போட்டித்தேர்வு எனும் போராட்டம்
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணி நியமனங்களில் மாநில உரிமைகளுக்கு எதிரான செயல்பாடுகள் நடந்து வருவது வேதனையிலும் வேதனை.


தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணி நியமனங்களில் மாநில உரிமைகளுக்கு எதிரான செயல்பாடுகள் நடந்து வருவது வேதனையிலும் வேதனை. அண்மையில் நடந்த அஞ்சலகத் தேர்வில் தமிழகத்தில் இருக்கும் காலி பணியிடங்களை வடமாநிலத்தவர்களே ஆக்கிரமிப்பு செய்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 44 அஞ்சலகக் கோட்டங்களில் காலியாக இருக்கும் 310 அஞ்சலகப் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த டிசம்பர் 11 அன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் மார்ச் 14 அன்று அஞ்சலகத் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
கணிதம், பொது அறிவு, ஆங்கிலம், தமிழ் என ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் ஹரியாணா மாநிலம் தவிர, மற்ற மாநிலங்களிலிருந்து தேர்வு எழுதிய எவரும் இந்தப் பணிக்குத் தேர்வாக வில்லை.
இதில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று உண்டு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டு இளைஞர்களை விட, தமிழே அறியாத ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சியடைந்து இருப்பதுதான்.
இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். அஞ்சலகத் தலைமைக்கும் அனுப்பியுள்ளனர். ஆட்சியர்களிடம் அளித்துள்ளனர்.
இந்தியைத் தவிர வேறு மொழிகளே தெரியாத ஹரியாணா மாணவர்கள் தமிழில் 25-க்கு 23, 24 மதிப்பெண் எடுத்திருப்பது முறைகேடு அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? இதை அஞ்சல் துறை எப்படி அனுமதித்தது?
தமிழோ, ஆங்கிலமோ தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் தபால்காரர் வேலையை எப்படிப் பார்ப்பார்கள்? அஞ்சல் துறையின் இணையதளம் என்பது இப்படி மோசடித்தனம் செய்வதற்கு அனுமதிக்கலாமா? இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை கேட்டு நீதிமன்றத்தை அணுகவும் ஏற்பாடுகள் நடைபெற்றன.
அஞ்சலகத் தேர்வுத் துறையைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன.
இத்தனைக்கும் பிறகு தமிழ்நாடு அஞ்சல்துறை கொடுத்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி யுள்ளது.
அஞ்சல்காரர் பணிக்கான தேர்வில் பெயர் தெரியாத விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். குறிப்பாக ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் தமிழ் பாடத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஹரியாணா மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த அவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு இல்லை என்று சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய போட்டித் தேர்வுகள் நியாயமாக நடக்கின்றன என்ற நம்பகத் தன்மை மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறை நம்பிக்கையோடு அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள ஆர்வம் கொள்ளும்.
பெற்றோர், படிப்பு என்பது சம்பாதிப்பதற்கான வழிமுறை என்றே பணத்தை வாரி இறைக்கின்றனர். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது போலத்தான். பணம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லையானால் அந்த படிப்பை யாரும் நாடுவதில்லை.
மருத்துவமும், பொறியியலும் முதல் இடத்தில் இருப்பதற்குக் காரணம் அதுதான். இப்போது பொறியியலுக்கு மாணவர் சேர்க்கை குறைவதற்குக் காரணமும் அதுதான். புற்றீசல்கள் போல புறப்பட்ட பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் மக்களுக்கு நல்ல ஆட்சியை அளிக்க வேண்டும் என்ற அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பினர். அதற்கு நல்ல அமைச்சுப் பணியாளர்கள் தேவைப்பட்டனர். தகுதியான ஆட்களைத் தேர்வு செய்வதற்குப் போட்டித் தேர்வுகள் நடத்திட முடிவு செய்தனர். அவையும் பொறுப்போடு செயல்பட்டு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கின.
