/

செய்யாதன செய்யோம்!

இயற்கையின் குழந்தைகள் நாம். இயற்கை எப்போதும் காத்து அரவணைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறது. அகழ்வாரைத் தாங்க நிலமும், மூழ்குவாரை மேலெழுப்ப நீரும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:55 pm

கிருங்கை சேதுபதி

இயற்கையின் குழந்தைகள் நாம். இயற்கை எப்போதும் காத்து அரவணைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறது. அகழ்வாரைத் தாங்க நிலமும், மூழ்குவாரை மேலெழுப்ப நீரும், வரம்பற்று உயர வானமும், தடையற்றுச் சுவாசிக்கக் காற்றும், குளிரற்று வாழ வெப்பமும் கொடுக்கும் இயற்கை ஐம்பூதங்களின் ஆற்றல் மையம்.
அவையாவும் ஆக்கத்திற்கு வழிகோலுபவையேயன்றி, அழிக்க முயல்வன அல்ல. அழிப்பதுகூட, இன்னொரு வகையில் ஆக்கத்திற்குத் துணைபோவதாகவே இருப்பதுதான் இயற்கையின் நியதி.
"மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளி தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை' என்கிறது புறநானூறு.
ஐம்பூதங்களும், தத்தமக்குள் ஒன்றோடொன்று உறவுகொண்டும், முரணியும் இயங்குவதன் வாயிலாக, உயிர்களின் வளர்ச்சிக்கு உதவியே வருகின்றன. வாழும் தகுதியுடையதாய்ப் பூமியை ஆக்கி வளம்கொடுக்கும் இயற்கையைப் பேணத் தவறிய மானுடத்தை, அச்சுறுத்த அல்ல, எச்சரிக்கவே இயற்கை அவ்வப்போது தன்னிருப்பை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இயற்கையோடு இயைந்து இயற்கையாக வாழவேண்டிய மானுடம், வரம்புமீறி, இயற்கையைச் சிதைப்பதையும், வளங்களைச் சுரண்டுவதையும் செய்கிறபோது, இயற்கை தம்மைச் சரிசெய்துகொள்ள முயல்கிறது. அப்போது, நிகழும் பேரிடர்கள் தவிர்க்க இயலாதவை.
எனினும், அவற்றினின்றும் மீள்கிற வழிகளை, இயற்கையே கற்றுக்கொடுத்துவிடுகிறது என்பதே வரலாற்று உண்மை.
வான்தரும் மழையில் நனைந்து காற்றில் உலர்ந்து, வெயிலில் காய்ந்து தானும் வாழ்ந்து மன்னுயிர்களையும் வாழவைக்கும் தாவரங்களின் சங்கமம் இந்த மண். இங்கு இயற்கையை உணர்ந்து இயற்கையோடு இயைந்து இயல்புற வாழ்தலே வாழ்வு. இவ்வாறு "மண்ணில் நல்ல வண்ணம்' வாழ வழிகாட்டுவதே வழிபாடு.
அவ்வாறு கற்றுக்கொண்ட உண்மைகளைக் காலந்தோறும் பேணி வாழ, மனிதம் மேற்கொள்ளும் முயற்சிகள் பின்னர், சடங்குகளாக, உருவெடுக்கின்றன. விழாக்களாக அவை விரிகின்றன. சமுதாய நலன் கொண்ட அவ்விழாக்கள் காலப்போக்கில் சமய விழாக்களாகப் பரிணாமம் பெற்றுவிடுகின்றன.
சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும் பன்னிரு கூறுகளாகப் பகுக்கப்பெற்ற மாதங்கள் ஒவ்வொன்றும் மனிதவாழ்வின் விழாமலி மாதங்களாகவே அடையாளப்படுத்தப்பெற்றிருக்கின்றன. பருவத்தே பணி செய்யப் பகுக்கப்பட்ட மரபுகள் அந்தந்த ஊர்ப்பொதுமையோடு உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதாக வளர்கின்றன.
வெய்யிலோ மழையோ வீணாகாமல் பத்திரப்படுத்திப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள் நம்முன்னோர்கள். அவற்றை விழாக்களாக எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தவர்களும் அவர்கள். தைப்பொங்கலைக் கதிரவனுக்கும், பங்குனிப்பொங்கலை மாரிக்கும் இட்டு மகிழும் தமிழர்கள் மாடுகளையும் மரங்களையும், பாம்புகளையும்கூடத் தெய்வமாய்ப் போற்றினர்.
