நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்திய நதிநீர் பிரச்னைகள்!

உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இன்றைக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:27 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இன்றைக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தியப் பிரதமர் பண்டித நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இடையே 19-9-1960-இல் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்த முதன்முதலாக 1965-இல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்த ஷரத்து பிரிவு 8-இன் படி இந்த ஆணையம் வருடத்திற்கு ஒரு முறை கூடிப் பேசவேண்டும். ஆனால் இதற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து உள்ளிட்ட ஆறு நதிகள் தொகுப்பில், சிந்து நதிக்கு கிழக்கே உள்ள ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளை இந்தியா முழுவதும் பயன்படுத்திக்கொள்வது என்றும், மேற்குபுறத்தில் இருந்த ஜீலம், செனாப், இண்டஸ் ஆகிய நதிகளை பாகிஸ்தான் முழுமையாக பயன்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
சிந்து நதியிலிருந்து 80 சதவீத தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இதனால் 2 கோடியே 60 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகின்றது. குடிநீருக்கும் அந்த நாட்டிற்கு சிந்து நதிநீர்தான் முழுமையாகப் பயன்படுகின்றது. இதில் என்ன வேதனையென்றால், திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி தீரத்தில் 93 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்து
கிறது. சீனா 2 சதவீதம், இந்தியா 5 சதவீதம் மட்டும்தான் சிந்து நதியின் தண்ணீரை பயன்படுத்துகிறது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்தை நிறைவேற செய்தது.
சிந்து நதிநீர் பகிர்வு, எல்லைப் பிரச்னை குறித்து 1950-இல் இரு குழுக்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. இரு குழுக்களின் தலைவர்களும் லாகூரில் ஒன்றாகப் படித்தத் தோழர்கள். இந்தியக் குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஸ்வரண்சிங், பாகிஸ்தான் குழுத் தலைவர் சிக்கந்தர் அலி பெக் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை சிக்கலின்றி முடிந்தது.
பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் டாக்காவுக்கு செல்லும் வழியில் டெல்லி பாலம் விமான நிலையத்தில் இறங்கி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நேருவை சந்தித்து இது குறித்து இறுதிப்படுத்தினார். இதற்குப் பின் 19-23, செப்டம்பர் 1960-இல் நேரு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில் சிந்து நதிநீர் உடன்பாடு முழுமைப் பெற்றது.
ஆரம்பத்தில் 13 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம் என்று உடன்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த செலவு 107 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் பாகிஸ்தான் பங்கு 87 கோடி அமெரிக்க டாலர்கள்.
இந்த ஒப்பந்தத்தில் நேருவும், அயூப்கானும் மிகுந்த ஈடுபாடு காட்டினர்.
அயூப்கான் "சிந்து நதிநீரை இந்தியாவின் பாலைவனப் பகுதியான ராஜஸ்தானுக்கும் திருப்பிவிடத் தயார். ஆற்றின் கீழ்ப் பகுதியில் அதற்காக அணைக் கட்டுவோம். பலூசிஸ்தான் பகுதியில் கிடைக்கும் இயற்கை நில வாயுவை பம்பாய்க்கு அனுப்பத் தயார்' என்றெல்லாம் பேசினார். பதிலுக்கு "லாகூரிலிருந்து டாக்காவுக்கு இந்திய நிலப் பகுதி வழியாக ரயில்களை இயக்கப் பரிசீலிக்கத் தயார்' என்று இந்தியக் குழுவினர் பேசினர்.
இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவது குறித்து கூட விவாதிக்கப்பட்டது. ஆனாலும் மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரை முழுமையாக தங்களுக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக எழுந்தது.
சிந்து நதிநீர் பங்கீடு குறித்து மறுபரி
சீலனை என்று அண்மையில் இந்தியா அறிவித்தவுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திராவை தடுக்க முயல்கிறது.
இங்கு ஐந்து அணைகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஷாங்மூ என்ற இடத்தில் நீர்மின் நிலையமும் ஜியாபுக்கு என்ற இடத்தில் அணையும் கட்டி வருகிறது. இதிலிருந்துதான் அருணாச்சலப் பிரதேசத்திற்கு நீர்வரத்து கிடைக்கின்றது.
சீனாவிடம் 2013-இல் இது குறித்து இந்தியா பேசியும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. திடீரென சீனா இதில் முரண்டு பிடிப்பதற்கு பாகிஸ்தான் காரணமாக இருக்குமோயத என்ற ஐயம் ஏற்படுகிறது.
பிரதமர் தலைமையில் கடந்த 26.9.2016-இல் நடந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை:
இதுவரை பாகிஸ்தான் முழுமையாக பயன்படுத்திய ஜீலம், செனாப், சிந்து நதிகளின் நீரை இனிமேல் இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய நீர்ப் பாசனத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் பங்கீடு ஆணையக் கூட்டம் 112 முறை நடந்துள்ளது. இனிமேல் அந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்காது.
பாகிஸ்தானுக்குள் ஓடிய மூன்று நதிகளில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்
படும்.
ஜீலம் நதியில் காஷ்மீர் மாநிலத்தில் தொடங்கப்பட்ட துல்புல் நீர்மின் திட்டம் 1987-இல் நிறுத்தப்பட்டது. திரும்பவும் அந்தப் பணி துவங்கப்படும்.
