சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அவர்களுக்கொரு நியாயம்; நமக்கொரு நியாயம்!

இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. வங்கிகள் இனி மக்களுக்காகவே இயங்கும் என்று கூறப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

உதயை மு. வீரையன்

இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. வங்கிகள் இனி மக்களுக்காகவே இயங்கும் என்று கூறப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதனைத் துணிவுடன் செயல்படுத்தி மக்களிடம் செல்வாக்குமிக்க தலைவர் ஆனார்.
ஏழை, நடுத்தர மக்கள் வங்கிகளின் பக்கம் செல்லத் தொடங்கினர். அரசியல்வாதிகள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். பொதுமக்கள் சிறு தொழில் கடன்களுக்காக அலையாக அலைந்தனர். அதிலும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் பயன் பெற்றனர்.
ஆனால் பெருந்தொழிலதிபர்கள் வங்கிகளைத் தம் உடைமையாகவே எண்ணிப் பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்றனர். இவர்களுக்கு வங்கி அதிகாரிகளும் துணை போயினர். இவர்களின் பெரும்பாலானவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவே யில்லை. இதுவே வாராக் கடன் என்று அழைக்கப்படலாயிற்று.
சிறு தொழில் புரிவோரையும், விவசாயிகளையும் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தி கடன் தொகையை வசூல் செய்யும் வங்கி அதிகாரிகள் தொழிலதிபர்களையும், செல்வந்தர்களையும் கண்டு கொள்வதே இல்லை.
அரசியல் செல்வாக்கும், சமுதாயச் செல்வாக்கும் பெற்ற அவர்கள் வாங்கிய
கடனைத் தட்டிக் கேட்க முடியாமல் வங்கி அதிகாரிகள் தயங்கிக் கொண்டே
யிருக்கின்றனர். அவர்களின் பெயர்களைக் கூறவும் சட்டத்தில் இடமில்லை என்று கூறினர்.
இதன் காரணமாக தொடர்புடைய வங்கிகளின் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் அவற்றின் நிதிநிலையிலும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி வாராக் கடன்களை வசூலிக்குமாறு தொடர்புடைய வங்கிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திட ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அதில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அவசரச் சட்டம் வகுக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மே 4 அன்று ஒப்புதல் அளித்துவிட்டார் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்தின்படி வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்குப் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஒருவர் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லையென்றால் அவருக்கு எதிராக திவால் நடவடிக்கைகளை எடுக்குமாறு 2016 திவால் சட்டத்தின் கீழ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்க முடியும்.
மத்திய அரசிடம் உள்ள தகவலின்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி வாராக்கடன் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வளவு பெரிய கடனை வசூலிக்க இந்த அவசரச் சட்டம் போதுமா? அதே அதிகாரிகள், அதே சட்டத்தால் எதுவும் செய்யாதவர்கள் இந்த அவசரச் சட்டத்தால் வாராக்கடன்களை மீட்டெடுத்து விடுவார்களா?
1949-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் 35 ஏஏ மற்றும் 35 ஏபி என்னும் இரு புதிய பிரிவுகள் இந்த அவசரச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
35 ஏஏ பிரிவானது மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதலை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது. இழப்பின் காரணமாக மூடிய ஆலைகளின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுப்பதற்கும், திவால் நடவடிக்கைகளைத் தொடரவும் வழி வகுக்கிறது.
35 ஏபி பிரிவின்படி, வாராக்கடன் சார்ந்த சொத்துகளை விற்பதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும். இதற்குத் தேவையான குழுக்களை அமைப்பது, வங்கிகள் மற்றும் தொழில் துறையினருக்கான ஆலோசனைகளை அளிப்பதற்கான குழுக்களை அளிப்பது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
வாராக்கடனைச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்திட வங்கிகள் காலம் தாழ்த்தக் கூடாது என்றும், காலம் தாழ்த்துவதை அரசும், ரிசர்வ் வங்கியும் இனியும் அனுமதிக்காது என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வங்கிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வழங்கப்பட்ட கடன்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உதவும். ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் அன்றாட அலுவல் பணியில் இதற்கெல்லாம் நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை.
வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை முந்தைய காங்கிரஸ் ஆட்சிகாலம் முதலே தொடங்கி விட்டது. இந்தப் பிரச்னையை சமாளிக்க முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த அவசரச் சட்ட விதிகளும் அமைந்துள்ளன.
திவால் மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் புரட்சிகரமான மசோதா என அப்போது பாராட்டப்பட்டது. ஆனால் ஓர் ஆண்டாகியும் இது இன்னமும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
கடனைத் திரும்பச் செலுத்துவதற்குப் போதிய வசதியிருந்தும் கடனைச் செலுத்தாத நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அவசரச் சட்டத்தில் அதற்கான வழிவகை ஏதும் காணப்படவில்லை. இது வாராக்கடன் வசூலில் மிகப் பெரிய தேக்க நிலையை உருவாக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் 17 விழுக்காடாகவும், தனியார் வங்கிகளில் இது 7 விழுக்காடாகவும் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் 6 விழுக்காடு அளவுக்கே உள்ளது.
வாராக்கடன் அதிகரிக்கக் காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த அவசரச் சட்டம் ஆராயவில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் கூறப்படவில்லை என்பதும் அவர்களது குறைபாடு. அடிப்படைத் தீர்வுகளைக் கண்டறியாமல் இந்த அவசரச் சட்டம் அமைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தியா வளர்ச்சியை நோக்கியே போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி போகும் இடமெல்லாம் கூறிவருகிறார். அதைத்தான் குடிமக்களும் விரும்புகின்றனர். அது கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையாக இருக்க வேண்டுமே?
வளர்ச்சி என்பது ஒரு சிலரின் முன்னேற்றமாக இருந்துவிடக் கூடாது. இந்தியத் தொழிலதிபர்கள் சிலர் உலகப் பணக்காரர்களாக மாறி விடுவதால் வளர்ச்சி வந்துவிட்டது எனக் கூறமுடியாது. வறுமைக் கேட்டுக்குக் கீழே இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்ததாக பிரதமர் கூறினார். ஆனால் இதுவரைக் கிடைத்த கருப்புப் பணம் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
வாராக்கடன் பிரச்னைக்கு புதிய அவசரச் சட்டம் தீர்வாக அமையும் என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டப் பிரிவு மூலம் எந்த அளவுக்கு வாராக்கடன் அளவைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும், வாராக்கடனை வசூலிக்க இது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை கூறப்பட்டதெல்லாம் பெரும் தொழிலதிபர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட கடன் தொகை பல காலமாக முடங்கிக் கிடப்பதை மீட்டு எடுப்பதற்கான வழிமுறையாகும். ஆனால் சிறு வணிகர்களுக்கும், சிறு - குறு விவசாயிகளுக்கும் கடன் கொடுப்பதும், வசூல் செய்வதும் முறையே வேறு.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் தொகை உடனுக்குடன் வசூல் செய்ய ஜப்தி முறையை பின்பற்றுகின்றனர். ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து பாத்திர பண்டங்கள் முதல் ஆடு மாடுகள், டிராக்டர்கள் வரை பறிமுதல் செய்கின்றனர்.
மானம் மரியாதைக்கு அஞ்சும் ஏழைகள் வேறு வழி தெரியாமல் தற்கொலையை நாடுகின்றனர். இதிலிருந்து மீளுவதற்காகவே அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாய சங்கங்கள் முன்வைக்கின்றன.
இதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுவது என்ன தெரியுமா?
"விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது அவர்களை ஒழுங்கீனமாக நடந்து கொள்ள வழி செய்யும். மேலும் வரி கொடுத்த மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். அது பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கும்' என்றார்.
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவரின் பொறுப்பற்ற பேச்சு இது. தொழிலதிபர்களுக்குப் பணத்தை வாரி இறைத்த போதும், அவற்றைத் தள்ளுபடி செய்த போதும் இவர் எங்கே போயிருந்தார்? ஏன் இந்த உபதேசங்களை அவர்களுக்குக் கூறவில்லை?
மத்திய அரசு நியமித்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி, விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவை விட 50 விழுக்காடு கூடுதலாக விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
அப்படி ஒரு விலை நிர்ணயத்தை அரசு செய்திருக்குமானால் விவசாயிகளுக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. தமிழ்நாடு முதல் தலைநகர் தில்லி வரை போராட வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.