நாடாளுமன்ற மாண்பைக் காப்போம்!
நாடாளுமன்றத்தின் வடிவம் மாறவில்லை. தோற்றப் பொலிவு குறையவில்லை. வானுயர்ந்த வனப்புமிகு கட்டடம். அரைவட்ட வடிவத்தில் இரண்டு அவைகள். மரத்தினாலான அதே இருக்கைகள்.


நாடாளுமன்றத்தின் வடிவம் மாறவில்லை. தோற்றப் பொலிவு குறையவில்லை. வானுயர்ந்த வனப்புமிகு கட்டடம். அரைவட்ட வடிவத்தில் இரண்டு அவைகள். மரத்தினாலான அதே இருக்கைகள். அவை கூடும் நாட்களில் உரத்த குரலில் அவைத்தலைவர் வருவதற்கான அறிவிப்பு.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எழுந்து தலைதாழ்த்தி வணங்கி, அவைத் தலைவருக்கு அளிக்கும் மரியாதை. கடந்த 70 ஆண்டுகளாக இவை எதுவும் மாறவே இல்லை. ஆனால் இவற்றைத் தவிர மற்ற அனைத்தும் மாறிவிட்டனவே!
இன்று மக்களவையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 545 உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 244 உறுப்பினர்களும் புதுமுகங்களே. ஒருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் அங்கு உண்டு. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறியிருக்கின்றன. அக்கட்சிகளின் பலமும், எண்ணிக்கையும் மாறிக்கொண்டு வருகின்றன.
மாற்றம் என்பது இயற்கையே. அது தவிர்க்க முடியாதது. அதிலும் நாடாளுமன்றம் ஓர் உயிரோட்டமான அமைப்பு (அ ப்ண்ஸ்ண்ய்ஞ் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்). அது வாழும் நிறுவனம், வளரும் நிறுவனம், செயல்படும் நிறுவனம். மாறிவரும் அரசியல் சூழல், பெருகிவரும் மக்கள் பிரச்னைகள், அயல்நாடுகளின் கொள்கை மாற்றம் - இவை அனைத்தையும் எதிர்கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும், நாடாளுமன்றம் தன் செயல்பாட்டை, செயல்திறனை, வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் அறிவார்ந்த மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் ஏமாற்றம்தான் நமக்கு ஏற்படுகிறது.
இது மேன்மை மிகு நிறுவனம், அதன் பெருமையைக் காப்போம் (ஐற் ண்ள் ஹ ஙஹத்ங்ள்ற்ண்ஸ்ரீ ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய் ஜ்ட்ண்ஸ்ரீட் ஜ்ங் ள்ட்ர்ன்ப்க் ல்ழ்ங்ள்ங்ழ்ஸ்ங்) - என்றார் நம் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. ஜனநாயகத்தின் கோயில் இது - எனச் சொல்லி, அதன் தரையில் தலைவைத்து வணங்கினார் இன்றையப் பிரதமர் மோடி. எங்கள் பிரதிநிதி அமரும் இடம் எங்கே, அவர் பேசும் பேச்சு என்ன - என்று தேசமக்கள் ஆர்வத்தோடு கேட்ட காலமும் இருந்தது. அந்தக் காலம் கரைந்து போனதா?
நேரு பெருமகன் கனவு கண்ட மேன்மையும், பெருமையும் நனவாகிப் போனதா? மோடி புகழ்ந்துரைத்த கோயில், இன்று வணக்கத்திற்குரிய இடமாகத் திகழ்கிறதா?
உண்மையில் மரபுகள் மறைந்து வருகின்றன. நாடாளுமன்ற சம்பிரதாயங்களும், நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, விவாதங்களின் தரம் தாழ்ந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் மாண்போ மங்கி வருகிறது.
1952 முதல் 1967 வரை இயங்கிய முதல் மூன்று மக்களவைகள், ஆண்டுக்கு 125 முதல் 140 நாட்கள் நடைபெற்றன. ஆனால் 1999 முதல் 2014 வரை இயங்கிய கடந்த மூன்று மக்களவைகளும், ஆண்டுக்கு 60 முதல் 70 நாட்களாகக் குறைந்துவிட்டன.
