/

அவசரம் எதற்காக?

வேளாண் தொழிலை மாநில அரசின் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றுவதற்கான சட்டத்தை

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:58 pm

ப. இசக்கி

வேளாண் தொழிலை மாநில அரசின் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்றுவதற்கான சட்டத்தை இயற்ற இதுவே தருணம்' என நிதி அயோக்கின் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டை மீண்டும் ஒரு கொதிநிலைக்கு கொண்டு செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த செய்தி வெளியான உடனேயே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் "அது கூடவே கூடாது, அப்படி மாற்றினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்' என்று கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்படி கடும் எதிர்ப்பு கிளம்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காவிரி வடிநிலப் பகுதியில் பூமிக்கடியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதற்கு தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் நாடு அறிந்தவை. பருவ மழை குறைவும், காவிரியில் வறட்சியும் வடிநிலப் பகுதி விவசாயத்தை சாகடித்துள்ளது. 
இந்த நிலையில், நிலத்தடியிலிருந்து கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு பயிர் வளர்த்து உயிர் வாழ்கின்றனர் விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நிலத்தடி நீர்வளம் வறண்டுபோகும் என்பதால் அதை விவசாயிகள் எதிர்க்கின்றனர். 
இப்போது, வேளாண் தொழிலை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றிவிட்டால் அதிகாரம் அவர்கள் கைக்கு சென்றுவிடும். 
விவசாயிகளின் எதிர்ப்பை அடக்கி விளைநிலங்களை பறித்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிவிடும் என்ற அச்சமே இந்த கொதிநிலைக்கு முக்கிய காரணம்.
வேளாண் தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. 1991-இல் புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தபட்ட பிறகு மற்ற தொழில்களின் மேம்பாட்டுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை. 
மானியங்கள் மற்றும் கடன்கள் அளிக்கப்பட்டாலும் அவை சீராக எல்லா விவசாயிகளையும் சென்டையவில்லை. அத்தகைய பாதிப்புகளின் உச்சகட்டம்தான் விவசாயிகள் தற்கொலை. வறட்சியைவிட கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டோர் அதிகம். 
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2013-இல் 11,772 பேரும், 2014-இல் 12,360 பேரும், 2015-இல் 12,602 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
இவர்களில் அதிகமானவர்கள் மகராஷ்டிரம், ஆந்திரம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலத்தவர்கள். தமிழ்நாட்டில் 2016-17 நிதியாண்டில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
ஆனால் அந்த எண்ணிக்கை 500-ஐ தாண்டும் என்பது விவசாயிகள் சங்கங்களின் கருத்து.
விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கவும், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பிற தொழில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேளாண் தொழிலுக்கும் அளிக்கப்பட வேண்டும். 
விவசாயிகளின் விளைபொருள்களை தொழில் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்யவும், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யவும், நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையிலான வேளாண்மை செய்யவும் வழிவகை காணப்பட வேண்டும். 
வங்கி உள்ளிட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து எளிதாக கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழிலில் பன்னாட்டு மூலதனம் ஏராளமாக வர வாய்ப்பு இருப்பதால் உற்பத்தியை பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறவும் ஏற்ற திட்டங்கள் அவசியம். 
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் விளையும் பொருள்களை அதேமாநிலத்தில் விற்பனை செய்த காலம் இனிமேல் இருக்காது. 
விளைபொருள்கள் சந்தைக்காக மாநிலம்விட்டு மாநிலம் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு வேளாண்மையை மாநில அரசின் பட்டியலிலிருந்து மத்திய அரசின் பட்டியலுகோ அல்லது பொதுப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டியது அவசியம் என்பதுதான் நிதிஅயோக்கின் கருத்து.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வேளாண்மை மாநில அரசின் பட்டியலில்தான் உள்ளது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. 
விவசாயிகள் பிரச்னை என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயம். எனவே, அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவுகாண மத்திய, மாநில அரசுகள் எப்போதும் சுணக்கம்காட்டி வந்ததாலேயே இப்போது தற்கொலை கொடூரங்கள் நிகழ்ந்து வருகின்றன. செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் விவசாயிகள். 
இனிமேலும், காலம் தாழ்த்த முடியாது. எனவே, வேளாண்மை துறையை சீரமைத்து மேம்படுத்த வேண்டியது அவசியமானது மட்டுமல்ல அவசரமானதுகூட. அந்த வகையில் நிதி அயோக் உறுப்பினரது கருத்து உருப்பெறும்போதுதான் அதன் முழு பரிமாணமும் தெரிய வரும். அதில் பாதிப்புகள் இருந்தால் எதிர்ப்பதில் தவறில்லை. 
அதற்குள்ளாக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. 
விவசாயிகளின் பிரச்னையை மாநில அரசால் தீர்க்க முடியவில்லை என்றுதான் தமிழக விவசாயிகள் 100 நாள்கள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தினர். 
எனவே, அன்றாடம் வயலில் இறங்கி வேலை செய்யும் சாதாரண விவசாயி
களுக்கு எது நன்மை பயக்குமோ அதை மத்திய, மாநில அரசுகள் செய்து முடிக்க வேண்டியது அவசியம். 
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்ற நிலையை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒதுக்கிவைக்க வேண்டும். ஆக்கபூர்வமாக செயல்படுவதே தற்கொலைகளை தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.