சாதிக்கப் பிறந்தவர்கள்
பொதுவாக இப்போதுள்ள மாணவர்கள் எதையும் தாங்கும் இதயம் இல்லாதவர்களாக வளர்க்கப்படுகின்றனர்.


பொதுவாக இப்போதுள்ள மாணவர்கள் எதையும் தாங்கும் இதயம் இல்லாதவர்களாக வளர்க்கப்படுகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்வதற்குத் தேவையான தைரியத்தைப் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தருவதில்லை.
இப்போதைய குடும்பச் சூழ்நிலையில் தாயும் தந்தையும் உழைத்தாக வேண்டியது கட்டாயம். அப்போதுதான் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க முடியும் என்ற நிலை. இதன் விளைவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து பேசுவது என்பதே பெரும்பாலான குடும்பங்களில் இல்லை. விடுமுறை தினங்களில் மட்டுமே குழந்தைகளுடன் பேசும் நிலை.
இதனால் அவர்களின் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. குழந்தைகள் திசைமாறிப்போவது இளம் பருவத்தில்தான்.
பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் மருத்துவர் அல்லது பொறியாளராகத்தான் ஆக வேண்டும் என்று தங்கள் கனவை அவர்களின் மீது திணிக்கின்றனர். இதனால் மகிழ்ச்சியாகக் கற்க வேண்டிய கல்வியை மன அழுத்தத்துடன் கற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற குழந்தைகள் எதையும் தாங்கும் தைரியம் இல்லாதவர்களாகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தினமும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தேசியக் குற்ற ஆவணத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தராத கல்வி முறையால் என்ன பயன்? இந்தத் தற்கொலை ஒவ்வோராண்டும் அதிகரித்து வருவதும் வேதனை தருகிறது.
மன அழுத்தம் ஏற்படுவது கல்லூரிகளை விடப் பள்ளிகளில் அதிகம். பள்ளியில் படிக்கும்போது தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் அவமானப்படுத்தப்படும்போது தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவியர் முன் அவமானப்படுத்தப்படும்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகம்.
பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை விடத் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது. தனியார் பள்ளிகளும் தங்கள் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காகச் செய்யும் உத்திகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் ஏராளம்.
இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே தேர்வு முடிவு தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் மன அழுத்தம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்திருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
பள்ளிகளில் மட்டும் என்பதில்லை, சென்னை ஐஐடியில் ஒரு மாணவி கடந்த வாரத்தில் தற்கொலை செய்து கொண்டார். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து ஏதாவது ஒரு காரணத்தைச்சொல்வார்கள்.
எந்தப் பிரச்னையாக இருந்தாலும அதை எதிர்கொண்டு வாழ்வதுதான் பிறந்ததற்கு அர்த்தமாக இருக்கும். அதைவிடுத்துக் கோழை போலத் தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாகக் கர்ப்பத்திலேயே கரைந்திருக்கலாம்.
ஆளாக்கிய பிள்ளை தங்களைக் காப்பான் என்று பெற்றோர் நினைத்திருக்க அந்தப் பிள்ளையோ தற்கொலை செய்து கொண்டால் அதோடு பிரச்னை முடிந்துவிடுமா? ஊரார் பேசும் பேச்சுகளால் அந்தக் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.
மாணவ, மாணவியருக்கு மன அழுத்தம் கொடுத்துக் கல்வி கற்பதற்குப் பதிலாக இளமையில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் பாடங்களைக் கற்றுத் தருவது தற்கொலையைக் கண்டிப்பாகத் தடுக்கும்.
முன்பெல்லாம் நன்னெறிக் கதைகளைக் கற்றுத் தர நீதிபோதனை வகுப்பு இருந்தது. ஆனால் இப்போது அவற்றை நீக்கிவிட்டுப் பாடப்பிரிவுகளைக் கற்றுத் தரம் இயந்திர வகுப்பாக மாற்றப்பட்டுவிட்டது. தேர்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் உடல், உள்ள நலங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது கண்கூடு.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வெழுதுகின்றனர். ஆனால் அவர்கள் கல்லூரிகளில் தேர்வு எழுதும்போது மனப்பாடம் செய்து தேர்வு எழுத முடிவதில்லை. புரிந்து படித்தால் மட்டுமே கல்லூரிகளில் தேர்வு எழுத முடியும்.
திடீரெனத் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் வேறுபாதையில் மாணவர்கள் செல்கின்றனர். இதில் பிரச்னை ஏற்பட்டால் தற்கொலையை நாடுகின்றனர்.
இந்த நிலையைத் தவிர்க்க பாடத் திட்டங்களுக்கு வெளியில் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிய வைக்க வேண்டும். சுதந்திரம் பெறுவதற்காக நமது முன்னோர் செய்த தியாகங்களை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
உடல் மற்றும் உள்ள நலன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க உளவியலாளர்களை நியமிக்க வேண்டும். இதனால் மாணவர்களின் எண்ணங்கள் வேறு திசைகளில் பயணப்படுவது தவிர்க்கப்படும். அப்போது கண்டிப்பாகத் தற்கொலை முயற்சியை மாணவர்கள் கைவிடுவார்கள்.
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டால் தற்கொலைகள் தவிர்க்கப்படும்; சாதனைகள் உருவாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...