வரலாறு பெற்ற தலங்கள்
அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், எட்டயபுரத்தில் வாழ்ந்த பாரதியார், உமறுப்புலவர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரைச்


அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், எட்டயபுரத்தில் வாழ்ந்த பாரதியார், உமறுப்புலவர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் அவ்வூரில் தோரணவாயில்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இது ஒரு நல்ல தொடக்கம். இப்பணி இவர்களுக்கான தோரணவாயில்கள் சமைப்பதோடு நின்றுவிடலாகாது. பழம்பெருமையும், வரலாற்றுச் சிறப்புகளும் மிக்க தமிழகத்தில் தோன்றிய புலவர்கள், அறிஞர்கள், மகான்கள் எண்ணற்றோர்.
அவர்கள் தோன்றிய வரலாற்றுத் தலங்களில் அப்பகுதிசார் மக்களால் அவர்களின் மகத்தான பங்களிப்புகளைக் கவனத்திற்கொண்டு நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பெற்றும் விழாக்கள் கொண்டாடப்பெற்றும் வருவதைக் காண்கிறோம்.
இன்னும் பல இடங்கள் அத்தகு மகத்துவம் வாய்ந்த தலங்கள் என்று அறியப்பெறாமலேயே இருப்பதைக் காண்கிறபோது வருத்தம் மேலிடுகிறது. அவற்றையும் இன்றைய தமிழக அரசு கவனத்திற்கொண்டு, அந்தந்தத் தலங்களில் அத்தகு சான்றோர்களை நினைவுறுத்தி, நினைவுத்தூண்கள் எழுப்பிக் கல்வெட்டுக்கள் அமைத்துக் காலகாலத்திற்கும் அப்பெயர்கள் நிலைத்துநிற்கக் காரியங்கள் செய்யவேண்டும்.
குறிப்பாக, நம் அன்னை தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பைப் பெற்றுத் தந்த தங்க இலக்கியமாகிய சங்க இலக்கியத்திற்கு வளம் சேர்த்த புலவர்கள் நம்
தமிழக மண்ணில் தோன்றியவர்கள். அவர்கள் தத்தம் பெயர்களைத் தாம் பிறந்த ஊரொடு சேர்த்தே உலகறியப் பதிவிட்டிருக்கின்றனர்.
இன்றைக்கும் அந்த மரபு நம் செயற்பாட்டில் புழக்கத்தில் இருப்பதை அறிகிறோம். தமிழகத்தின் முதல் அமைச்சர் தொடங்கி, எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் தமது ஊர்ப்பெயர்களைத் தங்களது பெயர்களோடு இணைத்துப் பதிவிடுவதையும் அழைக்கப்படுவதையும் நடைமுறையில் கொண்டுள்ளதைப் பார்க்கிறோம்.
பழம்பெரும்புலவர்கள் பலர் மதுரையைச் சார்ந்தவர்களாக அறியப்பெறுகிறார்கள். மதுரை இளநாகனார், மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதேபோல, ஊர்ப்பெயர்களோடு உடைய புலவர்களின் பெயர்கள் பல உள்ளன. மாசாத்தியார் பிறந்த ஒக்கூர், நன்முல்லையார் பிறந்த அள்ளூர் ஆகியன சிவகங்கை மாவட்டத்திலும் கோவூர் கிழார் பிறந்த ஊரான கோவூர் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உள்ளனவாக அறியப்பெறுகின்றன.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மன்னனின் அவைக்களத்துத் தலைமைப் புலவராக வீற்றிருந்த மருதனார் மாங்குடிக்காரர். அதுபோல், ஆவூர் மூலங்கிழார், ஆலத்தூர் கிழார், அரிசில் கிழார் ஆகிய - ஊர்களோடு தொடர்புடைய பெயர்களையும் அடையாளப்படுத்தப்படவேண்டியது அவசியம்.
