நம்பிக்கைதான் விருது
ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்று கூறிய காலம் ஒன்று இருந்தது.


ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்று கூறிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது வரும் செய்திகளைப் பார்த்தால் ஆசிரியர் பணி என்பது வேலைப்பளு குறைந்த, ரிஸ்க் இல்லாத, அதிக நாள்கள் விடுமுறை உள்ள, ஊதியம் கொட்டும் தொழிலாக மாறிவிட்டது.
கடந்த காலங்களில் ஆசிரியர்கள் என்றாலே தனி மரியாதைதான். ஆசிரியர் ஒரு சொல் கூறினால் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு மறு பேச்சு பேசாமல் காரியங்களைச் செய்யுமளவுக்கு மரியாதை இருந்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் மிகச் சிறந்த முன்மாதிரியாக காட்சியளித்தனர்.
அதனால்தான் ஆசிரியர் ஒருவரை முதன் முதலாக இந்த நாடு குடியரசுத் தலைவராகப் பெற்று அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடுகிறது.
மறைந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒருமுறை மதுரைக்கு வந்திருந்தார். தனக்குக் கல்லூரியில் பாடம் கற்றுத் தந்த ஆசிரியர் ஒருவர் திண்டுக்கல்லில் இருப்பதை அறிந்து அவரைப் பார்க்க விழைந்தார். பாதுகாப்புக் காரணம் கருதி சம்பந்தப்பட்ட ஆசிரியரை மதுரைக்கு அழைத்து வரலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் தனக்குப் பாடம் கற்றுத் தந்த குரு, தன்னை வந்து சந்திப்பது சரியல்ல. தான் அவரைத் தேடிச் சென்று சந்திப்பதுதான் முறை என்று தெரிவித்த அப்துல் கலாம் திண்டுக்கல் சென்று அந்த ஆசிரியரைச் சந்தித்தார். இதுதான் ஆசிரியர்களுக்கான மிகப் பெரிய அங்கீகாரம்.
குடியரசுத் தலைவரைச் சந்திக்க பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் எனப் பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் அந்தக் குடியரசுத் தலைவரே ஆசிரியர் ஒருவரைச் சென்று பார்த்ததுதான் வரலாறு.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்றால் ஆசிரியர் பணியின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
முன்பெல்லாம் கிராமங்களில் உள்ளாட்சி நிர்வாகங்களின் கீழ் பள்ளிகள் இருந்தபோது ஆசிரியர்கள் மிகச் சரியான நேரத்துக்கு வந்து சென்றனர். உள்ளாட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பில் பள்ளிகள் இருந்தபோது ஆசிரியர்களுக்கு ஊதியம் மிகக் குறைவென்றாலும் ஒரு திருப்தி இருந்தது.
ஆனால் இப்போது ஆசிரியர்களின் மீது பாலியல் உள்ளிட்ட புகார்கள் அதிக அளவில் வருகின்றன. ஆசிரியர்களில் ஒரு சாரார் பள்ளிக்கே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதுவும் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆசிரியர் பணிக்கு வரும்போது எந்தப் பகுதிக்கு வேண்டுமானால் வருவதாகச் சொல்லுபவர்கள் பணியில் சேர்ந்த சில மாதங்களில் தங்கள்பகுதிக்கு பணி மாறுதலில் செல்வதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படித் தரமான கற்பித்தலை எதிர்பார்க்க முடியும்?
நல்லாசிரியர்களுக்கான விருதுகளை எப்படியாவது வாங்கத் துடிக்கும் ஆசிரியர்களும் அதற்கேற்றாற்போல செலவு செய்து விருது பெற முயல்கின்றனர். ஆனால் அதனால் என்ன பயன்?
இப்போதும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் பலர் தங்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு பாடத்திட்டத்துக்கு அப்பாலும் கற்றுக் கொடுத்து உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்குகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் மேல்படிப்புக்காக மாணவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவவும் செய்கின்றனர். இது போன்ற ஆசிரியர்களுக்குத்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும்.
இப்போதைய அவசர உலகத்தில் அதுவும் நகரப் பகுதிகளில் உள்ள ஆசிரியர், மாணவர் உறவு என்பது வியாபாரம் போலாகிவிடுகிறது. அதனால் ஆசிரியரை நேருக்கு நேராகப் பார்த்தால் கூடக் கண்டுகொள்ளாமல் நடந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.
இப்போதும் பல ஆசிரியர்கள் தங்களை மெழுகுவத்தி போல உருக்கிக் கொண்டு மாணவர்களுக்கு ஒளி தந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அத்தகைய ஆசிரியர்கள் பலருக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த விருதையும் வழங்கிக் கெளரவித்தது கிடையாது.
அதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஏங்கியதுமில்லை, வருத்தப்பட்டதுமில்லை. அவர்கள் என்றுமே மாணவர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர்கள் பலர் இன்றும் டியூஷன் வகுப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
இப்போதும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்கள் மிக அதிக அளவில் உள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை நகர்ப்புறத்தை விடக் கிராமப்புறங்களில் மிகவும் அதிகம்.
அந்த நம்பிக்கைதான் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய விருது. சில ஆண்டுகளுக்கு முன் மேட்டூரில் தங்கள் ஆசிரியருக்கு ஓய்வு பெற்ற மாணவர்கள் சேர்ந்து வீடு கட்டித் தந்தது, அந்த ஆசிரியர் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்தியது.
இப்போதும் இது போன்ற பல ஆசிரியர்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றுள்ள கிராமப்புற மாணவருக்கு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். படிப்புகள் குறித்து ஆசிரியர்கள் சொல்லித்தான் தெரியும். ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தைத் தாண்டி வாழ்க்கையின் புரிதல்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது உண்மை.
அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...