சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உதயை மு. வீரையன்

கிராமங்கள் ஒரு தேசத்தின் உயிர்நாடிகள். இயற்கைத் தாயின் கோயில்கள். ஆனால் இந்தக் கோயில்களில் வழிபாடுகள் நடைபெறவில்லை. வெüவால்கள் மட்டுமே வாழும் சிதலமாகி விட்ட ஆலயங்களைப்போல ஆகிவிட்டன. சொத்துக்கள் இல்லாத கோயில்களில் பூசைகளும், திருவிழாக்களும் ஏது?
நான் ஊருக்குச் சென்றபோது, அன்போடு வரவேற்கும் முகங்கள் எல்லாம் வாடிக் கிடந்தன. ஆர்வமும், அரவணைப்பும் குறைந்து போய்விட்டது. ஏக்கங்களும், எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளுமே தென்பட்டன. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் கிராமங்களா இவை? வறுமையால் வாடி, பஞ்சம் பிழைக்க வந்தவர்களை யெல்லாம் வரவேற்று வாழ்வளித்த சோழ நாடா இது?
சோழ நாடு சோறுடைத்து என்பது இதுவரை வழங்கி வந்த வரலாற்று உண்மை. இது அதற்குள் இறந்த காலப் பெருமையாகப் போய்விட்டதா? காவிரி டெல்டா என்பது தமிழகத்துக்கே உணவளிக்கும் நெற்களஞ்சியம். இந்தக் களஞ்சியமே காலியாகிவிட்டதா?
எங்கும் வறட்சி. ஏரி, குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன. கடுமையான குடிநீர்ப் பஞ்சம். அவர்களே தட்டேந்தும் அவல நிலையை இயற்கையே உருவாக்கி விட்டது. இப்போது ரேஷன் அரிசிக்காக கூட்டுறவுக் கடைகளில் தவம். வாங்கிப் பொங்க வேண்டிய வறுமை.
ஒரே ஆண்டில் எவ்வளவு தலைகீழ் மாற்றங்கள். கடந்த ஆண்டு காவிரி நீரும் கிடைக்கவில்லை. பருவ மழையும் பொழியவில்லை, பொய்த்துவிட்டது. ஆடிப்பட்டம் தேடி விதை, பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிகள் வீணாயின. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்ற குறளும் பொருளற்று போய்விட்டது.
காவிரி நீர் யாருக்குச் சொந்தம் என்று தமிழக அரசும், கர்நாடக அரசும் நடத்திய பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. நீதிபதிகள் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. தமிழக அரசும் விடுவதாக இல்லை. இந்தப் போட்டியில் நெற்களஞ்சியம் பாழானது.
குறுவையும் போய், சம்பாவும் விளைந்து நீரில்லாமல் கருகி ஆடு, மாடுகளுக்கு உணவாயின. பத்திரிகைகளுக்குச் செய்தியாயின. தன்மானமும், தன்னம்பிக்கையும் கொண்ட உழவர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டனர். வறுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அரசாங்கம் புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டது. நிவாரணம் வழங்கவும் மறுத்தது. விவசாயிகளின் உழைப்பு மட்டுமல்ல, உயிரும் மலிவாகி விட்டது.
இந்தியாவில் 70 விழுக்காட்டினர் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். விவசாயத்தையே நம்பி வாழும் 70 விழுக்காடு மக்களில் 35 விழுக்காட்டினர் - அதாவது சரி பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்.
