பன்முகத் தமிழ் விளக்கு
திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாணச் சுந்தரனார் என்ற பெயர் தான் திரு.வி.க. என நிலைத்தது.திருவாரூர் மரபினரின் ஊர், பெரும்புலமை கொண்டிருந்ததோடு


திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாணச் சுந்தரனார் என்ற பெயர் தான் திரு.வி.க. என நிலைத்தது.திருவாரூர் மரபினரின் ஊர், பெரும்புலமை கொண்டிருந்ததோடு, பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், சமய அரசியல் உண்மையைப் பரப்பியவர், செந்தமிழ்ப்பேச்சாளர், பொருள் செறிந்த எழுத்தாளர், இளைஞர்க்கு வழிகாட்டி, தொழிலாளரின் உற்ற நண்பர், உயர்ந்த நிலையிலிருந்தவர் தொடங்கி, ஏழை எளியவர் வரை எல்லோரோடும் இசைந்து இனிது பழகியவர். எல்லோரும் மதிக்கும் எண்ணம் வாழ்ந்தவர்.
படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் நாட்டுப்பற்று மொழிப்பற்றாலும், அரசியல் பொதுத் தொண்டினாலும் பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை இராயப்பேட்டை முனிவர் என்றே அழைத்தனர்.
வெள்ளாடைச் சூழ்ந்த மெல்லிய உடலும், புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும், அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி; சமரச வானம் கண்டு களிக்கும் வானம்பாடி; தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் வானம்பாடியாகத் திகழ்ந்தவர்' என்று திரு.வி.க.வுடன் மிக நெருங்கிப் பழகிய நிலையில் பேராசிரியர் மு.வரதராசன் ஒருமுறை சுட்டிக்காட்டினார்.
"திரு.வி.க. போராட்டவாதி; வர்க்க உணர்ச்சி கொண்டவர்; அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல்மார்க்சின் பக்தர்; இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் - நிகழ்காலம் - வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் பிரதிநிதியாக இருந்தார்' என்று சிலம்புச்செல்வர் திரு.வி.க.வின் கொள்கையைப் போற்றினார்.
முரண்பாடு கொண்ட கொள்கையிலும் உடன்பாட்டு தன்மையைப் போற்றுகின்ற பொதுமைப் பண்பாளர் திரு.வி.க, சமுதாயத்தின் வளர்ச்சித் தத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டதன் காரணமாகப் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே அவர் பாலமாக விளங்கினார் .
திருக்குறள் தெளிவுரை என நூற்றுக்கணக்கான உரைகள் இன்று பெருகியுள்ளதற்குத் திரு.வி.க. எழுதிய திருக்குறள் விளக்கமே அடிப்படையாகும்.
திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதினார். இவர் காலத்தில் அரசியல்வாதிகள், சமயவாதிகள், இலக்கியவாதிகள் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர். சமய வேறுபாடும் அரசியல் பிரிவுகளும் வகுப்புவாதங்களும் மலிந்திருந்த அக்காலத்தில் திரு.வி.க. அனைவருடனும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்வில் பங்கு கொண்டு அமைதித் தொண்டாற்றினார் .
"பெண்ணின் பெருமை'யில் காதல் மணம், விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. "இந்தியாவும் விடுதலையும்' என்ற நூலில் அரசியல் வளர்ச்சியும் சமுதாயச் சீர்திருத்தமும் தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
"மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்' என்ற நூலில் "மனிதன்', "வாழ்க்கை', "காந்தி அடிகள்' என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துகள் இடம் பெற்றன. "முடியா? காதலா? சீர்திருத்தமா?' என்ற நூல் எட்டாம் எட்வர்டு தாம் காதல் கொண்ட மாதின் பொருட்டு அரியாசனத்தைத் துறந்ததை முன்னிலையாகக் கொண்டது; உரிமையின் மாண்பையும், தியாகத்தின் விழுப்பத்தையும் விளக்குவது; கிறிஸ்துவின் சுவிசேஷச் சாரம் தேங்கப்பெறுவது. இதில் கிறிஸ்துவத்தின் நுட்பம் புலனாகும். "உண்மைக் கிறிஸ்துவத்தின் மதிப்பை விளக்கும் ஒரு தனி நூல்' இது என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாதுநபியில், நபிகள் நாயகம் - திருநாவுக்கரசர் - விருஷப தேவர் ஆகிய மூவரையும் ஒருங்கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்த திரு.வி.க.வின் மேடைத்தமிழ், தமிழுக்கு வாய்த்த அணிகலனாகும்.
இந்திய நாட்டின் விடுதலை, சாதிப் பாகுபாடு களைதல், பெண் விடுதலை வலியுறுத்துதல், பொருளாதாரப் பொதுமை வேட்டல், இளைஞர் முன்னேற்றம் போற்றுதல், தொழிலாளர் ஏற்றம் காணுதல், சமயப் பொதுமை நாடுதல் இவ்வாறு சமுதாயத்தில் ஏழு துறைகளிலும் தம் சீர்திருத்த முத்திரைகளைப் பதித்த பெருமை திரு.வி.க.வைச் சாரும்.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் பல்கலைக் களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி அந்த வரலாற்று நூலில் எழுதியுள்ளார். திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும், தமிழகத்தினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.
நடையில் எளிமை, உடையில் எளிமை, வாழ்வில் எளிமை, அரசியலில் வாய்மை, நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை, அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாக, இறைமையாகப் போற்றிப் பாராட்டிய பண்பு - இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் திரு.வி.க. வின் வடிவமாகத் திகழும்.
நாகரிகப் பண்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படை வகுத்தவர்கள், கிரேக்க நாட்டு மக்கள் என்பர். கிரேக்க நாட்டு மக்கள் உண்மை, நன்மை, அழகு என்னும் மூன்றையும் மிகச் சிறந்த பண்புகளாகப் போற்றினர். உண்மையை, நன்மையை, அழகை "முருகன்' என்னும் சொல்லுக்குப் பொருளாகக் காட்டினார்.
பன்முகத் தமிழ் விளக்காய் மிளிர்ந்த திரு.வி.க.வின் பிறந்த நாளன்று (ஆக. 26) திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் வட்டத்தில் உள்ள அவர் பிறந்த ஊரான துண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராசன் 13.06.2018 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி குறுகிய காலத்தில் செயல் வடிவம் பெறுவது தமிழ்த் தென்றலின் மகத்துவம் எனலாம்.
கட்டுரையாளர்:
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...