நூலகமும் மாணவரும்
கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக உள்ளன. புத்தகம் படிக்கும் பழக்கம் நமது அறிவை விசாலமாக்குகிறது.


கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாசாரம் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக உள்ளன. புத்தகம் படிக்கும் பழக்கம் நமது அறிவை விசாலமாக்குகிறது.
மனிதனை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. மனிதனை அறிவுலகத்திற்கு இழுத்துச் செல்வது புத்தகங்களே. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள்.
"வால்கா முதல் கங்கை வரை வாசித்தேன், அது என் வாழ்வின் பாதையையே மாற்றிவிட்டது' என்றார் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.
"நல்ல புத்தகங்களைத் தேடி படிக்காத ஒருவன், படிக்கவே தெரியாத ஒருவனைவிட உயர்ந்தவனல்லன்' என்றார் ஜவாஹர்லால் நேரு.
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என்று காந்தியடிகளிடம் கேட்டபோது, "ஒரு நூலகம் கட்டுவேன்' என்று பதிலளித்தார்.
இன்று மாணவர்களிடையே நூலகப் பயன்பாடு குறைந்து வருகிறது.
தற்பொழுது எல்லாப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளன. எல்லாப் பள்ளிகளுக்கும் ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப்பட்ட கம்பிகளில், அந்நூல்கள் மாட்டி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அந்தப் புத்தகங்களை எடுத்துப் படித்துவிட்டு, அதே இடத்தில் மாட்டி வைக்கின்றனர்.
இதனால், தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு பல புத்தகங்களையும் படிக்க முடிகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் நூலகங்கள் இருக்கின்றன. அந்நூலகங்களில் நூற்றுக்கணக்கான நூல்களும் உள்ளன. ஆனால், அந்நூல்களை மாணவர்கள் எடுத்துப் படிக்கவும், வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் முடியாத நிலைதான் இன்று பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது.
முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் சிறப்புக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நூலகக் கட்டணமாக வசூல் செய்யப்படும். அத்தொகையைக் கொண்டு பள்ளி நூலகத்திற்குத் தேவையான நூல்கள் வாங்கப்பட்டன. ஆனால், இன்று அப்படிப்பட்ட நிலைமை இல்லை.
மத்திய அரசு, மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளி நூலகங்களுக்குத் தாராளமாக நிதி வழங்குகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு நூல்கள் மற்றும் பத்திரிகைகள் வாங்க ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது. இதனால், பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இளமையில் கல் என்று கூறுவதற் கேற்ப இளமையில் நூலகத்தைப் பயன்படுத்த மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது.
அந்த நோக்கம் நிறைவேறும் நிலையில் இன்றைய பள்ளிகள் உள்ளனவா என்பதுதான் கேள்வி. பள்ளி நூலகத்தை முறையாகத் திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வைக்க, தனியாக ஒரு நூலகர் எந்தப் பள்ளியிலும் இல்லை.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுள் ஒருவர்தான் அந்நூலகத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே, ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை அதிகம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை நடத்தி முடிப்பதே அவர்களுக்குப் பெரும்பணியாக உள்ளது. அப்படியிருக்கும் போது ஆசிரியர்களே மாணவர்களுக்கு நூல்களை வழங்கி, அவற்றைத் திரும்பப் பெறுவதும், நூலகத்திற்கான பதிவேடுகளைப் பராமரிப்பதும் இயலாத ஒன்றாகும்.
அத்துடன், நூலகத்தில் உள்ள நூல்கள் காணாமல் போனால் அந்த ஆசிரியர்தான் பொறுப்பு. கூடுதலாக வேலை செய்வதோடு, நூல் இழப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் இன்று பள்ளி நூலகத்திற்கென்று தனி அறை எதுவும் இல்லை. தலைமையாசிரியர் அறையிலோ, அலுவலகத்திலோ அல்லது ஆசிரியர் ஓய்வு அறையிலோதான் பள்ளி நூலகங்களுக்கான நூல்கள் பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து படித்த நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால்,
அந்நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது.
நபார்டு திட்டத்திலும், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் ஏராளமான வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் இல்லாமல் பூட்டிக்கிடக்கும் வகுப்பறைகளைப் பெரும்
பாலான பள்ளிகளில் பார்க்க முடிகிறது.
அப்படிப் பூட்டிக்கிடக்கும் வகுப்பறைகளை நூலகங்களாக மாற்றி அதில் ஒரு வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரலாம்.
அத்துடன், ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் நூலக அறிவியல் படித்த நூலகர் ஒருவர் நியமிக்கப்பட்டால் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க முடியும்.
அத்துடன், வாரத்திற்கு ஒரு பாடவேளை நூலகம் என்று அறிவித்து மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தப் பயிற்சி வழங்கலாம்.
உடற்பயிற்சிக் கல்விக்குத் தனியாக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படும்போது, அறிவுப்பயிற்சிக் கல்விக்குத் தனியாக ஒரு நூலகர் நியமிக்கப்படுவதில் தவறேதும் இல்லை.
மாணவர்களை அறிஞர்களாக ஆக்குவதில் வகுப்பறைக்கு இணையானது நூலகம். அந்நூலகத்தை இளமைப் பருவத்திலேயே முறையாகப் பயன் படுத்துபவர்கள்தான் அறிஞர்களாகிறார்கள்.
மாணவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக பொருட்களை வாங்கிக் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்த்து, நல்ல புத்தகங்களை வாங்கிக்கொடுக்க முன்வர
வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...