நம்பிக்கையை விதைப்பது அவசியம்
நேபாள நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருப்பது இந்தியாவுக்குப் பாதகம் எனவும், சீனாவுக்கு சாதகம் எனவும் பல்வேறு


நேபாள நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருப்பது இந்தியாவுக்குப் பாதகம் எனவும், சீனாவுக்கு சாதகம் எனவும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கும், புதிய அரசியலமைப்பு சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட 7 மாகாண சட்டப் பேரவைகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும், புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் மையம் கட்சியும் இணைந்த இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியுள்ளது. ஒரு மாகாண பேரவையில் மட்டும் மதேசி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இத்தேர்தலில் சீன ஆதரவு இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது இந்தியாவுக்கு அதிர்ச்சிகரமான செய்தி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தலில் நேபாளி காங்கிரஸ் கட்சி தோற்றுப்போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, அதற்குப் பதிலடியாக பெரிய கூட்டணியை நேபாளி காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்த முடியவில்லை.
மேலும், பிரசாரத்தின்போது, தங்களது சாதனைகளைச் சொல்லாமல், இடதுசாரிகள் வெற்றி பெற்றால் ஏற்படும் பாதகங்களை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி பிரசாரம் செய்தது எதிர்மறையாகிப் போனது.
இதையெல்லாம்விட இந்திய எதிர்ப்பு மனப்பான்மையை இடதுசாரி கூட்டணி மக்களிடையே பெரும் அரசியலாக்கியது அக்கூட்டணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் கே.பி.சர்மா ஓலியும், பிரசண்டாவும் தேர்தல் பிரசாரத்தின்போதே, இந்திய எதிர்ப்புக் கருத்துகளை பகிரங்கமாகத் தெரிவித்தனர். இந்தியாவை மட்டுமே நேபாளம் நம்பியிருக்கும் நிலையை மாற்றப்போவதாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை நேபாள மக்களுக்கு ஏற்பட்டது ஏன்? புவியியல், கலாசாரம், பாரம்பரியம் என இந்தியா-நேபாளம் இடையே நீண்ட நெடுங்கால நல்லுறவு இருந்து வருகிறது. 2015, செப்டம்பரில் நேபாளம் தனது புதிய அரசியல் சாசனத்தை அறிவித்தபோது, அந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
அந்த அரசியல் சாசனப்படி, இந்தியாவுடனான தெற்கு எல்லையில் வாழும் மதேசி உள்ளிட்ட இன மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மைதிலி, பஜிகா, போஜ்புரி மொழிகளைப் பேசும் மதேசிகள், இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாரில் வாழும் இதே மொழிகளைப் பேசும் மக்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கின்றனர். புதிய அரசியல் சாசனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த மதேசி இன மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குள் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இதனால், 5 மாத காலம் நேபாளத்தில், பெட்ரோல், மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மதேசிகளின் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்ததாகக் கூறப்பட்டதால், சாமானிய மக்கள் மத்தியில் இந்தியா மீது ஏற்பட்ட அச்சத்தை இத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி அறுவடை செய்துள்ளது.
இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஷேர் பகதூர் தாபா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நேபாள வளர்ச்சியைத் தடுக்கும் என இடதுசாரிகள் மேற்கொண்ட பிரசாரம் அவர்களுக்கு கைகொடுத்தது.
மன்னராட்சி, நீண்டகால உள்நாட்டுச் சண்டை, இயற்கைச் சீற்றம் என 70 ஆண்டு அமைதியின்மைக்குப் பிறகு நடைபெற்ற இத்தேர்தலில் சீன ஆதரவுள்ள இடதுசாரிகளுக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பது, இந்தியாவுக்கு எதிரானது என்று மட்டுமே கூறிவிட முடியாது.
இடதுசாரிகள் தங்களது சீன ஆதரவை இப்போது திடீரென வெளிப்படுத்திவிடவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிவிட்டாலும் இடதுசாரி கூட்டணிக்கு இனிதான் பெரும் சவால் காத்திருக்கிறது. பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் இரு இடதுசாரி கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். தேர்தல் களத்தில் பல வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டாலும், தங்களது இரு பெரும் அண்டை நாடுகளான இந்தியா, சீனாவை திருப்திப்படுத்த வேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு உள்ளது.
"நேபாளத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என விரும்பும் எந்த ஓர் அரசாக இருந்தாலும், இந்தியாவுடன் நல்ல உறவைப் பேண வேண்டியது அவசியம்' என்ற இந்தியாவுக்கான முன்னாள் நேபாள தூதர் தீப் உபாத்யாயாவின் கருத்து இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.
நேபாளத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டிய விஷயங்களும் உள்ளன.
சீன ஆதரவு இடதுசாரி கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதை நினைத்து கவலைகொள்ளத் தேவையில்லை. நேபாள மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்டு, அங்கு முன்னரே இந்தியா தொடங்கியுள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.
இலங்கை, நேபாளம், பூடான் என இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் கரங்கள் படியத் தொடங்குவதை கருத்தில்கொண்டு, நேபாள மக்கள் மனதில் நீண்டகால நம்பிக்கையை விதைக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...