அதிலும் குறிப்பாக 15-ஆவது மக்களவை (2009-2014), திட்டமிட்டபடி செயல்பட இயலவில்லை. திட்டமிட்ட மொத்த காலத்தில் மூன்றில் இரண்டு பகுதி காலம் தான் செயல்பட முடிந்தது. அந்த அவையில் கேள்வி நேரத்தில் 61 சதவீதம் வீணடிக்கப்பட்டது. அமைச்சர்களே நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளில், 15 சதவீத கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டது. நான்கில் ஒரு மசோதா - அதாவது 25 சதவீத மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.
இதிலும் திருப்தி அளிக்கும் செய்தி - 20 சதவீத மசோதாக்கள் ஒவ்வொன்றும், மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேலாக விவாதிக்கப்பட்டன என்பதுதான். நிதி மசோதாக்கள் எந்தவித ஆய்வும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளில், 15 சதவீத செலவினங்களே விவாதிக்கப்பட்டன.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்பு, அவற்றை செயல்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பு அமைச்சக அதிகாரிகளிடம் விடப்படும். அவர்கள் தயாரித்த வரைவு விதிகள் சரியானவைதானா? சட்டத்துக்குப் புறம்பானதா என்பதை ஆய்வு செய்து, விவாதித்து ஒப்புதல் தர வேண்டியது நாடாளுமன்றம்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், 15-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்குள், மூன்று மசோதாக்களுக்கான விதிகள் தான் கடந்த மூன்று ஆண்டுகாலத்தில் நாடாளுமன்றத்தால் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதுவும் மாநிலங்களவையில் மட்டுமே. மக்களவையில் - இந்த 16-ஆவது அவையில் - எந்த மசோதாவுக்கான விதிகளும் விவாதத்திற்கு வரவில்லை; ஒப்புதலும் தரப்படவில்லை.
விவாதம் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாலும், அது தொடர்பான விதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்யாமல் ஒப்புதல் தருவதாலும் தான், அதில் காணும் குறைகளை நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறாக நாடாளுமன்றம் செயலாற்றும் திறனை இழந்து வருகிறது. இதன் விளைவாக நீதிமன்றத் தலையீடு அதிகரித்து வருகிறது.
கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, மாநிலங்களவையின் பல இருக்கைகள் காலியாக இருந்தன. இதனைத் தொலைக்காட்சியின் மூலம் பார்த்தபோது துயரப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு இழக்கச் செய்யும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன. அந்தக் கொள்கை முடிவின் சாதக, பாதகங்களை சில உறுப்பினர்கள் அற்புதமாக ஆய்வு செய்தார்கள். அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசினார்கள்.
ஆனால் அப்பேச்சுகளைக் கேட்பதற்குத்தான் அவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. காரணம், அடுத்தவர் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமை, மாற்றுக்கருத்தையும் மதிக்கும் மாண்பு இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி "தேசத்தையே அதிர வைக்கும் தகவல்களை நான் வைத்திருக்கிறேன். அவற்றை அவையில் பேசவிடாமல், தடுக்கிறார்களே குழப்பம் விளைவிக்கிறார்களே' எனச் சொல்லி வருந்துகிறார்.
தேசத்தின் பிரதமரோ "அவையில் குழப்பம் விளைவிக்கிறார்கள், கூச்சல் மூலம் என் பேச்சைத் தடுக்கிறார்கள். நான் நாடாளுமன்றத்தில் பேசுவதைவிட, மக்கள் முன்பு நேரடியாகப் பேசிக் கொள்ளுகிறேன்' என்கிறார்.
இருதலைவர்கள் பேச்சிலிருந்தும் வெளிப்படுவது ஒரு உண்மை. அறிவார்ந்த விவாதங்கள் அவையில் நடைபெறவில்லை. கூச்சலும், குழப்பமும் நாளும் நிகழ்கிறது. அந்த அவலச் சூழலுக்கு யார் பொறுப்பு? இருபக்கத்தினருமா? இதில் எவர் பங்கு அதிகம்?
கடந்த 70 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 700 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டங்கள், தவிர்க்க முடியாத கட்டாய சூழலில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும். இது நாடாளுமன்றத்தின் பணியை, பொறுப்பை, நிர்வாக இயந்திரமே எடுத்துக் கொள்ளும் செயல் அல்லவா?