இந்த மக்களுக்காக இதுவரை வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் எவ்வித உருப்படியான திட்டமும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும். அதனால்தான் விவசாயிகளின் இந்தப் பிரச்னை இப்போது தமிழ்நாட்டிலிருந்து தில்லி வரையில் போயிருக்கிறது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மார்ச் 14 முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகள் இதுபற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் தேசிய வங்கிகளில் சேர்ந்துள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூ.39 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னக நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தனை நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் கவனம் விவசாயிகள் பக்கம் திரும்பவில்லை. உலகமும், ஊடகங்களும் அவர்களது விதவிதமாக போராட்ட வடிவங்களைக் கண்டு வியந்து பேசுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி மெüனியாகி விட்டார். மத்திய அரசு தங்களது தொழில்துறை கூட்டாளிகளுக்கு வாரி வழங்குகிறதே தவிர, விவசாயிகளை ஏறிட்டும் பார்ப்பதில்லை.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாகும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க மத்திய - மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுக்கு வசதி செய்து கொடுத்தது. அந்த வாழ்வா, சாவா போராட்டத்துக்குப் பிறகு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அது இப்போது ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் புது அவதாரம் எடுத்துள்ளது. இதன் ஆபத்தை உணர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தமிழகமே திரண்டு எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தத் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்படாது என்று மாநில அரசும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உறுதியளித்தனர்.
இந்த நிலையில் இப்போது நெடுவாசல், காரைக்கால் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 27 அன்று கையெழுத்தானது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் மத்திய அரசுக்கும், 22 நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையொழுத்தானது.
இவற்றில் 17 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், 4 பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு நிறுவனம் வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஆகும்.
மாநில அரசு உள்ளூர் மக்களின் ஐயங்களைப் போக்கி உரிய அனுமதி வழங்கிய பிறகே இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இந்த உறுதி மொழிகளை நீரில்தான் எழுத வேண்டும். கடந்த கால அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறந்த அனுபவம்தான்.
இந்தத் திட்டத்தினால் அரசுக்குத் தோராயமாக ரூ.46 ஆயிரத்து 400 கோடி வருமானம் கிடைக்கும். ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டப்பணிகள் மூலமாக இந்தியா முழுவதும் சுமார் 37,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி என்ற பெயரால் விவசாயம் முற்றிலும் அழிக்கப்படுகிறது என்ற அச்சம் கிராமவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மீத்தேன் திட்டத்தைத் தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதைத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, 13 மாவட்டங்கள் வழியாக புதிய இயற்கை எரிவாயு குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 4 வழித்தடங்களில் இந்த எரிவாயு குழாய் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக சென்னை எண்ணூரிலிருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருவுக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.
இதனால் வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் செய்யாமல், மிகவும் குறைந்த விழுக்காடு உள்ள தொழில் முனைவோருக்கு மட்டுமே சலுகைகளும், வசதிகளும் செய்து அவர்கள் திருப்தியடையும் வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.
தொழில் துறைக்கு ஊக்கமளிப்பது தவறல்ல. உலகப் பொருளாதாரத்தை நோக்கி இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்காக அவ்வாறு செய்யப்படுவதாக இருந்தாலும், 70 விழுக்காடு மக்களை வாங்கும் சக்தியற்றவர்களாக வைத்துக் கொண்டு எதனைச் சாதிக்க முடியும்?
இரண்டு கால்களில் ஒன்று மட்டும் பெருத்துக் கொண்டே போனால், அதனை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அது ஒரு வகை நோயாகும். பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரத்தினைப் பற்றிக் கவலைப்படாமல் உற்பத்தியைப் பெருக்கினாலும் வாங்கும் சக்தியில்லாத மக்களிடம் அவை எப்படிப் போய்ச் சேரும்?
"கிராமங்கள் அழிந்தால் இந்தியாவும் அழிந்து விடும். இந்தியா, பிறகு இந்தியாவாகவே இருக்காது. இனி சுரண்டுவதில்லை என்ற நிலை ஏற்பட்டால்தான் கிராமங்கள் புத்துயிர் பெறுவது சாத்தியம்...' என்றார் மகாத்மா காந்தியடிகள். அவரது ஆதங்கம் அப்படியே இன்னும் நீடிக்கிறது.
இந்த நாடு கிராமங்களையும், கிராமங்கள் விவசாயத்தையுமே உயிர் நாடியாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை மறந்து விட்டு ஆட்சிபுரிவது ஆபத்தானது. சோழ நாட்டின் சோகம் தரும் எச்சரிக்கை இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.