அரிசில்கிழார் பிறந்த ஊராகிய அரிசில், ஏந்துகோட்டு யானை இசைவெங்கிள்ளி
வம்புஅணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த அரிசில் என்பதாக நற்றிணையில் சுட்டப்பெறுகிறது. இந்த அரிசில் அரிசிலூராக மாற்றம் பெறுகிறது. தேவாரத்தில், அரிசிற்கரைப்புத்தூர் (தற்போது அழகாபுத்தூர்) என வழங்கப்பெறுகிறது.
மேலும், இப்பாடலில் இடம்பெறும் அம்பர் என்னும் ஊர் திருவாரூர் மாவட்டத்து அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ளது.
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனால் ஆட்சி செய்யப்பெற்ற கிடங்கில், திண்டிவனம் நகரத்திற்கு அருகில் உள்ளது. இப்பகுதியில் கிடைத்திருக்கும் கல்வெட்டுக்களில், ஓய்மாநாட்டு கிடக்கை நாட்டுக்கிடங்கிலான இராஜேந்திரசோழ நல்லூர்த் திண்டீச்சுரம் என்று குறிக்கப்பெறுவதையும் பார்க்கலாம்.
இன்னும் இவைபோன்ற ஊர்கள் பலராலும் அறியப்பெறாது இருக்கின்றன. அந்தந்த ஊர்களில் அவர்களின் பெயர்களோடு அவர்கள் பாடிய பாடல்களைப் பிழையின்றிக் கல்வெட்டில் பொறித்து நினைவுச்சின்னங்கள் அமைத்துத் திறந்து வைக்கவேண்டும். அத்துடன் அவர்கள் பற்றிய குறிப்புகளை வரலாற்றுநோக்கோடு எழுதி, அதில் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பதிப்பித்துச் சின்னஞ்சிறு கையேடுகளாக தயாரித்தல் வேண்டும். அவற்றை அந்தந்த ஊர் நிர்வாகிகள் மூலம் விநியோகிக்கச் செய்வதோடு, அந்த ஊர் இருக்கும் மாவட்டத்தைச் சார்ந்த கல்விநிறுவனங்களில் பயில்வோருக்கும் வழங்கப்பெறுதல் வேண்டும்.
ஆண்டுக்கொருமுறை, இதுபோன்ற வரலாற்றுத் தலங்களுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சென்று அந்நினைவிடங்களைப் பார்வையிடவும் அவை குறித்த பதிவுகளைத் திரும்பத்திரும்பப் பயிலவும் செய்வது பயனளிக்கும். சங்ககாலந் தொடங்கிச் சமகாலத்துச் சான்றோர் வரைக்குமான பெயர்ப்பட்டியல் மற்றும் சுருக்க விளக்கங்கள் அடங்கிய கையேடுகள் உரிய தகுதியாளர்களின் துணையோடு தயாரிக்கப்பெறுதல் நலம்.
அதற்கான பணிகளுக்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறையாளர்களைப் பயன்கொள்ளலாம்.
அதேபோல, தமிழகத்தின் தொல்பெருமைமிக்க ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் மருவியும் சிதைந்தும் வழங்கி வரக் காண்கிறோம்.
அவற்றின் ஆதிப்பெயர்களைத் திரும்பவும் சூட்டி, அத்தகு பெயர்மாற்றங்களை மரபார்ந்த நிலையில் விளங்கச் செய்ய வேண்டும். இதற்கு முன்மாதிரிகளாய், கல்கத்தா, கொல்கத்தா ஆனதையும், பெங்களூர், மைசூர் ஆகியன பெங்களூரு, மைசூரு ஆகியமையையும் கொள்ளலாம்.
அலை வந்து கரைமோதி இசைபாடும் தரங்கம்பாடி (தரங்கம்- அலை) இன்னும், ட்ரங்பார் தான். குடவாயில், குடவாசல் ஆனதுபோல் எத்தனையோ ஊர்ப்பெயர்கள் பேச்சுவழக்கில் மருவி ஒலிக்கப்பெறுகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சிராப்பள்ளி திருச்சி ஆகிய திரிபிலிருந்து மீளவேண்டும். மேலூர் வட்டத்தில் உள்ள வரலாற்றுப்பழமையான ஊர் திருக்காய்க்குடி, தற்போது தர்காக்குடியாகியிருக்கிறது.
