அமைதி திரும்பியது
கொலம்பியாவில் அரசுக்கும், அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஃபார்க் அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது


கொலம்பியாவில் அரசுக்கும், அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஃபார்க் அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமன்றி உலகம் முழுவதுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சுமார் 50 ஆண்டு காலமாக நீடித்து வந்த, இந்த சண்டை, நான்கு ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வெற்றியில் முடிந்திருப்பதற்கு அதிபர் ஜான் மனுவேல் சன்டோஸின் தீவிர முயற்சியே காரணம். ஃபார்க் அமைப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடுத்தே அதிபர் பதவிக்கு வந்தவர் சன்டோஸ்.
கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் ஈர்க்கப்பட்டு 1964ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ஃபார்க் இயக்கம். கொலம்பிய ஆயுதப் புரட்சிக் குழு என்பதே ஸ்பானிஷ் மொழியில் சுருக்கமாக ஃபார்க்.
அந்த காலகட்டத்தில் கொலம்பியாவில் பெரும்பாலான நிலங்கள் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருந்தன. இந்த நிலபிரபுத்துவத்துக்கு எதிராக கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களால் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் அரசுக்கு எதிராக சிறிய அளவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், நாளடைவில் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர், நிதி ஆதாரத்துக்காக ஆள் கடத்தல், கோகெய்ன் எனும் போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடத் தொடங்கியது.
இன்றளவில் பெரும் பணக்கார அரசு எதிர்ப்பு இயக்கங்களுள் ஒன்றாக ஃபார்க் உள்ளது. அரசு பாதுகாப்புப் படைகள்தான் ஃபார்க்கின் முதல் எதிரி. பொதுவாக அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டதாக ஃபார்க் கூறினாலும், அதன் தாக்குதலுக்கு இலக்கானது அப்பாவி பொதுமக்களே.
அரசுப் படைக்கும், ஃபார்க் இயக்கத்தினருக்கும் இடையேயான சண்டையில் இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.
சமீப காலமாக ஃபார்க் இயக்கத்துக்கு எதிரான அரசுப் படையின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. அமெரிக்காவும் இதற்காக கொலம்பிய அரசுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்தது. ஃபார்க் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர்.
சுமார் 20 ஆயிரமாக இருந்த அதன் படைபலம், வெறும் எட்டாயிரமாகக் குறைந்தது. இதையடுத்து, அந்த இயக்கம் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. கொலம்பியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சன்டோஸ், 2010-இல் அதிபர் பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டதும் ஃபார்க் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டார்.
கியூபாவின் ஹவானா நகரில் கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் இயக்கத்துக்கும் 2012-இல் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 4 ஆண்டு நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
இரு தரப்புக்கும் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அதை உடனே அமல்படுத்தாமல் மக்களின் வாக்கெடுப்புக்கு விட்டார் அதிபர் சன்டோஸ். அந்த ஒப்பந்தத்தில் ஃபார்க் இயக்கத்தினருக்கு சாதகமான அம்சங்களே நிறைய இருப்பதாகக் கூறி, வாக்கெடுப்பில் ஒப்பந்தத்தை நிராகரித்தனர் கொலம்பிய மக்கள்.
அதன்பிறகு அதிருப்தியாளர்களின் கருத்தையும் ஆராய்ந்து புதிய அம்சங்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தில் கடந்த வாரம் அதிபர் சன்டோஸ், ஃபார்க் இயக்கத்தின் தலைவர் டிமோக் ஹென்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஃபார்க் இயக்கத்தினர் தங்களது சொத்து விவரங்களை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும், தங்கள் மீதான வழக்குகளை வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் எனக் கோரக் கூடாது ஆகிய புதிய அம்சங்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன.
ஃபார்க் இயக்கத்தினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படாது; அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்; நாடாளுமன்றத்தில் அவர்களது பிரதிநிதிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் போன்ற ஏற்கெனவே உள்ள அம்சங்களும் ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன.
இந்த முறை ஒப்பந்தத்தை மக்கள் வாக்கெடுப்புக்கு விடாமல் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பினார் அதிபர் சன்டோஸ். அது நாடாளுமன்ற மேலவையில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவையிலும் ஏற்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு இன்னும்கூட எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன. சிறுவர்களைப் படையில் சேர்த்தது, ஆள் கடத்தல், கொலைகள், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை அந்நாட்டு மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.
விசாரணைக்குப் பிறகும் அந்த இயக்கத்தினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படாது என்பதும் ஏற்கத்தக்கது இல்லை. ஆனாலும், கொலம்பியாவுக்கு இப்போது தேவை அமைதி. அதற்காக இந்த முயற்சியை மக்கள் வரவேற்கின்றனர்.
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் கொலம்பிய அதிபர் ஜான் மனுவேல் சன்டோஸ். நாட்டில் அமைதியை நிலைநாட்டியிருப்பதன் மூலம் அந்த விருதுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...