ஓர் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் அது அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அவையின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். தவறினால் அது மீண்டும் புதிதாகப் பிறப்பிக்கப்பட வேண்டும்.
பிகார் மாநிலத்தில் ஓர் அவசரச் சட்டம் பிறக்கப்பட்டு அவையின் ஒப்புதலைப் பெற 14 ஆண்டுகள் ஆகியது என்பது ஓர் அதிர்ச்சி தரும் தகவல். அவசரச் சட்டங்கள் பிறப்பிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்கப்பட வேண்டும் அது தான் நல்ல நாடாளுமன்ற நெறிமுறை ஆகும்.
அமெரிக்காவின் 28-ஆவது அதிபராக விளங்கிய உட்ரோ வில்சன் "மக்களின் குரல் தலைவனின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என அறிவித்தார்.
அந்த அறிவுரையை நம் உறுப்பினர்கள் அப்படியே எழுத்துபூர்வமாக எடுத்துக் கொண்டார்கள் போலும். ஆகவே தான் தலைவனின் காதுகள் பழுதுபடும்படி, உரக்கச் சத்தமிடுகிறார்கள். தலைவர்களோ தங்கள் காதுகளை இரு கைகளாலும் பொத்திக் கொள்ளுகிறார்கள்.
உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை நேசிக்க வேண்டும். தாங்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத்தை மதிக்க வேண்டும். அதன் மாண்பு குறையாமல் காக்க வேண்டும். அந்த உணர்வு அவர்களுக்கு இயற்கையாகவே வரவேண்டும்.
அவர்கள் சட்டம் இயற்றுபவர்கள். அவர்களின் செயல்பாடுகளை புதிய சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பது முறையல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அது உட்பட்டதும் அல்ல.
பண்டித ஜவாஹர்லால் நேரு, தான் பிரதமராக இருந்த காலத்தில், நாள் தவறாமல் அவைக்கு வருவார். உறுப்பினர்களின் பேச்சுக்களை உன்னிப்பாகக் கேட்பார். குறிப்புகளும் எடுத்துக் கொள்வார். கேள்வி நேரத்தின்போது, தொடர்புடைய அமைச்சர் பதில் சொல்லுவார். அந்தப் பதில் போதுமானது அல்ல என உணர்ந்தால், தானே எழுந்து நின்று கூடுதல் விவரங்களையும் தருவார்.
சுருங்கச் சொல்வதென்றால், சுதந்திரமான, வெளிப்படையான, நியாயமான, நடுநிலையான விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தகவல்கள் தருவதில் தயக்கம் கூடாது. நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் தர மறுப்பது சரியல்ல. அவைத்தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும்.
நாடாளுமன்ற மரபுகளும், நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற மாண்பை, மேன்மையை மேலும் உயர்த்த முயற்சிக்க வேண்டும். உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாது.
ஒரு நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் முறையாக இயங்குகிறதா என்பதை அறிய இரண்டு அளவு கோல்கள் உள்ளன என்பார் சோலி சோரப்ஜி என்ற சட்டமேதை. ஒன்று, பத்திரிக்கை. இரண்டாவது, நீதித்துறை.
பத்திரிக்கைகள் நாடாளுமன்ற செயல்பாட்டைப் பாராட்டவில்லை. நீதித்துறையோ குறைகளைச் சுட்டிக் காட்டி வருகிறது. இந்த இரண்டு அளவுகோல்களின்படியும் நாம் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெற முடியவில்லை. அப்படியானால் நாம் தோற்றுவிட்டோம் என்றுதானே பொருள்?
ஆனாலும் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, இந்தியாவே. உலகில் பல நாடுகள் ஜனநாயகப் பாதையை விட்டு விலகி, ஒரு நிச்சயமற்ற நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் இந்தியாவின் மக்களாட்சியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள.
இப்பெருமை நிலைக்க வேண்டும். மேலும் வளர்ந்து சிறக்க வேண்டுமென்பது தான் அறிவார்ந்த இந்தியப் பெருமக்களின் ஆவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...