எளிமை என்னும் பெருந்தவம்!
இந்திய வாழ்வியல் பண்புகளுள் ஒன்று எளிமை. எல்லாரும் நினைப்பதுபோல் எளிமையாய் வாழ்வது எளிமையானது இல்லை. ஆனால் அது கடினமானதும் இல்லை. இயல்பானது.


இந்திய வாழ்வியல் பண்புகளுள் ஒன்று எளிமை. எல்லாரும் நினைப்பதுபோல் எளிமையாய் வாழ்வது எளிமையானது இல்லை. ஆனால் அது கடினமானதும் இல்லை. இயல்பானது.
ஆனால், அதைவிடுத்து வெகுதூரம் வந்து அல்லல்படுகிற உயிரினம் மனிதமாகத்தான் இருக்கும் மனிதனை அண்டி வாழப் பழகிய உயிரினங்களுக்கும் அதே கதிதான்.
கோழி இயல்பில் பறவையினம். மனிதர்களோடு சேர்ந்து அதுவும் கால்நடையாகிவிட்டது.
குப்பையைக் கிளறி, அற்பத் தானியங்களைப் பொறுக்கித் தின்பதோடல்லாமல், தன் குஞ்சுகளுக்கும் அந்த அற்பக் கல்வியைத்தானே அது கற்றுக்கொடுக்கிறது. அதனைவிடவும் சின்னஞ்சிறு குருவிகளெல்லாம் சிட்டாய்ப் பறந்து சென்று தத்தமக்குரிய தானிய மணிகளை விளைவிடங்களில் இருந்தே எடுத்துக்கொள்கின்றனவே!
கோழிக்குச் சிறகிருக்கிறதென்று, அதன் குஞ்சுகளைக் கொள்ளையிட வரும் சக பறவையினங்களான கழுகும் காக்கையும்தான் வந்து வந்து உணர்த்தவேண்டியிருக்கிறது. ஆயினும் என்ன, அடுத்த சில நொடிகளிலேயே, அது தன்னியல்பிழந்து, கால்நடையாகிவிடுகிறது அடுத்தது, நாய் மனிதர்களோடு சேர்ந்து நாய்களும் கெட்டு யுகம் பலவாயிற்று.
அதனால்தான், தன் இனத்தைப் பகைத்துத் தான் மட்டும் வாழ்ந்து, நன்றியுடையதெனும் நல்ல பெயர் வாங்கிக்கொண்டது.
வீட்டு நாயினும் கேடு கெட்டது, அங்காடி நாய். தெருநாய்க்குத் தான் அந்தத் திருநாமம் சூட்டுகிறார், பட்டினத்தார். மனித மனத்தின் இயல்பு கெட்ட நிலையுணர்ந்துதான், "நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்' என்று பாடுகிறார் மணிவாசகர். "ஞமலிபோல் வாழேல்' என்று எச்சரிக்கிறார் பாரதியார்.
இதில் இரண்டுங்கெட்டான் வகை, குரங்கு.
அதிலும் பட்டினத்தார் பாடும் ஆப்பசைத்த குரங்கு இருக்கிறதே, அது இயல்பு கெட்ட குணத்திற்கு நல்ல சான்று.
அது என்ன ஆப்பசைத்த குரங்கு?
பிளக்க முடியாத பெருமரத்தை வகிர்ந்து எடுக்கக் கோடரிக்கு வலிமை போதாது. எனவே, கோடரி கொண்டு உருவாக்கிய சிறு இடைவெளியில், ஆப்பை வைத்துச் சுத்தியால் அடிப்பார்கள். ஆப்பு என்பது மரத்தாலான கட்டை.
இடைவெளியில் ஆப்பை, அதாவது, அந்தத் துண்டு மரக்கட்டையை வைத்து அடிப்பார்கள். தன் இனத்தின் இயல்பு கெட்டுத் தன் இனத்தையே கெடுக்கும் மரத்துண்டு, ஆப்பு. (குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பும், இந்த வகைதான்) இந்த ஆப்பை வைத்து இறுக்க அடித்துவிட்டுப் பின்னர் அசைத்து அசைத்து எடுத்து மீண்டும் அடிப்பார்கள் அடிவிழவிழ, விரிசல் பெரிதாகி மரம் பிளக்க ஏதுவாகும்.
