/

பள்ளிகளின் பண வேட்டை

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் இப்போது பள்ளி இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது புதுமொழியாகிவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:28 pm

ஆர். வேல்முருகன்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் இப்போது பள்ளி இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது புதுமொழியாகிவிட்டது. பெயர் பெற்ற பள்ளியாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பிரி கேஜிக்கே பல ஆயிரங்களைக் கொட்ட வேண்டியிருக்கிறது.
காலை 9 மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் மதியம் வரை (அதிலும் அக்குழந்தைகள் சுமார் ஒரு மணி நேரமாவது தூங்கும்) மட்டுமே செயல்படும் குழந்தைகளுக்குக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவர்களுக்கு கோடை காலத்தில் இரு மாதங்கள் விடுமுறை என்றாலும் அதற்கும் சேர்த்துக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். தங்கள் குழந்தைகள் டாடி, மம்மி என்று பேசுவதைக் கேட்கப் பெற்றோர்கள் கொடுக்கும் விலைதான் இது.
பிளஸ் 2 வரையுள்ள பெரும்பாலான பள்ளிகளில் பலசரக்குக் கடைகளைப் போல பேனா, பென்சில், ஸ்கேல், ஜாமண்ட்ரி பெட்டி, புத்தகங்கள், நோட்டுகள், ஷூ, சாக்ஸ், சீருடைகள் என அனைத்துமே விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வோராண்டும் மாணவர்கள் அனைத்துப் பொருள்களையும் பள்ளிகளில் மட்டும் வாங்கியாக வேண்டும். இதற்கு முறையாக ரசீது கொடுக்கப்படுவது கிடையாது. துண்டுச் சீட்டுதான். சுமார் 500 பேர் படிக்கும் பள்ளியில் ஆண்டுக்கொரு முறை மேற்கண்ட பொருட்களின் விற்பனைத் தொகை பல லட்சத்தைத் தொடும்.
இவற்றை எல்லாம் வெளியிடங்களில் வாங்கினால் பாதிக்குப் பாதிதான் ஆகும். ஆனால் பெற்றோர் யாரும் இது தொடர்பாகக் கேள்வி கேட்க முடியாது. மீறிக் கேட்டால் உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர நாங்களா அழைத்தோம் என்பார்கள்.
சில மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டால் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளரோ அல்லது தலைவரோ, செயலரோ பேச மாட்டார்கள். அங்குள்ள தலைமை ஆசிரியரை பேச வைத்துவிடுவார்கள். மீறிக் கேட்டால் கட்டணத்தை முழுமையாகச் செலுத்திவிட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.
ஆண்டுக்கொரு முறை நடக்கும் ஆண்டு விழாவுக்கும் மாணவர்களிடம்தான் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாநில, தேசிய போட்டிகளுக்குச் செல்லும் மாணவர்களால் பள்ளிக்குத்தான் பெருமை.
ஆனால் இதற்காக பள்ளியில் இருந்து செலவு செய்வதில்லை. பெற்றோர்களிடம் சொல்லி அவர்களின் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிடுகின்றனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகச் செலவு செய்து அழைத்துச் செல்கின்றனர். மாணவர்கள் வென்று வந்தால் பெயர் பள்ளிக்கு, செலவு மாணவரின் பெற்றோருக்கு.
சில பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2-வில் கட்டணம் கிடையாது என்பார்கள்.
பிளஸ் 2 பாடத்தில் குறிப்பிட்ட சதவீதம் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும். ஆனால் அந்த குறிப்பிட்ட சதவீதம் என்பது நன்கு படிக்கக்கூடிய மாணவனாலும் எளிதில் பெற முடியாததாக இருக்கும்.
காலை எழுந்ததும் படிப்பு, பின் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்பதெல்லாம் பாடல் வரிகளில் மட்டுமே. காலை எழுந்ததும் படிப்பு, பின் படிப்பு, படிப்பு, படிப்பு, மாலை மட்டுமில்லாமல் இரவு முழுவதும் படிப்பு, படிப்பு என்பதுதான் தனியார் பள்ளிகளின் தாரக மந்திரமாகிவிட்டது.
ஒரு சில பள்ளிகளில் பகலில் வகுப்பறை, இரவு நேரத்தில் ஹாஸ்டல் அறையாகிவிடுகின்றது. ஆனால் ஹாஸ்டலுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆண்டுத் தொடக்கத்திலேயே கட்டணம் வசூலிக்கின்ற பள்ளிகள். இந்தத் தொகை கல்லூரிகளின் ஹாஸ்டல் செலவை விட அதிகரிக்கும் அது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை எந்த வகுப்பாக இருந்தாலும்.
இது தொடர்பாகக் கேட்டால் இல்லாவிட்டால் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் செல்லுமாறு கட்டாயப்படுத்துவார்கள் பள்ளி நிர்வாகத்தினர். ஹாஸ்டலில் தங்கினாலும் குறைந்த மதிப்பெண் பெற்றால் தனித் தேர்வராகத் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுத் தேர்வு எழுதும் சமயத்தில் மாணவ, மாணவியருக்குக் குடிநீர் பாட்டில்களைத் தருவதற்கென்று கட்டணம் வசூலிக்கின்றனர்.
தேர்வு சமயத்தில் குடிநீர் தேவைப்பட்டாலும் சரி தேவையில்லையென்றாலும் சரி அதற்குரிய கட்டணத்தைக் கட்டினால்தான் தேர்வெழுத முடியும் என்று கண்டிப்பாகச் சில பள்ளி நிர்வாகங்கள் சொல்வதால் பாதிப்புக்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை அவர்களுக்குச் செலவிடும் பெற்றோரும்தான்.
ஒரு சில பள்ளிகள் வானளாவிய கட்டடங்களைக் கட்டினாலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான கழிப்பறை வசதிகளைச் செய்து தருவதில்லை. இதனால் மாடியிலிருந்து கழிப்பறைக்காக தரைத் தளத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
வசூலில் மட்டும் குறியாக இருக்கும் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் நலன் குறித்து எவ்விதக் கவலையும் கொள்வதில்லை. இதனால் பாதிக்கப்படப்போவது குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்காலச் சமுதாயமே. அரசு இத்தகைய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.