/

வாடிக்கையாளரை விரட்டும் வங்கிகள்

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களில் பிற துறைகளைவிட வங்கித் துறையில்தான் மிகவும் அதிகம் என்று சொன்னால் அது மிகையில்லை.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

ஆர். வேல்முருகன்

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களில் பிற துறைகளைவிட வங்கித் துறையில்தான் மிகவும் அதிகம் என்று சொன்னால் அது மிகையில்லை.
இந்தியாவைப் பொருத்தவரையில் தனியார் துறை வங்கிகளைவிட, பொதுத் துறை வங்கிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், இன்னமும் பழைய நடைமுறைகளையே கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடந்த 1980-களில் இங்கிலாந்தில் கல்விப் பணிக்காகச் சென்றபோது ஒரேயொரு வங்கிக் கணக்கின் மூலம் அந் நாடு முழுவதும் சுற்றினாராம்.
அதன்பின் 1990-களில் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருந்தபோது முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளையொன்றுக்குச் சென்று தனது கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு என்று பார்க்குமாறு சொன்னாராம். ஒரு மணி நேரமாகும் என்று அங்கிருந்த ஊழியர் தெரிவித்தாராம். ஏனென்றால், அந்தக் கிளையில் இருந்த கணினி இயங்குவதற்கு ஒரு மணி நேரம் ஆகுமாம். கணக்குப் பதிவேடாக இருந்தால் உடனடியாகப் பார்க்க முடியும் என்றாராம்.
இந்த நிலையில், இப்போது சிறிது வேண்டுமானால் முன்னேற்றமும் மாற்றமும் இருக்கலாம். பெரிய மாற்றமொன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் தனியார் வங்கிகளில் கணக்குத் தொடங்க வேண்டுமென்று விண்ணப்பத்தை அளித்தால் விண்ணப்பத்தில் இருக்கும் முகவரிக்கு ஏ.டி.எம். கார்டு, அதற்கான ரகசியக் குறியீட்டு எண், காசோலைப் புத்தகம் ஆகியவை வந்துவிடும். உடனடியாகச் சென்று ஏ.டி.எம். கார்டை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. முகவரி மாற்றம் செய்ய வேண்டுமென்றால் வங்கி அதிகாரிகளில் சிலர், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக விண்ணப்பிக்கச் சொல்கிறார்கள்.
நமது ஏ.டி.எம். கார்டு பழுதாகிவிட்டால், வேறு கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்தக் கார்டு வருவதற்கு 10 நாள்களுக்கும் மேலாகும். அதன்பின் மீண்டும் ரகசியக் குறியீட்டு எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அது வருவதற்கு மேலும் 10 முதல் 20 நாள்கள் ஆகும்.
அதன்பின் அதே வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இருந்தால் அது செயல்பட்டால் பணம் எடுக்கலாம். இதுதான் பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு.
காசோலை கேட்டால் முடிந்த அளவுக்கு ஏன், எதற்கு என்று கேட்டுத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்களே தவிர, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லையென்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்.
என்னுடைய மகனுக்கு வங்கிக் கணக்குத் தொடங்குவதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றிருந்தேன்.
அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்தபின் ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்கள். விண்ணப்பித்த பின் 15 நாள்கள் கழித்து வரச் சொன்னார்கள். 15 நாள்களுக்குப் பின் சென்றபோது மாலை 6 மணிக்கு மேல் வரச் சொன்னார்கள். மாலையில் சென்றால் காலையில் வரச் சொன்னார்கள்.
இந்த ஏ.டி.எம். கார்டு வாங்குவதற்காக ஒவ்வொரு முறையும் மகன் படிக்கும் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வர வேண்டியிருந்தது. ஏ.டி.எம். கார்டு வந்ததா, இல்லையா என்று பார்க்க முடியாதென்று சொல்லிவிட்டனர். இறுதியில் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக ஏ.டி.எம். கார்டைப் பெற்றுக் கொண்டான்.
நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் கணக்கை இயக்கலாம் என்று சொன்னாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று வங்கி ஊழியர்களே சொல்கின்றனர்.
என் மகன் கணக்கு வைத்துள்ள வங்கியின் வேறு கிளைக்கு கணக்குப் புத்தகத்துடன் சென்றாலும், அங்கிருந்து பணம் எடுக்க முடியாதென்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்றொரு முக்கியப் பிரச்னை, கல்லூரிக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மத்திய அரசின் ஆளுமைக்குக் கீழ் உள்ள கல்லூரிகளில்கூட ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தும் வசதி இல்லை என்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் வரைவோலை மூலம்தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். விடுதிக் கட்டணத்துக்கு பணமாகத்தான் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
மத்திய அரசின் கல்லூரிகளில்கூட இவ்வாறு நடைமுறை இருந்தால், தனியார் கல்லூரிகளில் எப்படி இவற்றை நடைமுறைப்படுத்த முடியும்?
பெரும்பாலான நேரங்களில் ஏன் இந்த வங்கியில் கணக்குத் தொடங்கினோம் என்று வருத்தப்படும் நிலைதான் உள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் தனியார் வங்கிகளை நோக்கி ஈர்க்கப்பட்டுச் செல்கின்றனர்.
கணக்குத் தொடங்கினாலே ஏ.டி.எம். கார்டு ரகசியக் குறியீட்டு எண்ணுடன் அனுப்ப வேண்டும். தேவையென்றால் நெட் பேங்கிங் வசதி, காசோலை வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும்.
வாடிக்கையாளர்களே வங்கியில் முதன்மையானவர்கள் என்ற வாசகங்களை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை என்பதை வங்கி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.
வாராக்கடன்கள் அதிகரித்து பல வங்கிகள் நஷ்டமடைந்துள்ள சூழ்நிலையில் இதேநிலை தொடர்ந்தால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களாக பொதுமக்கள் தொடர்வார்களா என்பது கேள்விக்குறியே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.