுதலைக்கான தேசிய இயக்கம் வீறு கொண்டு நின்றது. அப்பொழுது அண்ணல் காந்தி சொன்னார்:
வெள்ளையர் ஆட்சியை வெளியேற்றுவது மட்டுமே என் இலட்சியம் அல்ல; இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் அவர்கள் வெளியேறுவது நிச்சயம்! சகோதரர்களே! முதலில் உங்கள் மனங்களிலிருந்து பயத்தை வெளியேற்றுங்கள்; தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறியுங்கள் என்றார். 
அச்சமும், தாழ்வு மனப்பான்மையும் ஏதாவதொரு விதத்தில் நம் உள்ளத்தில் ஒளிந்து கொண்டுதானே இருக்கிறது; அதனை அறவே ஒழிக்க வேண்டும். தன்மானத்தோடு, சுய மரியாதையோடு வாழ வேண்டும். காந்திஜி கற்பித்த இந்தப் போதனைகளைக் கடைப்பிடிப்பதில் என்ன கஷ்டம்?
அரிச்சந்திரா நாடகம் பார்த்த அவர், சத்தியத்தின் நித்தியத்தை உணர்ந்தார்; இனி எந்நாளும் உண்மையே பேசுவேன் என உறுதிமொழி எடுத்தார். அதனை ஊருக்கும் உபதேசித்தார்.
நாம் நாள்தோறும் பழகும் பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமும் உண்மையைத்தானே பேசுகிறோம். தவறு செய்பவனும், தகாத வழியில் நடப்பவனும்தானே உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறான். திருடனும் திருந்தி விட்டால், உண்மை தானே பேசுவான், உத்தமர் காந்தியின் உபதேசம் நடை முறை சாத்தியம் தானே!
பெற்றோர் பிரியமுடன் அவருக்கு வைத்த பெயர்: மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி. மற்றவர்கள் ஆரம்பத்தில் அவரை எம்.கே.காந்தி என்றார்கள். அவரை மதிக்காத பிரிட்டீஷாரோ, அந்த மனிதன் காந்தி (That Man Gandhi) என்றார்கள்.
அவர் மீது வெறுப்பை உமிழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சிலோ அரை நிர்வாணப் பக்கிரி (Half-Naked Fakir)  அவர் என்றார். தென்னாப்பிரிக்காவின் கருப்பின மக்களோ அவரை மனித உரிமைக்கான போராளி எனப் போற்றினார்கள். இந்திய மக்கள் தேசப்பிதா என்றார்கள். மனித சமுதாயமோ அவரை மகாத்மா எனக் கொண்டாடுகிறது.
அப்பெருமகனை மோகன் என்று பெயரிட்டு அழைக்கும் உரிமை பெற்றவர் சி.எப். ஆண்ட்ரூஸ் என்ற இங்கிலாந்து தேசத்து கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் மட்டுமே. 
அண்ணலின் பெருமையை உணர்ந்த அவர், அண்ணலை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற இயலுமா என முயன்றவர் அவர். அதற்காகவே தென்னாப்பிரிக்கா சென்று அண்ணல் நிறுவிய பீனிக்ஸ் ஆசிரமத்தில் தங்கினார். நாள் தவறாமல் உரையாடல் நடந்தது.
அப்பொழுது அண்ணல், உங்களுக்கு மிகவும் பிடித்தமான போதனை ஒன்றைச் சொல்லுங்களேன் என்றார். அதற்கு ஆண்ட்ரூஸ் உங்கள் பகைவனையும் நேசியுங்கள்; இதுவே எனக்குப் பிடித்த சிறந்த போதனை என்றார். அது கேட்டு அண்ணல் அமைதியாக இருந்தார்.
ஆண்ட்ரூஸ் அண்ணலை நோக்கி இதற்கு உங்கள் பதில் என்ன எனக் கேட்டார். அண்ணல் அமைதியாகச் சொல்கிறார். பகைவனையும் நேசிக்க வேண்டும் என்கிறீர்கள்! ஆனால் எனக்குப் பகைவனே இல்லையே! என்றார். இப்படியும் ஒரு மனிதரா என வியக்கிறார் ஆண்ட்ரூஸ். அன்று முதல் அண்ணலின் ஆருயிர் நண்பராக மட்டுமல்ல, சீடராகவும் மாறுகிறார் ஆண்ட்ரூஸ்.
