/

சுமை சுமக்கும் குழந்தைகள்

கனமான புத்தகபைகளை தினமும் சுமந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதுகுவலி, தசைவலி, தோள்பட்டை வலி, உடல்சோர்வு உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:08 am

ஐவி.நாகராஜன்

கனமான புத்தகபைகளை தினமும் சுமந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதுகுவலி, தசைவலி, தோள்பட்டை வலி, உடல்சோர்வு உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.
எனவே தேவையான புத்தகங்களை மட்டும் குழந்தைகள் கொண்டு வருகிறார்களா என சோதிக்க வேண்டும் என பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிரடியாக பகீர் எச்சரிக்கை தந்திருக்கிறது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
இதற்குமுன்பு கடந்த ஏப்ரலில் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருந்த சி.பி.எஸ்.இ. மீண்டும் அதில் செய்ய வேண்டிய அவசிய திருத்தங்களை தற்போது அறிவுறுத்தியுள்ளது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகள் புத்தகபை கொண்டு வரத் தேவையில்லை.
அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வீட்டுப்பாடமும் வேண்டாம் என்று கூறியிருப்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். கனமான புத்தக மூட்டைகளால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கல்வியாளர்களும் பலமுறை விவாதித்து 2006-ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தகபை சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி மொத்த புத்தகச்சுமையானது குழந்தைகளின் எடையில் 10 சதவீதத்திற்குமேல் செல்லக்கூடாது.
ஒவ்வொரு பள்ளியும் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், விளையாட்டு பொருட்களை வைக்க தனிபாதுகாப்பு அறை ஒதுக்க வேண்டும்.
இப்படி பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எந்த பள்ளியும் இந்த விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.
சமீபத்தில் தொழில்துறை சார்ந்த அசோசெம் என்ற அமைப்பு பள்ளிக்குழந்தைகளின் புத்தக சுமை பற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை பளீரென வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வை குறிப்பாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் 2,500 மாணவர்கள் மற்றும் 1,000 பெற்றோர்களிடம் மேற்கொண்டதாக அசோசெம் தெரிவிக்கிறது.
குறிப்பாக 7 முதல் 13 வயது வரை உள்ள மாணவர்களின் புத்தகசுமையை ஆய்வு செய்தபோது 88 சதவீத குழந்தைகள் தம் உடல் எடையில் சுமார் 45 சதவீதம் அளவிற்கு எடையுள்ள புத்தகபையை முதுகின் பின்புறம் சுமக்கும் ஹெர்குலிஸ்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த ஆய்வில் பள்ளி மாணவர்கள் நீச்சல் உடை, கிரிக்கெட் மட்டை, ஸ்கேட்டிங் பொருட்கள், தேக்வாண்டோ பயிற்சி கருவிகள் ஆகியவற்றை தங்களது பையில் எடுத்துச்செல்வதால் இவர்களில் 68 சதவீதத்தினருக்கு ஆரம்பத்தில் முதுகுவலியும், பின்னர் பொறுக்க முடியாத தசைகள் வலியும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இது பிற்காலத்தில் முதுகு கூண் விழும் ஆபத்தையும் ஏற்படுத்துவதாக ஆய்வு வெளிப்படுத்துகிறது. உடனடியாக இந்த விஷயத்தில் பள்ளிகளும், அரசும், பெற்றோர்களும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார் அசோசெம் உடல்நலக்குழு தலைவர் பி.கே.ராவ்.
இந்த அறிகுறிகளின் அடிப்படையில் தான் சி.பி.எஸ்.இ. அமைப்பு நேரடியாகவே பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்ற அக்கறையை நாம் புறிந்துகொள்ள வேண்டும்.
புத்தகச்சுமையால் பள்ளி குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று மதுரை மருத்துவகல்லூரி குழந்தைகள் நல உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ராஜ்குமார் தெரிவிப்பதாவது: ’என்னிடம் மாதத்திற்கு ஆறு குழந்தைகள் கழுத்து, கை மற்றும் முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணமே குழந்தைகளின் அளவுக்கதிகமான புத்தக சுமைதான்' என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.
நம்மூரில் பள்ளி குழந்தைகள் தம் உடல் எடையில் பாதி அளவுக்கு புத்தகபையை சுமக்கின்றனர்.
புத்தகபையில் புத்தகங்கள் நோட்டுகளோடு செய்முறை பயிற்சி ஏடு, வழிகாட்டு புத்தகம், மேற்கோள் புத்தகம், உணவு டப்பா என ஒரு மினி நூலகத்தையே சுமக்கிறார்கள்.
பல பள்ளிகள் 2 மாடி, 3 மாடி கட்டடங்களாக இருப்பதால் முதல் மாடியை கடப்பதற்குள் குழந்தைகள் களைத்துவிடுகின்றனர். இதனால் முதுகுவலி, கழுத்துவலி, நரம்பு தொடர்பான பிரச்னைகளோடு முதுகை முன்னாள் வளைப்பதால் கழுத்து மற்றும் முதுகு தண்டுவட குறுக்கு ஜவ்வுகள் தேய்ந்து எலும்பு தேய்மான நோய் வரும் ஆபத்தும் உள்ளது.
இப்படி அதிக எடையை குனிந்து தூக்குவதால் நுரையீரல் விரியாமல் சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர்.
ஆசிரியர்களே, பெற்றோர்களே மாணவர்கள் பத்திரம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அனைத்து பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்காதபடி பள்ளிகளின் கால அட்டவணையை மாற்றுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.