/

கானுயிர் கருவூலம் காப்போம்!

இயற்கையின் பெருங்கொடையாக இந்தியாவுக்கு வாய்த்திருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் தொடங்கி,

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:13 pm

ஜெயபாஸ்கரன்

இயற்கையின் பெருங்கொடையாக இந்தியாவுக்கு வாய்த்திருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் தொடங்கி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை 1,600 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் நீண்டிருக்கும் அம்மலைத் தொடர், சராசரியாகத் 900 மீட்டர் உயரமும், 1,29,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் இயற்கையெழிலுக்கு அம்மலைத் தொடரே காரணம்.
மராட்டிய மாநிலத்தில்-4, கர்நாடகத்தில்-10, கேரளத்தில்}20, தமிழ்நாட்டில்-5 என மொத்தம் 39 கானுயிர்க் காப்பகங்கள் அம்மலைத் தொடர் நெடுகிலும் உண்டு. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகைத் தாவரங்கள், 134 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவைகள், 325 வகையான அரிய உயிரினங்கள் என்று அம்மலைத் தொடர் முழுவதும் உள்ளன.
காவிரி, பாலாறு, பெரியாறு, வைகை, தாமிரபரணி, மணிமுத்தாறு, கபினி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் உற்பத்திக் கேந்திரமாக விளங்குபவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் தான்.
குறிப்பாக, வைகையும், தாமிரபரணியும் அம்மலைத் தொடரின் தமிழகப் பகுதிகளிலேயே உற்பத்தியாகின்றன. எனவே அவையிரண்டும் அண்டை மாநிலங்களோடு தண்ணீர் தகராறுகளை ஏற்படுத்தாத தமிழக ஆறுகளாகும்.
தமிழகம் முழுவதும் இன்று பாய்ந்தும், காய்ந்தும் கொண்டிருக்கின்ற ஆறுகளும், சிற்றாறுகளும், அணைகளும், கண்மாய்களும், குளங்களும், குட்டைகளும், வாய்க்கால்களும், வடிகால் பகுதிகளும், சதுப்பு நிலங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் நமக்களித்திருக்கின்ற கொடைகளாகும். இத்தகைய நீர்நிலைகளின் கிளைப் பயன்கள் வேளாண்மைக்கு அப்பாற்பட்டும் விரிகின்றன.
உலக அளவிலான கோடிக்கணக்கான கானுயிர்களின் களஞ்சியமாகத் திகழ்கின்ற 34 இயற்கை வாழிடங்களில், தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியும் ஒன்று என ஐக்கிய நாடுகளின் அவையால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், இன்றைய மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலவுகின்ற கடும் வறட்சி, வன அழிப்பு வேலைகள், பல்வேறு வகையான திட்டங்கள் போன்றவற்றின் காரணமாக அவற்றிலிருந்து பல நூற்றுக்கணக்கான கானுயிர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டன. அவை கொடும்பசியிலும், தாகத்திலும் உயிர்விட நேர்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கைச் செல்வங்களான ஆறுகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்துகூட போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டம், நமது மொத்த நிலப்பரப்பில் 33 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு மாநிலமும் அதன் பரப்பளவில் 33 விழுக்காடு வனங்களையாவது பெற்றிருந்தால்தான் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்குப் போதிய உயிர்வளி (ஆக்சிஜன்) கிடைக்கும்.
உயிர்வளி குறையும்போது மனிதர்களின் உழைப்பாற்றலும் குறைந்துவிடும். இன்றைய தமிழகம் தேவையான வனப் பரப்பைப் பெற்றிருக்கவில்லை.
1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை தமிழகப் பகுதிகளாக இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பரப்பின் கணிசமான பகுதிகள் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. வெறும் 11 விழுக்காடு வனப்பரப்பு மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது.