மனிதர்கள் இவ்வாறு செய்வதை, மரக்கிளையில் இருந்தபடி பார்த்த குரங்கு, அவர்கள் அப்புறமாகச் சென்றது அறிந்து இறங்கி, அதுவும் அசைத்தது வசமாக இல்லை இன்னும் வாட்டமாய், அந்த மரத்தில் அமர்ந்த படி ஆப்பை அசைத்தது. ஆப்பும் இசைந்து வெளிவந்தது. வெற்றிக்களிப்பில் துள்ளியபடி மரம் நோக்கியது குரங்கு. ஆனால் வர மறுத்தது, ஒரு கால் அதுதான் ஆப்பிருந்த இடைவெளியில் அகப்பட்டுக் கொண்டதே இப்போது அந்த இடத்தில் குரங்கு இல்லை. நாம்தான் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல, அகப்பட்டீர் கிடந்துழல, அகப்பட்டீர் நீரே என்று பாடுகிறார் பட்டினத்தார்.
உண்மை எந்த நேரத்திலும் இயல்பாக வெளிவந்துவிடும். ஆனால், பொய் இருக்கிறதே, அதைச் சொல்வதற்கும் காப்பதற்கும் பெருஞ்சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு பொய் சொல்லி, அதைக் காப்பாற்ற இன்னொரு பொய் சொல்லி, இரண்டையும் காப்பாற்ற இன்னும் ஒன்று என விரித்துப் பெருகும் இந்தப் பொய், இயல்பில் இல்லாதது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, வாழ்ந்து, பொய்யாய்ப் போகும் வாழ்க்கைக்கு நடுவே மெய்தேடுவதற்கு நாம் இயற்ற வேண்டிய தவம்தான் எளிமை.
பொய்யாய்ப் பாசாங்காய்த் தெரிந்த அனைத்தையும் துறந்து பட்டினத்தார் ஆன ஞானி இதைப் படக்கென்று ஒரு பாடலில் போட்டு உடைத்துவிடுகிறார்.
வேர்க்கக் குளித்து, பசிக்கப் புசித்து, தூக்கம் வரத்தூங்கி நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையை நாம் எப்போது இழந்தோம் என்று சிந்தித்துப் பார்த்தால், எளிமையின் மேன்மையும் இயல்பின் தூய்மையும் புரியும்.
எளிமையானவர்களின் வாழ்வில் ஆடம்பரம் எவ்வளவு இன்னல் செய்யுமோ, அதைவிட, இன்னல் கொடுப்பது எளிமையற்றவர்கள் எளிமையாக வாழ்வதற்கு எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள்.
பல தலைவர்களின் எளிமை, எளிமையானவர்களை பாடுபடுத்துகிறது. பல எளிய மனிதர்களை, இந்தப் போலச் செய்யும் பகட்டுக்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கிவிடுகின்றன.
எனவே, எளிமை என்பது இயல்பு ஈன்ற குழந்தை என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் உத்தேசித்துத்தான் ஒளவைப்பாட்டி முன்னரே சொன்னார் "இயல்பு அலாதன செய்யேல்'.
மூதுரைகளுக்கோ, ஆத்திசூடிகளுக் கோ, இன்றைய கல்வியில் ஏது இடம்? இயல்புக்குப் பொருந்தாத கல்வியும், உணவும், உடைகளும் வந்து நமது மரபார்ந்த பழக்க வழக்கங்களைச் சூறையாடி விட்டன.
அடுத்தவர்களைப் பார்த்துப் பார்த்து அவர்களைப்போலச் செய்வதால், அழிகிற மரபு, பெரிதும் இழந்துபோனது, எளிமைத்தான்.
