தொடர வேண்டும் தொல்பொருள் ஆய்வு
காவிரி நீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அமலாக்கப்படவில்லை; நீதிமன்ற தீர்ப்பும் ஏற்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் சிக்கலுக்குத் தீர்வும் காணப்படவில்லை.


காவிரி நீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அமலாக்கப்படவில்லை; நீதிமன்ற தீர்ப்பும் ஏற்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் சிக்கலுக்குத் தீர்வும் காணப்படவில்லை.
மீத்தேன் மற்றும் எண்ணெய் எடுப்பதனால் காவிரிப் படுகையே பாலைவனமாகிறது. அன்றாடம் தமிழக மீனவர் கைதும், சிறைப்படுத்தலும் தொடர்கதையாகி விட்டது.
இப்படிப்பட்ட காரணங்களால் மாநில உரிமைகள் பறிபோவதால் மத்திய அரசின் மீது கோபம் ஏற்பட்டுள்ளது.
தமிழர் நாகரிக வரலாற்றின் முக்கிய தடயமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மக்களவையில் பேசப்பட்டுள்ளது.
முடங்கிக் கிடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எழுப்பிய கோரிக்கையை தி.மு.க. உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி மற்றும் பா.ஜ.க. உறுப்பினர் இல. கணேசன், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர்.
இதனையடுத்து மாநிலங்களவையை வழிநடத்திய அதன் துணைத் தலைவர் பி.ஜே. குரியனும், தமிழ்நாட்டு உறுப்பினர்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது என்று கூறியுள்ளார்.
உலகம் பாராட்டத்தக்க அளவில் தமிழர்களுக்கென ஒரு வரலாறு உள்ளது. அதனைப் பற்றி நாம் அறியாமலேயே இருக்கிறோம். ஆனால் உலகம் அறிந்திருக்கிறது. அது பற்றிய அறிவைப் பெறுவதும், அடுத்தத் தலைமுறைக்கு வழியமைத்துத் தருவதும் நம் கடமையாகும்.
இந்தியாவில் புதிய தற்கால நாகரிகம் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி எல்லா ஆற்றோரங்களிலும் பரப்பியது. தமிழில் முதல் பருவத்திலுள்ள சொற்கள் எல்லாம் ஓர் அசையின. சர். ஜான் மார்ஷல் என்பவர் அரப்பா, மொகஞ்சதரோ போன்ற இடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட ஓவிய எழுத்துகளைக் குறித்து எழுதி இருந்தவாறு இவ்வோர் அசைச் சொற்களைச் சித்திர எழுத்துகளாக அமைத்தல் கூடும்.
இந்தியாவின் புதிய தற்கால நாகரிகம் இந்தியாவினின்றும் கடல்வழியாகச் சென்று சுமேரிய நாகரிகத்துக்கு ஏதுவாக அசீரியாவில் தங்கினது சுமேரியருக்கும் தமிழருக்கும் முகவெட்டு ஒரு வகையாக இருத்தல் தற்செயலாக ஏற்பட்டது அன்று என்று பி.டி. சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார்.
சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அரப்பா, மொகஞ்சதரோ ஆகிய நகரங்களில் கிடைத்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், பிற பொருள்களும் தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்திய வரலாறு என்னும் நூலில் ஆர்.டி. பானர்ஜி என்பவர் இதுபற்றி எழுதியுள்ளார்.
சிந்துநதி நாகரிகம் கற்கால இறுதிக்கும், உலோக கால தொடக்கத்திற்கும் இடைப்பட்டது. யானை, ஒட்டகம், நாய், திமிலும் குறுகிய கொம்பும் உள்ள மாடுகள், ஆடுகள் முதலியன வளர்க்கப்பட்டன. வாளி, கோதுமை, பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. நூல் நூற்று நெசவு செய்தல் முதலிய தொழில்கள் மிகத் திருத்தமடைந்திருந்தன.
அங்கு காணப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், லிங்கங்களும் சிவ, துர்க்கை வணக்கங்களை புலப்படுத்துகின்றன. இவ்வளவு காலமும் எண்ணி வந்ததைவிட இவ்வணக்கங்கள் மிகவும் பழைமையுடையன என்பது புலனாகின்றது.