அதற்கு பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் 6 விழுக்காடு வனப்பரப்புகளை மட்டுமே நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட வனங்களும் பெரும்பாலும் யூகலிப்டஸ், சில்வர் ஓக் போன்ற மழைக்கு உதவி செய்யாத ஊசியிலை வன மரங்கள் என்பது கூடுதல் துயரமாகும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் அதிகம் உள்ள வேலிக்காத்தான் மரங்கள் பயன் மரங்கள் அல்ல. ஆக, இன்றைய தமிழ்நாட்டின் உண்மையான வனப்பரப்பு வெறும் 17 விழுக்காடு மட்டுமே.
உலக அளவில் இந்தியாவில்தான் கானுயிர்கள் அதிக அளவில் அழிந்து வருகின்றன. நமது நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் எண்ணிக்கை 81 விழுக்காடு குறைந்திருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பூமியிலுள்ள காடுகளையும் அவற்றின் உயிர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு மனிதர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றெண்ணிச் செயல்பட்டால் காலப்போக்கில் இங்கு மனிதர்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதே உண்மை.
இன்னும் நான்கே ஆண்டுகளில் உலகில் உள்ள வன உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துவிடக்கூடும் என உலக வனவிலங்கு நிதியம் எச்சரித்திருக்கிறது.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆனால் அந்தப் பொறுப்பு சூழலியல் ஆர்வலர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒன்றாக சித்திரிக்கப்படுகிறது. வன வளங்கள் அழிக்கப்படுவதும், வன விலங்குகள் கொல்லப்படுவதும், இயற்கை ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளுக்குள் வாழவேண்டிய யானைகளும், காட்டெருமைகளும், சிறுத்தைகளும், புலிகளும் ஏன் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறுகின்றன என்கிற சிந்தனையைவிட அவை வெளியேறி வந்து நடத்துகின்ற தாக்குதல் செய்திகளுக்கே நமது சமூகம் பழகிவிட்டது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையோர வனப்பகுதிகள் அனைத்தும் கல்விக் கூடங்களாலும், ஆசிரமங்களாலும், பண்ணை வளாகங்களாலும், உல்லாச விடுதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
மலையோரங்களின் பாதுகாப்பு நடைமுறையாக இருக்கின்ற மின்வேலி கலாசாரம், வலசை வருகின்ற கானுயிர்களை கொடூரமான முறையில் கொல்கிறது. மலைப்பகுதிகளையொட்டிய வனவெளிகள் விவசாய வெளிகளாக மாற்றப்பட்டு விட்டன.
வனங்களுக்குள் கானுயிர்களுக்கு நீராதார வசதி இல்லாததால் அவை வனங்களை விட்டு வெளியேறுகின்றன. அப்படி வெளியேறும்போது, வனத்தின் விளிம்பே விளைநிலங்களாக இருப்பதால் மோதல்கள் நடக்கின்றன.
வனவிலங்குகளின் வாழ்வாதார வெளிகள் சுருக்கப்பட்டு விட்டதால் அவற்றின் நடமாட்டம் ஒவ்வொரு நாளும் முடக்கப்படுகிறது. வனப் பகுதிகளின் விளிம்பில், யானைப் பள்ளம் என்ற பெயரில் ஆழமும், நீளமும் உடைய பெரிய பெரிய அகழிகளை வெட்டி யானைகளும் காட்டெருமைகளும் வனத்தைவிட்டு வெளியேறாமல் அவற்றை வனத்துக்குள்ளேயே முடக்கி வைக்கின்ற ஒரு திட்டத்தை யும் வனத்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.
பாவப்பட்ட கானுயிர்களால் வனத்திற்குள்ளும் வாழ முடியவில்லை, அகழிகள், மின்வேலிகள் போன்றவற்றைத் தாண்டி வெளியேறவும் முடியவில்லை. என்றாலும் வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் பசி மற்றும் தாகம் காரணமாக அவை மூர்க்கமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
