நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாரதி என்னும் சூரிய மண்டலம்

''மெல்லத் தமிழினிச் சாகும் என்று யாரோ பேதை அவதூறு பேசியது அவரது உள்ளத்தில் 'சுருக்'கென்று தைத்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:24 pm

நெல்லை சு. முத்து

''மெல்லத் தமிழினிச் சாகும் என்று யாரோ பேதை அவதூறு பேசியது அவரது உள்ளத்தில் 'சுருக்'கென்று தைத்தது. வந்த அவதூறைப் பொய்யாக்க வேண்டும் என்று மனதில் உறுதிகொண்டார். இந்தக் கைங்கர்யத்திலேதான் அவர் மறையும் வரையிலும் ஈடுபட்டிருந்தார்'' என்கிறார் அறிஞர் வ.ரா. ('மகாகவி பாரதியார்').
அதனால்தான், ''சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா'' - என்று குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுக்கிறார். பெரியவர்களிடம் சொன்னால் தலையில் ஏறாது என்று நினைத்தாரோ என்னவோ?
பாரதி தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்; பின்னர் நூலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பு ஆசிரியர் என்ற நான்முகப் பிரம்மன். என்றாலும், அவரே குறிப்பிடுவதுபோல, ''நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்றார். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்ற வாஞ்சை கொண்டவர்.
''வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர் 'வாழிய பாரத மணித்திருநாடு' என்று மொழி, இனம், நாடு ஆகிய முப்பரிமாணங்களில் அவரது உளம் பரிணாம வளர்ச்சி கண்டது.
தனது பாடல்களையும் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 'போல் ரிஷார்' எனும் பிரெஞ்சு மேதை தொகுத்த 'தத்துவ ரத்னமாலை', சியூசின் என்னும் சீனப்புரட்சி வீராங்கனையின் கவிதை என்று பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மட்டுமா? வங்காளியில் இருந்து தாகூர், பங்கிம் சந்திரர் போன்ற நம் நாட்டுப் பேரறிஞர் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர். அதனால்தான் ''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'' என்று தீர்ப்புரைத்தார்.
''நான் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான், ''வாதாபி கணபதிம்'' என்று ஆரம்பஞ் செகிறார். 'ராமநீ சமானமெவரு', 'மரியாத காதுரா', 'வரமுலொஸகி'... ஐயையோ, ஐயையோ ஒரே கதை'' என்று அலறும் இசைக்குயில், ''பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற்பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது. புதிய புதிய கீர்த்தனைகளை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுகளில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும்'' என்று 'சங்கீத விஷயம்' குறித்தும் எழுதுகின்றார்.
பாபு அரவிந்த கோஷின் நட்பில், கீதோபதேசங்களை ஆராய்ந்து மொழிபெயர்த்தவர். வேதரிஷிகளின் வாக்கினில் சிக்குண்டும், பதஞ்சலி யோகம் கற்றும், ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் ஆன்ம ஒளிபெற்றவர் பாரதியார்.
''நின்னைப்போல் எமதுயிர் நூறாண்டு வெம்மையும், சுடரும் தருக'' என்று ஞாயிற்றுத் தீயினை வணங்கியவர். 'ஓம்' எனும் மந்திரச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேடிய கவியோகி.
''யோகத்து இருத்தி விடு - அல்லால் என்றன் ஊனைச் சிதைத்துவிடு'' என்ற வேதாந்தி. குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச்சாமி போன்றோரின் ஈர்ப்பில், ''இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்று சித்தாந்தம் ஓதிய மகான். ''கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்'' என்றவன் பெற்ற பரமோன நிலை ஆச்சரியம். அத்வைத நிலை கண்டால் மரணமில்லை எனும் கோட்பாட்டில், ''யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்'' என்று பாடியவர்.
''புராணங்கள் முழுவதும் சாத்திரமல்ல. ஞான நூல்கள் யோக சாத்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி, நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பலவுண்டு! இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்திற்கு வழிகாட்டி, தர்ம நீதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால், அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்'' என்கிறது பாரதியின் ஞானத் 'தராசு'.
இன்னும் பரமாத்மா ஏற்றி வைத்த 'ஞானரதம்' ஏறி, வைராக்கியக் கோட்டை கடந்து, 'உபசாந்தி பூமி'' (கவலையற்ற உலகம்), புக முடியாமல் திரும்புகிறார். 'கந்தர்வ லோக'த்தில் (இன்ப உலகம்) பொன் வீணைப் பேச்சினியர் பர்வத குமாரியுடன் சஞ்சரிக்கிறார். 'தமோ குணமே நாசத்திற்கு முற்குறி' எனப் போதிக்கும் 'சத்யலோக'த்தில் நுழைந்து, மீண்டும் மண்ணுலகாம் துன்பக் களஞ்சியத்திற்குத் திரும்புகிறார் ஞானரத சாரதியான பாரதி.