காலம் செல்லச் செல்ல இந்தப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி மையங்கள் உருவாயின. பணத்துக்காக தொழில்முறையாக நடத்தப்படும் மையங்கள் பெருகின. சமூக ஆர்வலர்களால் இலவச பயிற்சி மையங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புதிதாகப் புறப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் கிடைக்கும் இந்த வசதிகள், கிராமப் புறங்களில் கிடைப்பதில்லை. அதனால்தான் நகர்ப்புற மாணவர்களோடு கிராமப் புறங்களில் வாழும் ஏழை எளிய மாணவர்களால் போட்டி போட முடிவதில்லை.
மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் மே 7-ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறவில்லை. அதனால் நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கான மாணவர்களைத் தேர்வு செய்வது எப்படி ஒரே அளவீடாக அமையும்?
இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை, திருச்சியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த மே 24 அன்று விசாரணைக்கு வந்தபோது நீட் தேர்வு முடிவை வெளியிட நீதிபதிகள் தடை விதித்து விசாரணையை ஜூன் 12-க்கு ஒத்தி வைத்தனர். இந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரத்தை எதிர்பார்க்கின்றவர்கள் ஒரே மாதிரியான வினாத்தாளைத் தயாரிக்க வேண்டாமா? ஆங்கில மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து தமிழ், இந்தி, குஜராத்தி, மொழி வினாத்தாளின் கேள்விகள் வேறுபட்டு இருந்தன. வினாத்தாள்கள் சீராக இல்லாதபோது தரவரிசைப் பட்டியல் எப்படி சீராக இருக்கும்?
தமிழ்நாட்டில் கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டில் 6,877 மாநில பாடத் திட்டப் பள்ளிகளிலிருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களும், 268 சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலிருந்து 4,675 மாணவர்களும் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒரே மாதிரியாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நம்நாட்டில் மாநிலம் தோறும் பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன.
அப்படி இருக்கும்போது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இருந்து மட்டும் நீட் தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படுவது நியாயம்தானா? இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கேட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் 5 முதல் 10 விழுக்காடு உள்ள சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இதற்கு இந்தத் தேர்வு வழிவகுக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
பல்வேறு பாடத்திட்டத்தின் மூலம் படித்த மாணவர்களின் அறிவுத் திறனை ஒரு தேர்வின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. பிளஸ் 2 தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீட் தேர்வை மட்டுமே அளவு கோலாக கொள்வது எப்படிப் பொருத்தமாகும்?
நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தனியார் பயிற்சி மையங்கள் வணிக நோக்கில் பல்கிப் பெருகி பள்ளிக் கல்வியைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு உருவாகி வருகிறது. இதற்கான விளம்பரங்களே ஊடகங்களில் மிகுதியான வெளிவருவதைக் காணலாம்.
போட்டி என்பது பொறாமையில்லாத அறிவுத் தகுதியை மதிப்பிடுவதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அடுத்த மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் போட்டித் தேர்வுகளால் கசப்பும், கலவரமுமே பெருகும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே துறையில் ஆள் எடுப்பதற்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது. அப்போது ரயில்வே அமைச்சராக லல்லு பிரசாத் யாதவ் இருந்தார். அவரது மாநிலமான பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்து சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர்.
ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தங்கிக் கொண்டு இந்தத் தேர்வினை எழுதினர். ரயில் நிலைய நடைமேடையையே தங்கும் இடமாக ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
ஆனால் ரயில்வே நிர்வாகம் இதனைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டுக்குரிய இடங்களைப் பிடிப்பதற்காக வடமாநில இளைஞர்கள் போட்டியிட்டனர். இதனை மத்திய அரசு ஊக்குவித்தது. அப்படியானால் தமிழ்நாட்டு இளைஞர்கள் எங்கே போவது?
இதே நிலையில்தான் இப்போது அஞ்சல் துறையில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? தங்கள் மாநில உரிமைகள் பறிபோகும்போது மாநில அரசுகள் மெளனம் காக்கக் கூடாது. போர்க்குரல் எழுப்ப வேண்டும்.
மாநில அரசுகள், மத்திய அரசுடன் உறவுக்குக் கை கொடுக்கவும் வேண்டும். உரிமைக்குக் குரல் கொடுக்கவும் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...