மலை தொடங்கி கடல் வரை உள்ள அனைத்திற்கும் மலர்களின் பெயர்களிட்டு அவற்றின் மாண்பு போற்றினர். உயிருள்ள உயிரற்ற அனைத்தும் தெய்வங்கள் ஆயின. காற்றும் நீரும் கதிரொளியும் தந்து பேணும் மண்ணும் விண்ணும் நம் அன்னை தந்தையென விளங்கும் ஆற்றல்நிறை பூதங்கள். பருவமறிந்து விரதம் இருக்கப் பழக்குகிற ஒவ்வொரு சமய ஒழுக்கமும் இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொடுக்கிற கடப்பாடுடையதே.
சித்திரையில் பொன்னேர் பூட்டுதல் வேளாண்மரபில் ஒரு விழா. நான்மாடக்கூடலில் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிற வைபவம், ஒரு சடங்குபோல நிகழினும் மானுடம் சங்கமிக்கிற மகிழ்வான நிகழ்வு. இறைவன் பெயரில் மலையும் ஆறும் பேணுதற்குப் பெரியோர் வகுத்த வழி அது.
அதே நகரில் ஆவணி மூலத்தன்று நிகழும் பிட்டுத் திருவிழா, சொல்லிக் காட்டும் உண்மை, வான்மழை பெருகினால் வசிப்பிடம் இல்லாது நீர் மிகும் என்பதைத்தானே? போராயுதம் வாங்கத் தென்னவன் பிரமராயனை, ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறைக்கு அனுப்பிய பாண்டியன், நீராயுதம் ஏந்தி வந்த வைகை நதிக்கரையைப் பேணினான் இல்லையே!
அதனை உணர்த்தவே மண்வெட்டி கூடை சகிதமாய் மண்ணிறங்கி வந்தான் மகேசன். வந்திக்கிழவி தந்த பிட்டினை உண்ட அப்பெம்மான், அணையடைக்காமல் விளையாடித் திரிந்ததனால் பாண்டிய மன்னனிடம் பிரம்படியும் பட்டான்.
அடித்த பாண்டியன் தொடங்கி அனைவரது முதுகிலும் அந்த அடி விழுந்ததாய்ச் சொல்கிற கதை உண்மையோ பொய்யோ, அது உணர்த்துகிற உண்மை, தத்தம் கடமை மறந்தால் விழும் தருமத்தின் அடி என்பதுதானே?
புரட்டாசி போக, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பெய்யும் அடைமழைநீரை வீணாக்காமல், தேக்கி ஊர்வளம் பேணிய மரபு நம்முடையது. ஊர் கூடி உண்ண ஊருணியும், கூடிக் குளிக்கக் குளமும், தேக்கி வைக்கும் இடம் தேக்கமுமாய் ஆக்கிப் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள்.
மலையில் பொழியும் நீர், அருவியாய் இறங்கி, ஓடைவழி ஓடிவந்து, ஆறாய் விரைந்து, நதியாய் நடந்து, கடல் வந்து அடையும்முன் அது இருந்தும் கிடந்தும் வருகிற வழித்தடங்களைச் சுமார் ஐம்பது பெயர்களுடைய நீர்நிலைகளாய் ஆக்கி வைத்திருக்கின்றனர், நம்முன்னோர்.
பாண்டிய நாட்டில் கண்மாய் என்றும் நடுநாட்டில் ஏரி என்றும் இலங்கும் நீர்த்தேக்கம் மிகுதியாய்ப் பெருகிவிட்டால், உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு நம்முன்னோர் உருவாக்கிய அமைப்பு கலிங்கு. கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டுப் பலகைகளால் அடைத்துத் திறக்கக்கூடியதாக உள்ள நீர் செல்லும் அமைப்பு இது.
வேண்டும்போது வேண்டும் அளவிற்குத் திறந்து வெளிவிட ஏதுவாய் அமைத்துக்கொள்வது, மதகு. அதிக நீர் பெருகினால் பல இடங்களில் இருந்து மதகுவழி நீரை வெளியேற்றிவிட முடியும். அவ்வாறே அமையும் மறுகால். இவையெல்லாம் பேணப்படாத காரணத்தால் தானே கடந்த ஆண்டு பெருகி உடைப்பெடுத்து ஊர் புகுந்தது மழைநீர்.