சிந்து நதியின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, முழுமையாக ஆய்ந்து, நீர் வரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்கு நீர்வளம், வெளியுறவு, நிதி, மின்துறை அமைச்சகங்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
ஒப்பந்தத்தின்படி 9.12 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். அவசியம் ஏற்பட்டால், மேலும் 4.2 ஏக்கருக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் எட்டு லட்சம் ஏக்கருக்கான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்நதியில், 18,600 மெகாவாட் திறனுள்ள, நீர்மின் திட்டத்தை இந்தியா நிறுவ முடியும். ஆனால் இதுவரை 3,034 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 2,525 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள திட்டம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. 5,846 மெகாவாட் திட்டம் அனுமதிக்காக காத்திருக்கிறது. இவற்றை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் முறையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்பாராத பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே மத்தியஸ்தம் செய்த உலக வங்கி திரும்பவும் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என்று கூறியது. வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்திற்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் அட்டர்னி ஜெனரல் அஸ்தார் ஆஸப் அலி, அமெரிக்காவின் பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஆகியோர் நேரிடையாக சென்று முறையிட்டுள்ளனர்.
இதற்கான நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்திற்கும் இதை எடுத்துச்செல்வோம் என்று பாகிஸ்தான் கொக்கரிக்கின்றது. 1996 காட் ஒப்பந்தத்தின்போது இந்தியா பாகிஸ்தானை மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது தவறாகப் போய்விட்டது. இதனால் இந்தியாவின் வர்த்தகத்தில் பாகிஸ்தானுக்கு சில சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்னைகள் உள்ளன. அந்தப் பிரச்னைகளக்கு ஆதரவாக, தற்போது எடுக்கப்பட்ட சிந்து நதிநீர் குறித்த முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு பேசக்கூடாது. இந்தப் பிரச்னை வேறு. கர்நாடகாவிற்கும், நமக்கும் நடக்கும் பிரச்னை வேறு. காவிரிப் பிரச்னை, ஒகேனக்கல் பிரச்னை, தென்பெண்ணை ஆற்றுப் பிரச்னை, கேரளத்தோடு நெய்யாறு, உள்ளாறு, செண்பகத்தோப்பு, முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா போன்ற சிக்கல்களுக்கும், ஆந்திராவோடு உள்ள பாலாறு, பொன்னியாறு பிரச்னைகளுக்கும் இதைவைத்து முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.
இந்தியாவில் பஞ்சாபுக்கும், ஹரியாணாவுக்கும் சட்லஜ்-யமுனா நதிநீர் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டது. இரண்டு மாநிலங்கள் பிரிந்தபோது, தீராப் பிரச்னையாக இருந்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், 2004-இல் குடியரசுத் தலைவருடைய தலையீட்டால் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் இப்பிரச்னைத் தீராமல் உள்ளது.
மகாநதி நீர் பங்கீடு குறித்து ஒடிஸாவும், சத்தீஸ்கருக்கும் பிரச்னை. ஹிராகுட் அணையில் நீர்த்தேக்கம் குறித்து பிரச்னைகள் எழுந்தன. முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னை. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரத்துக்கு இடையில் கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்னையும் தீர்க்கப்படாத சிக்கலாக இருந்தாலும், காவிரி மாதிரி இல்லாமல் நீர் பங்கீடு ஓரளவு முறைப்படுத்தப்படுகிறது. கோதாவரி நதி நீர்ப் பிரச்னையில் ஒடிஸா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் கோலாவரம் அணை கட்டும் பிரச்னை உள்ளது.
வன்சதாரா நதிநீர் பிரச்னை ஒடிஸா-ஆந்திரப் பிரதேசம் இடையில் சிக்கலாக உள்ளது. இது குறித்து விசாரிக்க 2010-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மகாதாயி மண்டோவி நதிநீர் சிக்கல் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே நிலவுகிறது. இதையும் விசாரிக்க 2010-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
நர்மதா ஆற்றுநீர் குறித்து குஜராத், மகாராஷ்டிராம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் இடையே பிரச்னையாகி, 1979-இல் நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கிடையில் நடந்த கோதாவரி நதிநீர் பிரச்னையிலும் 1980-இல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதைப்போலவே கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்னையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நடந்த பிரச்னையில் 1976-இல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் காவிரிக்கு மட்டும் தீர்ப்பு வந்தும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எல்லை தாண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் பிரச்னையில் நாம் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். நாட்டு விடுதலைக்குப் பின் இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் பாகிஸ்தானுக்கு பெருந்தன்மையாக 93 சதவீத தண்ணீரை கொடுத்தோம்.
நதிகள் இயற்கையாக பாய்ந்தோடுவதை யாராலும் தடுக்க முடியாது. அது இயற்கையின் அருட்கொடை. உலக நாடுகளுக்கு மத்தியில் நதிகள் பாய்ந்தோடுகின்றன. சகோதர பாசத்தோடு நதிநீரை அந்த நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அந்த மனித நேயம் இந்தியா என்ற சமஷ்டி அமைப்பில் வரவில்லை என்பதுதான் வேதனை.

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.