நடந்துபோய் முடிக்கவேண்டிய பணிகளுக்கெல்லாம், நான்கு சக்கர வாகனங்களை எடுத்து போய்ப் பழகிக் கெடுத்துக்கொண்ட பின்னர், நடப்பதற்கென்றே, மீண்டும் வண்டியெடுக்கிறோம். இழந்துவிட்ட எளிய வாழ்வை மீட்டெடுக்க, எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கிறது.
காசைத் தண்ணீராய் இறைப்பதாகச் சொன்ன சொலவடை காலாவதியாகிவிட்டது. தண்ணீருக்காய்க் காசை இறைக்க வேண்டியிருக்கிறது. எளிதாய்க் கிடைத்த நீரைப் பேணாது தொலைத்ததுபோலவே, காற்றையும் ஆக்கிவிடுகிற காலம் வருகிறது.
இல்லாதபோது துடியாய்த் துடிக்கிற நம்மில் எத்தனைபேர் இருக்கிற காலத்தில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இருக்கிறோம்?
சிக்கனம்கூட வேண்டாம். தேவையில்லாமல் விரயமாவதையேனும் விரைந்து தடுத்திருக்கிறோமா? வீட்டில், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் தொடர்ந்த, இந்த எளிமை இழப்பு நாட்டையே பீடித்திருக்கிறதே.
எத்தனையோ கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கிக்கிடக்க, இவ்வளவு ஆர்ப்பாட்டங்களோடு, நகரில் ஒளிரும் ஆடம்பர விளக்கொளிகள் எதற்கு? அரசியல் கட்சிகள், அது எந்தக் கட்சியானாலும் சரி, தன் கட்சிக் கூட்டம் நடத்துகிறபோது, அடிக்கொரு குழல்விளக்கும் ஆடம்பரப் பெருவிளக்கும் ஒளிர விடுவதால் ஆவது என்ன?
திருமண விருந்துகளில் உண்ணாது மூடப்படும் இலைகள் நெஞ்சை இறுக்கிப்பிழிகின்றன. எப்போதேனும் ஒருவேளை உணவு கிடைக்காமல் அலைகிறபோது நாம் உதாசீனப்படுத்திய உணவுப் பொருள்களை நினைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன்?
காந்தியடிகளும், காமராசரும், தோழர் ஜீவாவும், மூதறிஞர் ராஜாஜியும், வினோபாபாவேயும், ஜே.சி. குமரப்பாவும் இந்த தேசத்தில் பிறந்த எளிய மனிதர்கள்தானே. இந்தியாவின் உன்னதத் தலைவர்கள் தானே.
வழிபாட்டில்கூட எத்தனை ஆடம்பரங்கள். இயற்கையில் எளிதாய்க் கிடைக்கும் பூவும் புனலும் சொரிந்து வழிபட அருளிய தெய்வங்களின் கதைகள், புராணங்கள் அனைத்தும் எளிமையையே வலியுறுத்துகின்றன.
சக்கரவர்த்தித் திருமகனாகப் போற்றுவதைவிடவும் சாமான்யனாய்க் கானகம் ஏகிய இராமனையே கடவுள் என்று வணங்குகிறோம். அடியவர் நலனுக்காகக் கூடையில் மண்சுமந்த எளிவந்த பிரான் சிவன். தொழுவத்தில் பிறந்த சிலுவைத் தவயோகிதான் வழிபாட்டுக்குரிய இயேசு பிரான். பட்டினிகிடந்து பரம்பொருளைச் சிந்திக்கத் தூண்டுகின்ற நோன்புகள் மிகுந்த வழிபாடுதான் இந்தியாவின் அடையாளம்.
எண்ணியது எய்த எளிமையே பெருந்தவம்.
தவம் என்பது வீடுவிட்டுப் புறப்பட்டு வெகுதொலைவு சென்று காடுகளுக்குள் உறைந்து கடுமையாக இயற்றுவது அல்ல.
தத்தம் இடத்தில் இருந்து தன் கடமையை, இயல்பாக ஆற்றுதல். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் வள்ளுவர்.
எனவே, இந்தியாவின் பெருந்தவங்களுள் ஒன்று எளிமைத்தவம். அதன் இயல்புணர்ந்து செய்வோர் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம் என்பது திண்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...