பொதுநிலையில் வேளாண் தொழில் பேண உருவாக்கிய நீர்நிலைகள் இவையெனில், தனிநிலைகளில் பயன்பாட்டுக்கென அமைத்துக்கொண்ட நீர்நிலைகள், கேணி, கிணறு முதலியன. கிணறு என்னும் பொதுச்சொல்லைக் கொண்டு உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் மட்டுமே பலவாக அமைகின்றன.
கடலருகே தோண்டிக் கட்டியது ஆழிக்கிணறு; ஆற்றின் அருகிலும் இடையிலும் அவ்வப்போது தோண்டிக் கொள்வது தொடுகிணறு; குளம், ஏரி ஆகியவற்றின் நடுவில் அமைந்தது பிள்ளைக் கிணறு; ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப்பெருக்கால் நீர் சுரக்கும் பொங்குகிணறு; கமலை நீர் பாய்ச்சும் அமைப்புடைய பூட்டைக்கிணறு எனப் பலவாக அமைகின்றன கிணறுகள்.
வையை என்னும் பொய்யாக்குலக்கொடியும், காவிரி என்னும் பெருநதியும் இன்னபிற குறுநதிகளும் போக, வற்றாத ஜீவநதிகள் ஏதும் பாயாத தமிழகத்தில், வான் பார்த்து வாழ்ந்து முன்னோர், தேன் நிகர்த்த மழைநீரைக் கோயில் திருக்குளங்களில் நிறைத்தனர். தெப்பக்குளம் அமைத்துத் திருவிழாக்கள் எடுத்தனர். ஆண்டுதவறாமல், மராமத்துப் பணி செய்து நீர்வரத்துப் பாதைகளை நேர்த்தி செய்தனர். தவறியோர்க்குத் தண்டல் விதித்தனர்.
அடைமழை பொழியாமல் போனாலும் ஐப்பசிக்குப் பிறகு இப்போது பிறக்கிறது புத்தம்புது மார்கழி. மாரி கழிந்த மாதம் மார்கழி. மழை குறைந்து பனி நிறைந்து நடுக்கும் குளிர் மாதம் இது. புறத்தே குளிர்போலத் தெரிந்தாலும் அகத்தே வெம்மை தருவது இது.
பனிக்காலம் நன்று என்று பொதுவாய்ச் சொல்லப்படும் பழமொழியின் உட்பொருள் பனிக்கு ஆலம் (விஷம்) நன்று என்பதாகும். விஷப்பனி பொழியும் மார்கழி மாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகாமல், நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள, மார்கழி நீராடலை, மக்கட்குச் சொல்லித்தருகின்றன பாவைப் பாடல்கள்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில், குள்ளக்குளிரக் குடைந்து நீராட எல்லாரையும் அழைக்கிறாள் ஆண்டாள். பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்தும் பங்கயப்பூம் புனல்பாய்ந்தும், மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்தும் பூத்திகழும் பொய்கை நீரில் புகுந்தும் குளிரக்குளிர நீராடச் சொல்லிப் பாடுகின்றார் மாணிக்கவாசகர்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவை இல்லை என்பது எதிர்மறையான பழமொழி. இருப்பதை இழந்து கையேந்துகிற நிலைவாராமல் காக்கச் சொல்லும் அனுபவ வாக்கியம் அது. இருக்கிற காலத்தில் பொறுப்புடன் செயல்பட்டு நிலைக்கிற பணி செய்ய அழைக்கிற வாசகம் இது என உணர்ந்து கடமையைச் செய்வோம்.
புயலடித்து ஓய்ந்த பின்னர் மராமத்துப் பணியில் களமிறங்கியிருக்கிற கருணையாளர்கள் மிகப்பலர். அவர்களுக்கு நன்றி சொல்கிற இந்த வேளையில் இயற்கைக்கு ஊறு நேர்கின்ற எச்செயலையும் செய்யமாட்டோம் என்று உறுதியேற்போம்.
புயலில் வீழ்ந்துவிட்ட மரங்களின் எண்ணிக்கையைபோல் இருமடங்கு மரங்களை நட்டு வளர்ப்போம். விரைவில் சென்னையும் அண்மை ஊர்களும் புத்துயிர்ப்பெய்தட்டும். எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளும் வல்லமை உடைய நகர்கள் இவையெனும்படிக்கு முன்னுதாரணம் ஆகட்டும். மார்கழித் திங்கள் அத்தகு மறுமலர்ச்சியைத் தரட்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.