ஆய்வாளர் பலரும் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என அறுதியிட்டுக் கூறியுள்ளனர். பிராமி எழுத்துகளின் வளர்ச்சியே இன்றைய தமிழ் எழுத்துகள் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகவே சங்க கால நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் இப்போது கீழடியில் கிடைத்துள்ளது. கீழடி என்பது மதுரை நகரத்திற்கு அருகே வைகைக் கரையில் உள்ள சிற்றூராகும். அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் இடம் பெற்றுள்ள அடையாளச் சின்னங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளன.
இங்கு ஆய்வு செய்யப்படும் தொல்லியல்மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 சென்ட் பரப்பளவே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகள், அரிய வகை மணிகள், அணிகலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
அக்காலக் கட்டடங்களின் தரைத்தளங்கள், மதில் சுவர்கள், கால்வாய்கள், பெரும் தொட்டிகளும் அவற்றின் உள்ளே தண்ணீர் செல்வதற்கும், வெளியேறுவதற்குமான அமைப்புகள், வட்டக் கிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை முதன் முதலாக கிடைத்துள்ளன.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது. 2013-ஆம் ஆண்டில் அகழாய்வுப் பணியைத் தொடங்கியபோது, சங்க காலத்தைச் சேர்ந்த சுமார் 293 நகரங்கள் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் இதுவாகும். அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற தொன்மையான நகரங்களில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் பல கட்டடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியுள்ளது. இங்கு ஒரு நகர நாகரிகம் வாழ்ந்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அரப்பா நாகரிகம் போன்ற சுடுமண், கழிவுநீர்க் கால்வாய், வசதியுடைய கட்டட அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இப்போதுதான் முதன்முறையாக சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அக்கால மக்கள் வணிக நோக்கத்திற்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் அகழாய்வு முடிவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது நடைபெற்ற ஆய்வுக்கு 30 பேர் தங்கள் நிலங்களை அளித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சி முடிந்த பிறகு தோண்டப்பட்ட குழிகளை மண்போட்டு மூடிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மண்ணால் ஆன பழம் பொருட்கள் சேதமாகாமல் இருக்கும். தேவையானால் மறுபடியும் தோண்டி எடுத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் மழையில் அவை அழிந்து விடும் என்கின்றனர் அறிஞர்கள்.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்திட போதுமான கட்டடங்கள் இல்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் வேதியல் முறையில் சுத்தம் செய்வதற்குரிய சோதனைச்சாலை மைசூரில்தான் உள்ளது. அங்கு கொண்டு சென்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்து வைப்பதற்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
அருங்காட்சியகம் அமைப்பதற்கு 2 ஏக்கர் நிலம் வேண்டுமென தமிழக அரசிடம் இந்தியத் தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்தது. தமிழக அரசும் ஆவன செய்வதாக அறிவித்தது. அது எப்போது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.
விரைவில் தமிழக அரசு ஆவன செய்யாவிட்டால், இந்தப் பொருள்கள் அனைத்தும் மைசூரில் உள்ள தலைமை நிலையத்திற்கே கொண்டு செல்லப்படும் என்றும், அவை அங்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
சங்ககால நகரங்களான மதுரை, உறையூர், கரூர், முசிறி போன்ற பழம்பெரும் நகரங்கள் அழிந்துவிட்டன. கொற்கை, பூம்புகார் ஆகியவை கடலுள் மூழ்கி விட்டன. உறையூர், திருச்சி மாநகரத்தின் ஒரு பகுதியாகவே ஒடுங்கிவிட்டது. இந்த அவல நிலையில் மதுரை மூதூர் அமைந்திருந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது.
இரும்புக் காலம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கீழடியில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அங்கு அந்த அகழாய்வு தொடர்வதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதுவரை கிடைத்துள்ள அரிய பொருள்களை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
வைகை நதி அருகே நடைபெற்று வரும் குவாரி பணிகளால் கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கு பாதிப்பு உருவாகியுள்ளது. போதுமான நிதி இல்லாமையால் பணிகள் முடங்கியுள்ளன.
இது பற்றி நாடாளுமுன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் பேசுகையில், மதுரை அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது பற்றி மத்திய கலாசாரத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அங்குள்ள சங்க காலக் கண்டுபிடிப்புகள், அகழ்வுப் பணிகள் ஆகியவை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
எனவே மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் இதில் தலையிட்டு கீழடியில் முடங்கிக் கிடக்கும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் மத்திய வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...