டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிக்கலில் கத்தார்!

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொண்டதாகவும், அந்நாட்டுடன் விமான, கடல், தரைவழிப் போக்குவரத்தை துண்டிப்பதாகவும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

எஸ். ராஜாராம்

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொண்டதாகவும், அந்நாட்டுடன் விமான, கடல், தரைவழிப் போக்குவரத்தை துண்டிப்பதாகவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, பஹ்ரைன், யேமன், லிபியா, மோரீஷஸ், மௌரிடானியா, மாலத்தீவு ஆகிய நாடுகள் அறிவித்திருப்பது வளைகுடா நாடுகளில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த கத்தாரிலிருந்து ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே ஏதாவது ஒரு வகையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இதுவரை இறக்குமதி செய்து வந்ததே இதற்குக் காரணம்.
சவூதியைப் போலவே அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிதான் கத்தார். அப்படி இருக்கும்போது அந்த நாட்டைத் தனிமைப்படுத்தக்கூடிய அளவுக்கு என்னதான் பிரச்னை? கத்தார் அமெரிக்காவின் கூட்டாளியாகவே இருந்தாலும், அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் பிடிக்காத ஈரானுக்கும் அது நீண்டகாலக் கூட்டாளி.
அத்துடன் வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு கத்தார் நிதியுதவி அளிக்கிறது என சவூதி நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வந்தது. அதன் எதிரொலிதான் இந்த நடவடிக்கை.
எகிப்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் முஸ்லிம் சகோதரத்துவம், ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்கும், கிழக்கு சவூதியில் ஈரானின் உதவியுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் கத்தார் உதவி செய்கிறது.
இராக்கில் அண்மையில் கடத்தப்பட்ட கத்தார் நாட்டு அரச குடும்பத்தினரை விடுவிப்பதற்காக அல்காய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவுக்கு பணம் கொடுத்தது, சிரியா, துருக்கியில் செயல்படும் ஈரான் ஆதரவுக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்தது ஆகியவை கத்தார் மீதான சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டு.
ஆனால், இதற்கு முன்னதாக கடந்த மே மாத இறுதியிலேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. கத்தார் அரசின் செய்தி நிறுவனமான கியூ.என்.ஏ.வின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது.
கத்தார் மன்னரான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஈரான் ஒரு இஸ்லாமிய சக்தி என்று புகழ்ந்ததாகவும், ஈரான் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கையை விமர்சித்துப் பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கத்தார் மறுத்துள்ளது. செய்தி நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, பொய்யான செய்தியை சிலர் அதில் இடம்பெறச் செய்ததாக விளக்கம் அளித்தது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, பயங்கரவாத அமைப்புகளுக்கே நிதியுதவி அளிக்கிறது என்கிற கத்தார் மீதான குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? வளைகுடா பிராந்தியத்தில் கத்தார் ஒரு மிகச் சிறிய நாடு.
இருப்பினும், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் உதவியுடன் தனது அரசியல்ரீதியான செல்வாக்கை அதிகரிக்க அது முயன்று வருகிறது. இதற்கு அந்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தை கத்தார் அரசு பயன்படுத்திக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அரபு மொழியில் செய்திகளை வழங்கும் அல்-ஜசீரா தொலைக்காட்சி, வளைகுடா நாடுகளில் பிரபலமானது. மேலும், தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு கத்தார் உதவுவதாகவும் புகார் உண்டு.
2011-இல் நடந்த "அரபு வசந்தம்' என்ற எகிப்து புரட்சிக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது இந்த முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பு. பின்னர், சில ஆண்டுகளிலேயே மக்கள் போராட்டங்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது.
அமைதியான வழியில் செயல்படுவதாக இந்த அமைப்பு கூறிக்கொண்டாலும், இதை பயங்கரவாத அமைப்பாக சவூதியும், ஐக்கிய அரபு அமீரகமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சரி, சவூதி தலைமையிலான இந்தத் தடையால் கத்தார் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்? எண்ணெய் வளமும், பண பலமும் மிகுந்த நாடுதான் கத்தார். இருப்பினும், உணவுப் பொருள்களுக்கு முழுக்க முழுக்க சவூதியையே அது நம்பியுள்ளது.
தற்போது சவூதியுடனான எல்லை மூடப்பட்டுவிட்டதால் கத்தாரில் உணவுப் பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதே மக்கள் உணவுப் பொருள்களை சேமித்துவைக்கத் தொடங்கிவிட்டனர்.
மேலும், மிகப்பெரிய விமான சேவையைக் கொண்ட கத்தார் ஏர்லைன்ஸின் விமானங்கள் தங்கள் நாடுகளின் வான்வெளியில் பறக்கவும் சவூதி உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ளதால் பெரும் சிக்கலை கத்தார் எதிர்கொண்டுள்ளது.
கத்தாரில் அந்நாட்டுக் குடிமக்கள் சிறுபான்மையினர்தான். அதாவது மொத்த மக்கள்தொகையில் 12.1 சதவீதம்தான்.
25 சதவீதம் இந்தியர்களும், 10 சதவீதம் வங்கதேசத்தினரும், 5.6 சதவீதம் இலங்கை நாட்டவர்களும், 5 சதவீதம் பாகிஸ்தானியர்களும், 52 சதவீதம் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு உள்ளனர்.
இந்தப் பிரச்னையால் கத்தாரில் இருக்கும் வெளிநாட்டவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கத்தாருக்கு நேர்ந்துள்ள சிக்கலை தீர்த்துவைக்க துருக்கியும், குவைத்தும் சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.
கத்தார் அரசு செய்தி நிறுவனத்தில் ஈரானைப் புகழ்ந்தும், அமெரிக்காவை விமர்சித்தும் மன்னர் சொன்னதாக வெளியான செய்திதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. செய்தி நிறுவன இணையதளத்தை முடக்கி, அந்தச் செய்தியை வெளியிட்டதாக ரஷியர்கள் மீது இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஆக, இது வல்லரசுகளின் விளையாட்டுதானோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.