உயிர் பிழைப்பதற்காக வனங்களில் இருந்து வெளியேறுகின்ற கானுயிர்கள், தரைக்கிணறுகளில் விழுந்தும், விரட்டி விரட்டி மக்களால் கொல்லப்பட்டும், அவற்றுக்கு வைக்கப்பட்ட நச்சு உணவுகளை உட்கொண்டும், மின்வேலிகள் மற்றும் அகழிகளில் சிக்கியும் இறந்து போகின்றன.
அவ்வப்போது வனத்துக்குள் மூண்டெழுந்து பரவுகின்ற தீயும் ஆயிரக்கணக்கான கானுயிர்களைப் பலி கொள்கின்றன. கொடும்பசிக்கு வேலிக்காத்தான் முட்செடிகளை உண்டு செரிமானக் கோளாறு ஏற்பட்டு யானைகள் உயிர்விடுவதும் பல இடங்களில் நடக்கிறது.
தமிழக மலை வனங்களில் உயிரிழந்த, கொல்லப்பட்ட கானுயிர்களின் எண்ணிக்கை விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 1,200-க்கும் மேற்பட்ட யானைகளும், 10 ஆண்டுகளில் 45 புலிகளும், 5 ஆண்டுகளில் 60 சிறுத்தைகளும் இறந்துள்ளன. காட்டெருமைகள், கரடிகள், மிளா உள்ளிட்ட பலவகை மான்களும் ஏராளமாக இறந்துள்ளன.
வனவிலங்குகளுடன் நேரிட்ட மோதல்களில் கடந்த 10 ஆண்டுகளில் 400 மனிதர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கோவை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இவ்வகை
மனித உயிரிழப்புகள் மிகக் கூடுதலாக நிகழ்கின்றன.
கானுயிர்களின் குடிநீருக்காக குட்டைகள் அமைப்பதாலோ, புல்லுண்ணிகளுக்கான புற்கள் மற்றும் செடிகளை வளர்ப்பதாலோ, மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைப் பாதுகாக்க முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காக்க இரும்புக்கர நடவடிக்கையே தேவை. மலைகளும், மலைகள் சார்ந்தவையுமான குறிஞ்சி நிலத்துக்கு கானுயிர்களின் உணவு மற்றும் உலா வெளிகளாகவும் விளங்குபவை, காடும் காடு சார்ந்த முல்லை நில வெளிகளாகும்.
இன்றைய தமிழகத்தில் முல்லை என்கிற நிலப்பரப்பே இல்லை. முன்னொரு காலத்தில் இருந்த அந்த முல்லை நிலங்கள்தான் தற்போதைய வேளாண் பண்ணைகளாகவும், கல்விக் கூடங்களாகவும், ஆசிரமங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பல்வகை அரசுத் திட்டங்களுக்கான களங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. முல்லை நிலம் முழுதும் கட்டடங்களை கட்டிக் கொண்டு குறிஞ்சி நிலத்தைப் பாதுகாப்போம் என்பது நகைமுரண்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புக்கு இப்போது தேவை, அவற்றையொட்டிய வன விரிவாக்கமே. அதாவது கானுயிர்களின் வாழ்விடத்தை மீண்டும் அவற்றிடமே ஒப்படைத்துவிட்டு நாம் வெளியேற வேண்டும்.
இதைச் செய்யத் தவறினால், வனவிலங்குகள் நாள்தோறும் ஊர்களுக்குள் நுழைவதையும், மலை வனப்பகுதிகள் கானுயிர்களற்று வெறிச்சோடிப் போவதையும், மழை பொய்த்து நதிகளின் உருவாக்கம் நின்றுபோய் நாடு நிலைகுலைந்து சிதைவதையும் யாராலும் தடுக்க முடியாது.
மலைக்காடுகள் என்பவை வெறும் மலைக்காடுகள் மட்டுமல்ல. நமக்கு உயிராதாரமாக விளங்கும் நீரைத் தருகின்ற மழைக்காடுகளும் ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து மத்திய அரசினால் அமைக்கப்பட்ட காட்கில் குழு 2012-ஆம் ஆண்டு தனது அறிக்கையை அளித்தது. ஆனால் அந்த அறிக்கையின் கழுத்தை நெரிக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு அமைக்கப்பட்டது.
இவ்விரு குழுவினரின் அறிக்கைகள் தொடர்பான குளறுபடிகளால் மத்திய அரசும், மாநில அரசுகளும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஒருவழியாக அவை என்றேனும் ஒரு நாள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

கட்டுரையாளர்:
கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.