ஆனால், இன்று வாழும் சிலர் எதிர் வீட்டுக்காரனை எதிரியாகப் பார்க்கிறார்கள்; பக்கத்து வீட்டுக்காரனை பகைவன் என்கிறார்கள்; அண்டை வீட்டானோடு சண்டைக்குச் சமயம் பார்க்கிறார்கள். எனக்கு எல்லோரும் நல்லவரே! எவரிடமும் பகைமை இல்லை என்ற எண்ணம் முளைத்தால், நல்லது நடக்கும்; அல்லாதது அகலும். காந்திஜியின் இந்தக் கருத்து கடைப்பிடிக்கக் கூடியதுதானே!
அண்ணல் 1915-இல் இந்தியா திரும்பியபோது, முதலாம் உலகப் போர் (1914-1918) நடந்து கொண்டிருந்தது. ஆயுத பலம், ஆயுத பலத்தோடு மோதியது. எவருக்கும் வெற்றியில்லை.
இரு பக்கத்திலும் இழப்பு, இறப்பு, சோகம், சொல்லொணாத் துயரம்! இதனால் யாருக்கு என்ன பயன்? போரைத்தடுக்க பன்னாடுகளின் சங்கம்  (League of Nations)  உருவானது.
அப்பொழுது தனிமனிதன் பாபுஜி ஆயுத பலத்தை அன்பால், அஹிம்சையால், சத்தியத்தால் வெல்வேன் என்றார். சகல வல்லமை படைத்த பிரிட்டிஷ் ஆட்சியை, சத்தியாக்கிரக வழியில் எதிர்கொண்டார். நான் பிரிட்டிஷாரை நேசிக்கிறேன்; ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியை வெறுக்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். இவரை எப்படி எதிர் கொள்வது, சமாளிப்பது என்று தெரியாமல் ஆங்கிலேய ஆட்சியினர் திகைத்தனர்.
நான் எவருக்கும், என்னை எதிர்ப்போருக்கும் தீங்கிழைக்க மாட்டேன். என்னை நானே வருத்திக் கொள்வேன்; என் இலட்சியத்தை சத்திய வழியில் அடைவேன் என்றார். சத்திய வழியில் சாம்ராஜ்யத்தை எதிர் கொண்டார் மகாத்மா! அதே வழியில் சாதாரண பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள முடியாதா?
என் கண்ணைச் குருடாக்கினால், உன் கண்ணை நான் குருடாக்குவேன்என்ற தத்துவம் உலகத்தையே குருடாக்கிவிடுமே! பழிக்குப் பழி, தாக்குதலுக்கு மறு தாக்குதல் என்பது தகாத செயல் அல்லவா எனக் கேட்டார்.
அன்பை, அஹிம்சையை கோழையால் வெளிப்படுத்த இயலாது. அது வீரனின் சிறப்புரிமை; மன்னிக்கும் மாண்பு நலிந்தவனுக்கு இல்லை; அது வலிமையின் அடையாளம், அரிய பண்பு என்றார்.
என் மத நம்பிக்கையின் முதல் அம்சம் அஹிம்சையே; இறுதி அம்சமும் அஹிம்சையே என்றார். அண்ணல் வழி நடந்தால், அல்லல்கள் நீங்கும்; நன்மைகள் நடக்கும், அமைதியும், மகிழ்வும் உறுதியாகும். புனிதர் காந்தியின் வாக்கு பொய்த்ததில்லை!
சட்டப்படிப்புக்காக லண்டன் சென்றார்; பாரிஸ்டர் பட்டம் பெற்றார். ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை பெற்றார் என்றாலும், இந்து சுயராஜ்யம் என்ற தனது முதல் நூலை ஆங்கிலத்தில் எழுதவில்லை; தன் தாய் மொழியாம் குஜராத்தியில் அல்லவா எழுதினார்; தாய்மொழியில் பேசுங்கள், எழுதுங்கள், பயிலுங்கள் என்று சொன்னவர் பாபுஜி! அண்ணல் அன்று சொன்னதை இன்றாவது செயல்படுத்தினால் என்ன?
அண்ணலின் குடும்பப் பொருளாதாரப் பின்னணிக்கு அழகிய மாளிகையில் அவர் வசித்திருக்கலாம்; ஆனால் அவர் மேற்கொண்டதோ, ஆசிரம வாழ்க்கை! அதன் மூலம் ஆசிரம வாழ்வை அனைவருக்கும் அவர் பரிந்துரைக்கவில்லை!