தற்போதைய கடலூர், தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு ஆகிய ஆறுகள் கூடும் இடம் என்பதால் கூடலூர் எனப் பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். சங்ககாலப் பல்கண்ணனார் இவ்வூரினர் என்றும் சொல்லப்பெறுகிறது.
இவைபோன்ற ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தேடித்தொகுத்து அந்தந்த மாவட்ட அளவிலேனும் அறியச் செய்வது இன்றியமையாக்கடமையாகும்.
ஊர்ப்பெயர்கள் என்பது வெறும் அடையாளப் பெயர்கள் அல்ல. அவை நிரந்தரமான பண்பாட்டுச்செழுமைகளையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் பொதிந்திருக்கும் பெட்டகங்கள்.
கோப்பெருஞ்சோழனின் உயிர் நண்பராகிய பிசிராந்தையார், பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரினர். வயது பல கடந்தபோதும் நரைக்காத தலை அவருக்கு. அதற்கு அவர் தன் பாடலின் சில காரணங்களைக் காட்டுகிறார்.
அவற்றுள் சிறப்புக்குரியது அவ்வூரினரின் பான்மையைச் சொல்லும் இடம். "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்று பெருமையோடு தன் ஊர்ப்பெயர் குறித்த அறிமுகத்தைத் தருகிறார்.
இதுபோல் எத்தனையோ பெருமைகளைத் தமிழகத்துச் சிற்றூர்களும், பேரூர்களும் பெற்றுத் திகழ்கின்றன.
இந்தவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்தில் களமிறங்கிய வீரர்களைப்பெற்ற ஊர்களும் அடங்கும்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர்ப் பகுதியை அடுத்துள்ள சிற்றூர், வாராப்பூர். மருதுபாண்டியரோடு இணைந்து களமிறங்கி அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜமீன் கோட்டை இருக்கும் இடம் இன்று மிகவும் சிதிலமடைந்து பேணுவாரற்றுக்கிடக்கிறது.
தமிழகச் சுற்றுலாத்துறை அதனைப் பேணிப் பராமரித்துச் சுற்றுலாப்பயணிகளின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். இது பாரியாண்ட பறம்புமலைக்குத் தென்திசையில் அமைந்த சிற்றூர். கட்டபொம்மனின் கோட்டையை முற்றாக நினைவுகூர்ந்த தமிழக அரசு இதுபோன்று அறியக்கிடைக்கும் ஊர்களின் வரலாற்றுச் சிறப்புக்களையும் அழிவில் இருந்து காக்க வேண்டியது காலக்கடமையல்லவா?
இன்னொன்றையும் இந்த நேரத்தில் குறிப்பிடவேண்டியிருக்கிறது. மதுரை கீழடி அகழ்வாய்வில் கிட்டிய பல வரலாற்றுச் சான்றாதாரங்களைப்போல், சிவகங்கை மாவட்டத்துச் சிற்றூர்களாகிய பறம்புமலையான பிரான்மலைப்பகுதியிலும், காளாப்பூர்ப் பகுதியிலும் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் சங்க கால, மற்றும் பாண்டியர் காலச் சான்றுகள் பல கிடைக்கக்கூடும்.
அவற்றுக்கான முயற்சிகளைத் தக்கோரைக்கொண்டு மேற்கொள்வது தமிழகத்தின் பாரம்பரியத்தையும் வரலாற்றுப் பெருமையையும் நிலைநிறுத்தப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்பணிக்கு, அந்தந்தப் பகுதிசார்ந்த அறிஞர்களையும், புரவலர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுப்பணிகளுக்கு விளம்பரங்கள், நிதியுதவிகள் செய்யும் அறஞ்சார் நிறுவனங்களையும் துணைக்கொள்ளலாம்.
நகர்சார் பூங்காக்களைப் பராமரிக்கும் பல நிறுவனங்கள் வரலாற்றுச் சின்னங்களை பராமரிப்பதற்கு உதவத் தயாராகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்திருப்பணியைக் காலதாமதமின்றிச் செய்தால் வரலாற்றுச்சிறப்பு நம்மை நிரந்தரமாக வந்து அடையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...