'காட்சி', 'சக்தி', 'காற்று', 'கடல்' போன்ற கவிதை சுகம் ஏந்திய இவரது வசன கவிதைகளும் தமிழுக்குப் புதியன. சில இலக்கண மாமேதைகள், பாரதி கவிதைகளில் யாப்பு மீறலைச் சுட்டிக் காட்டியபோது, அவர் தொடுத்த கேள்விக்கணை - ''தமிழ் முதலா? இலக்கணம் முதலா?''
இந்த வினா மின்னலில் சிக்கியவர்கள், ''தமிழ்தான்'' என்றனர். ''ரொம்ப சரி. அப்படியானால் தமிழைத் தனது இஷ்டம்போல போக விடுங்கள். இலக்கணம் அதைப் பின்பற்றட்டும். தமிழின் தன்மை கூறுவதே இலக்கணம். இலக்கணம் தமிழை விழுங்கக் கூடாது'' என்றார்.
தமிழ் புதுக்கவிதையின் ரிஷிமூலமே பாரதிதான்.
''கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமேயல்லாது, சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லையென்று கருதி ஆழ்ந்த ஓசை மந்திரம் உடையதாய், மற்றபடி வசனமாகவே எழுதிவிட்டார் (வால்ட் விட்மன்). இவரை ஐரோப்பியர், காளிதாசன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்குச் சமமான பதவியுடையவராக மதிக்கிறார்கள்'' என்று அமெரிக்க தேசத்துப் புதுமைக்கவி விட்மன் பற்றிக் குறிப்பிடுவார்.
ஒரு நூற்றாண்டிற்கு முன்னம் 1916 அக்டோபர் 16 அன்று, 'ஜப்பானியக் கவிதை' என்ற கட்டுரை தீட்டினார் பாரதி. 'மாடர்ன் ரிவ்யு' என்ற கல்கத்தா இதழில் உயோநே நோகுச்சி எனும் ஜப்பானியப் புலவர் எழுதிய ஒரு கடிதத்தின் அடிப்படையில் வெளிப்பட்ட சிந்தனை அது. தமிழ் ஹைக்கூ வரலாற்றின் தொடக்கமும் ஆயிற்று.
இத்தனையும் மீறி, பாரதி ஓர் அறிவியல் கவிஞன். ''ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை. இருளென்பது குறைந்த ஒளி'' என்ற உன்னத சார்பியல் சித்தாந்தத்தினை வசனத்தில் வடித்தவன் ஆயிற்றே!
''தினையின் மீது பனைநின் றாங்கு / மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக் / கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகு / தூமகேதுச் சுடரே வாராய்'' - என்று 1910-ஆம் ஆண்டு ஹேலி வால்விண்மீனை வரவேற்றுப் பாடினார்.
அதில், ''பாரத நாட்டில் பரவிய எம்மனோர் / நூற்கணம் மறந்து பன்னூறாண்டாயின'' என்று ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகவே வருந்துகிறார்.
''நுட்பமான விவரங்கள் கற்றுக் கொடுப்பதற்குத் தகுந்த பாடப் புத்தகங்கள் தமிழில் இன்னும் ஏற்படவில்லையாதலால், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர்கள் ஆங்கிலப் புத்தகங்களைத் துணையாக வைத்துக்கொண்டு, அவற்றிலுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேசமொழியில் மொழிபெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும்'' என்பார் பாரதி.
''பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர்கள் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால், ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இம்முயற்சி மேன்மேலும் வளர்ந்து தீர வேண்டும்'' என்ற நன்னம்பிக்கையையும், பாரதி, 'தமிழில் சாஸ்திரப் பரிபாஷை' என்ற கட்டுரையில் வெளிப்படுத்தி உள்ளார்.
''கி.பி.1903 டிசம்பர் 17 அன்று அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் முதன்முறையாக ஆகாய விமானத்தை வானில் பறக்கவிட்டனர். 12 நொடிகளில் 120 அடி தூரம் பறந்தது அந்த விமானம். 
அடுத்த ஆறேழு ஆண்டுகளுக்குள் சென்னையில் வான ஊர்தி தயாரிக்கப்பட்டது. அந்தச் செய்தியைப் பாரதியார், புதுவையில் இருந்து வெளியான 'இந்தியா' (19-02-1910) ஏட்டினில் 'சென்னையில் செய்யப்பட்ட விமானம்' எனும் தலைப்பில் வெளியிட்டார். டி ஏஞ்சலிஸ் என்ற பிரெஞ்சு ஹோட்டல் முதலாளியின் திட்டப்படி, சிம்ப்சன் கம்பெனிப் பட்டறையில், ''தமிழ் வேலைக்காரர்களால்'' கட்டப்பெற்றது என்பதில் பூரிப்பு அடைகிறார்.
பாரதி என்னும் சூரிய மண்டலத்தில் ஒன்பது கோள்கள் - மொழியுணர்வில் பாவேந்தர், தேசியச் சிந்தனையில் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, சக்தி உபாசனையில் 'பால பாரதி' ச.து.சுப்பிரமணிய யோகியார், ஆன்மிக வீரத்தில் சுத்தானந்த பாரதி, கருணா ரசத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, பொதுவுடைமையில் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், வசன கவிதையில் ந.பிச்சமூர்த்தி, கண்ணனைப் போற்றும் கண்ணதாசனார், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.
ஏதானாலும், பாரதி எடுத்தாண்ட கருப்பொருள்களின் அடிப்படையில் கவனித்தால், ''நமது தேசத்தில் (அறிவியல்) சாஸ்திரப் படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேக்ஷிக்கிறார்கள். இதற்கு மற்ற மனிதர்களிடமிருந்து தக்க உப பலம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்நோக்கத்தை மறந்துவிடலாகாது. ஊதுகிறபோது, ஊதினால் விடிகிறபோது விடியும்'' என்பதுதான் பாரதியின் பத்தாவது அறிவியல் அவதாரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.