அதன் மூலம் அவர் கற்பித்த பாடம்; எளிமையாக வாழுங்கள்; அப்போதுதான் ஏழைகள் வாழ்வது எளிதாக இருக்கும் என்றார். இயன்ற அளவு எளிய வாழ்க்கையை நாம் கடைப்பிடித்தால் என்ன?
காலம் தவறாமை; தரையில் அமர்ந்தே உணவருந்துவது; வைஸ்ராயே அழைத்தாலும் மௌன விரதத்தை முறிக்க மாட்டேன் என்ற வைராக்கியம் - இவைதான் எங்கள் இந்தியப் பண்பாடு என்பதில் உறுதியாக இருந்தார்.
காந்திஜி. அண்ணலின் இந்தச் செயல்கள் அடுத்தவருக்கு வினோதமானதாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், அவரது வைராக்கியம்தான் அவரது வெற்றிக்கு வழி வகுத்தது! அண்ணலின் மலையளவு வைராக்கியத்தில் கடுகளவாவது நாம் கடைப்பிடித்தால் என்ன?
அமைதி, பொறுமை, சகிப்புத் தன்மை, தியாகம் - ஆகிய அனைத்து நற்பண்புகளின் திரண்ட உருவே பெண்கள். அனைத்து சமுதாயத்திலும் உணவை முதலில் சமைப்பவள் பெண்; கடைசியாகச் சாப்பிடுவது பெண். ஒரு பெண் பிறருக்காகவே வாழ்கிறார். அது மாற வேண்டும் என்றார் அண்ணல்.
அத்தகைய மாற்றம் புதிய சட்டங்கள் மூலமும், நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலமும் வந்து கொண்டிருக்கின்றன இன்று! அவற்றை வரவேற்று கடைப்பிடிப்பதுதானே காந்திய வழியில் நடை பயில்வது ஆகும்!
உலகளாவிய அளவில் சிந்தியுங்கள்; ஊரளவில் உங்கள் செயல்பாட்டை தொடங்குங்கள் என்றார் அவர். தொழில் வளர்ச்சியை அவர் முற்றிலுமாக எதிர்க்கவில்லை; அதனை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும்.
மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்; மனித சக்தியை இயந்திரம் என்ற சாதனத்தால் நிரப்ப முயற்சிப்பது தோல்வியில் முடியும் என்றார். மனித உழைப்பை அதிகப்படுத்தி இயந்திரப் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையை எடுத்தால் என்ன?
தேசவிடுதலை என்பது காந்திஜிக்கு இரண்டாம்பட்சமாக இருந்திருக்கலாம். சமுதாய மறுமலர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் அவரால் முன்னுரிமை கொடுக்கப்பட்டன.
காந்திஜி கனவு கண்ட சமுதாய மறு மலர்ச்சியை கிராமிய பொருளாதார வளர்ச்சிப்பாதையை நாம் ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம்?
மனித சமுதாயம் கடல் போன்றது. அதில் சில துளிகள் மாசுபட்டிருக்கலாம்; அதற்காக கடல் முழுவதும் அசுத்தமானதாகக் கருத முடியாது. ஆகவே மனித சமுதாயத்தின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது என்றார் மகாத்மா. மனித சமுதாயத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தானே நாம் வாழ்கிறோம்!
மகாத்மா மறைந்து விட்டார். ஆனால் அவரது பேச்சுக்கள் நம் காதுகளில் ஒலிக்கின்றன. அவரது எழுத்துகள் நம் கண்முன் வருகின்றன. அவரது போதனைகள் நம் உள்ளத்தில் பதிந்திருக்கின்றன.
அண்ணல் மறைந்த போது, அண்ணல் மறைந்துவிட்டார்; ஆனால் அந்த ஒளிவிளக்கு அணைந்துவிட்டது எனச் சொல்வது தவறு, அந்த விளக்கு அணையாமல் என்றும் நமக்கு வழிகாட்டும். அவ்வழியில் நடப்போம் நாம் என்றார் பண்டித ஜவாஹர்லால் நேரு.
காந்தியைப் புறக்கணிப்பது நமக்கு இழப்பையே தரும் என்றார் மார்ட்டின் லூதர் கிங்.
மகாத்மா வழி நடப்போம்; மனித சமுதாயத்தை வாழ வைப்போம்!

கட்டுரையாளர்:
காந்திய அறிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.