டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இன்று கேப்டவுன். நாளை?

நகர நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் தண்ணீரை சட்ட விரோதமாக வாகனங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற ரகசியத் தகவல் கிடைக்கிறது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தைச் சேர்ந்த '

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

எஸ். ராஜாராம்

நகர நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் தண்ணீரை சட்ட விரோதமாக வாகனங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற ரகசியத் தகவல் கிடைக்கிறது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தைச் சேர்ந்த 'தண்ணீர் போலீஸாருக்கு'. உடனடியாக தண்ணீர் போலீஸார் 'சம்பவ' இடத்துக்குச் சென்று, குற்றச் செயலை உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்; எனது பக்கத்து வீட்டுக்காரர் இன்று 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்திவிட்டார்; எதிர்வீட்டுக்காரர் தோட்டத்துச் செடிகளுக்கு நகராட்சித் தண்ணீரைப் பயன்படுத்துகிறார் என தண்ணீர் போலீஸாருக்கு வருகின்றன அடுக்கடுக்கான புகார்கள். அனைத்துப் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க விரைந்துகொண்டே இருக்கிறார்கள் தண்ணீர் போலீஸார் - இது அறிவியல் புனைகதையிலோ அல்லது ஹாலிவுட் திரைப்படத்திலோ இடம்பெறும் சம்பவம் என நினைக்க வேண்டாம். கேப்டவுன் நகரில் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
தண்ணீரைக் கொண்டு வாகனத்தைக் கழுவுவது எல்லாம் ஒரு குற்றமா எனக் கேட்கலாம். கேப்டவுனில் 'டே ஜீரோ' எச்சரிக்கைக்குப் பின்னர் அது குற்றம்தான். அது என்ன 'டே ஜீரோ'? அந்த நகரத்தில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வற்றிப் போகும் தினமே டே ஜீரோ. அதன் பிறகு அரசே ஏற்பாடு செய்து தரும் பொதுக் குடிநீர் சேகரிப்பு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வரிசையில் நின்று, ஒவ்வொருவரும் தங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீரை மட்டும் பெற்றுச் செல்ல வேண்டும். அப்படி ஒரு தினத்தை கேப்டவுன் நகரம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவுக்குப் பெய்துள்ள மழையின் கருணையால் அந்த தினம் இப்போது 2019-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதிலும் நகரமயமாக்கல் காரணமாக மக்கள்தொகை பெருகி, பெருநகரங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. இந்த நிலைக்கு வறட்சி, சரியான திட்டமிடல் இன்மை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அப்படி ஒரு நிலையைத்தான் இன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் சந்தித்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் 2-ஆவது பெரிய நகரமான கேப்டவுனில் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எல்-நினோ பாதிப்பால் அந்நாடு முழுவதுமே பாதிக்கப்பட்டாலும், கேப்டவுன் மிக அதிக பாதிப்புக்குள்ளாகியது. கடந்த 3 ஆண்டுகளாக சரியான மழையின்மை, நீர் மேலாண்மையை சரியாகக் கையாளாதது உள்ளிட்ட காரணங்களால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகள் வறண்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பிரச்னையின் தீவிரத்தை மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டு கடைசி நேரத்தில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நகரவாசிகள் தினமும் நகர நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் தண்ணீரில் தலா 50 லிட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகர நிர்வாகம் வழங்கும் தண்ணீரில் கார் கழுவுதல் உள்ளிட்ட சில செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்கத்தான் காவல் துறையில் 'தண்ணீர் போலீஸ்' என்கிற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்காவது விதிமீறல்கள் நடந்தால் இந்த தண்ணீர் போலீஸார் விரைந்து சென்று, குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தி அபராதம் விதிப்பர்.
தலைக்கு மேல் வெள்ளம் (!) போய்விட்ட பிறகுதான் கேப்டவுன் மக்கள் தண்ணீரை 'எண்ணி எண்ணி' செலவு செய்யத் தொடங்கியுள்ளனர். மக்களின் மொத்த தண்ணீர் நுகர்வு கடந்த ஆண்டு 110 கோடி லிட்டராக இருந்தது. நிகழாண்டு 58 கோடி லிட்டராக குறைந்துள்ளது. மேலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள், மழையின் கருணை காரணமாக, டே ஜீரோவை கேப்டவுன் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளது. இருப்பினும், இந்த தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு, பல்வேறு தொழில்கள் முடக்கம், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது என கேப்டவுன் மட்டுமன்றி, நாடு முழுவதுமே பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்த 'டே ஜீரோ' நிகழ்வானது கேப்டவுன் நகரத்துக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகத்தான் கருத வேண்டும். உலகம் முழுவதும் தற்போது 360 கோடி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காத இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2050-க்குள் 570 கோடியாக உயரும் என ஐ.நா.வின் நிகழாண்டுக்கான தண்ணீர் மேம்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் (சீனா), மெக்ஸிகோ சிட்டி (மெக்ஸிகோ), சனா (யேமன்), நைரோபி (கென்யா), இஸ்தான்புல் (துருக்கி), சாவ்பவுலோ (பிரேசில்), கராச்சி (பாகிஸ்தான்), பியூனஸ் அயர்ஸ் (ஆர்ஜென்டீனா), காபூல் (ஆப்கானிஸ்தான்) ஆகிய நகரங்கள் கேப்டவுனை போன்ற நிலையை விரைவில் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறது.
இந்த வரிசையில், இந்தியாவின் புதுதில்லி, பெங்களூரு, புணே போன்ற நகரங்களும் உள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சார்பில் வெளியிடப்படும் 'டவுண் டு எர்த்' என்கிற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கம், நகரமயமாதல் அதிகரிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்பின்மை என மழை குறைந்து தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உலகமே தண்ணீரைத் தேடி அலையும் சூழலை கண்கூடாகக் காண்கிறோம். இருப்பினும், தண்ணீரின் மதிப்பை மக்களும், அரசுகளும் முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. விழித்துக்கொள்ளக் கூடிய நேரம் இது. இல்லாவிட்டால் இன்று கேப்டவுன், நாளை நம் ஊராகக் கூட இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.