நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீதித்துறையில் மாற்றம் தேவை!

வழக்குரைஞர் தொழிலை "நோபல் புரொபஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்குரைஞர்களை "லேனர்ட் ஃபிரெண்ட்' என்றும் அழைப்பதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இன்றைக்கு சிக்கல். துலாக்கோல் நிலையில்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

வழக்குரைஞர் தொழிலை "நோபல் புரொபஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்குரைஞர்களை "லேனர்ட் ஃபிரெண்ட்' என்றும் அழைப்பதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இன்றைக்கு சிக்கல். துலாக்கோல் நிலையில் இயங்க வேண்டிய நீதிமன்ற வளாகத்தில் வேலை நிறுத்தங்கள். மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களே இயங்கவில்லை என்றால், ஜனநாயகத்தில்தான் கோளாறு.

இதற்கு காரணம் யார்? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைந்த நீதிபதிகள் குழுவின் அறிக்கையால் பிரச்னைகள் வந்தன. நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் முழக்கமிட்டாலோ, ஊர்வலம் சென்றாலோ, நீதிபதிகள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை சுமத்தினாலோ, அவர்களுடைய வழக்காடும் உரிமையை திரும்பப் பெறலாம் என்று சட்டத்தில் சில விதிகளை திருத்தி அரசு இதழில் வெளியிடப்பட்டது.

அவ்வாறு வழக்குரைஞர்கள் தவறு செய்தாலும்கூட, முறைப்படி நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதை நீதிபதிகள் கையில் எடுத்துக்கொண்டு சிக்கலை உருவாக்குவது நியாயமற்ற செயலாகும். இதற்காக வழக்குரைஞர்கள் போராடி வந்தனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 125 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. இருந்தும் வழக்குரைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளில் பங்கேற்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் (ஆகஸ்டி 22) 125 வழக்குரைஞர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்தது.

இன்றைக்கு நீதித்துறையில் ஊழல்கள் நடக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதையும்கூட வழக்குரைஞர் வெளிப்படுத்தினால் பணியிலிருந்து நீக்கம் செய்கின்ற அவல நிலை. நீதித்துறையில் வெளிப்படையாக தெரியக்கூடிய அளவில், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல். இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகளின் ஊழல். இவர்கள் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இந்திய சட்டங்களுக்கு முழுமையான விளக்கம் தரும் ஏகபோக உரிமையும், தகுதியும் தங்களுக்கே உண்டு என்று நீதிபதிகள் நினைப்பது மமதையான போக்காகும். நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதற்கு உரிய நிலைமைகளையும் சட்டத்தின் நிலையையும் எடுத்துக் கூறுவது வழக்குரைஞர்கள்தான். இந்த இருவருடைய கடமையும் ரயில் பயணிக்க தேவையான இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை ஆகும்.

வழக்குரைஞர்களாக இருந்த சி.பி. ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி, ராஜா ஐயர், எஸ். மோகன் குமாரமங்கலம், வி.கே. திருவேங்கடாச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எல். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்த சாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ்.செல்லசாமி, டி.செங்கல்வராயன், பி.ஆர். டோலியே இப்படிப் பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர்.

இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய - மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் என முக்கியப் பொறுப்புகளை பெற்றவர்களும் உண்டு. இப்படியான ஆளுமைகள் உலாவிய சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றது.

பிரமிக்க செய்யும் சென்னை உயர்நீதிமன்ற கட்டடம் குறித்து, செஞ்சி ஏகாம்பர முதலியார் "ஐகோர்ட் அலங்கார சிந்து' என்று பாடினார். பூவிருந்தவல்லி க. துளசிங்க முதலியாரால் 1904-இல் வெளியிடப்பட்ட அந்நூலில் உள்ள வரிகள்:

அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதறும்படி தங்கத்திலூட்டி -

பாதிக்கப்படுபவர்களுக்காக போராடும் வழக்குரைஞர்களுக்கே இன்றைக்கு பாதிப்பு. இது மட்டுமல்லாமல் நீதித்துறையில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இழுக்கடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பப்படாமல் ஆண்டாண்டு காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 1016. இதில் கிட்டத்தட்ட 443 இடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 10 ஆயிரத்துக்கும் மேல் நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. எப்படி வழக்குகள் பைசல் ஆகும்? தேங்கிதான் கிடக்கும்.

ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் ஒரு நாள் சேர்ந்தே விடுமுறை எடுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராடினார்கள். 14 நீதிபதிகள் ஹைதராபாத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் தெலுங்கானாவில் நீதித்துறைப் பணியாளர்களும் இக்கிளர்ச்சியில் இணைந்து கொண்டனர்.

நீதிபதிகள் போராடுவது ஒன்றும் புதிதல்ல. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் நீதிபதியாக இருந்த தாவுத்ஷா ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியதெல்லாம் செய்திகள்.

அன்னா ஹசாரே போராட்டம் 2011-இல் நடந்தபொழுது அஜய் பாண்டே என்ற சிவில் நீதிபதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் என்ன விளைவு வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் வெளிப்படையாக கூறினார்.

நிர்பயா என்ற தில்லி மருத்துவக்கல்லூரி மாணவி 2013-இல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீர் "நானும் இந்தப் பிரச்சினையில் தெருவில் வந்து போராட நினைக்கின்றேன். என்னால் முடியவில்லை. மாணவி நிர்பயாவின் கொலைக்கு நியாயம் கேட்டு போராடுவதை வரவேற்க வேண்டும்' என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

இம்மாதிரியான போராட்டங்கள் துருக்கியிலும், எகிப்திலும் நடந்தேறியுள்ளது. எகிப்தில் 2,750 நீதிபதிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதன் விளைவாக அவர்கள் நீதிபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பருச்சா, நீதித்துறையில் 20 சதவீத நீதிபதிகள் ஊழலுக்கு துணை போகின்றனர் என்று 23.12.2001-இல் வருத்தத்துடன் தெரிவித்தார்.

2005-இல் செதல்வாட் சொற்பொழிவிலும் அன்றைய தலைமை நீதிபதி ஆர்.சி. லிகோடி "நீதிபதிகள் நடத்தை விதிமுறைகளை மீறாதவர்கள் என்று சொல்ல முடியாது. நீதிபதிகளின் மனைவி, மகன், மகள், மருமகன் போன்றவர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களாக பணி செய்து ஏதோ ஒரு வகையில் நீதியை திக்குமுக்காட வைக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் "கர்நாடகம், ராஜஸ்தான், மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றங்களில் இம்மாதிரியான நீதிபதிகள் உள்ளனர். லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டு, அதிகார வரம்பு மீறல் போன்றவற்றால் நீதிபதிகள் பதவிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் பலர் கைது செய்யப்படுகின்றனர். நீதிபதிகள் கிளப் ஒன்றில் இலவச உறுப்பினராக சேர நீதிபதி ஒருவர் சலுகை பெற்றதை தலைமை நீதிபதி தட்டிக் கேட்டதால் அனைத்து நீதிபதிகளும் கூட்டாக விடுமுறையில் சென்றனர்.

இப்படியெல்லாம் வேதனையான காட்சிகள் நீதித்துறையில் நடந்தேறுகின்றன' என்று குறிப்பிட்டார்.

வழக்குரைஞர்கள் நீதிபதிகளுக்கு கையூட்டுத் தருவதாகக் கூறி கட்சிக்காரர்களை ஏமாற்றும் வேலையும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நீதிபதிகளை அணுகக்கூடிய நிலைமை வந்துவிட்டது. விவாதங்கள் வெளிப்படையாக நடக்கின்றன.

120-ஆவது சட்ட ஆணையத்தின் அறிக்கையின்படி 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கோ 10 லட்சம் மக்களுக்கு 14 நீதிபதிகள் என்ற அளவே உள்ளது. மூன்று கோடிக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 81 லட்சம் வழக்குகள் ஐந்து ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமலே தூங்குகின்றன.

இவை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரை நிலுவையில் உள்ளது. கபாலி சினிமா, நடிகர் சல்மான்கான் பிரச்னைகளில் உடனுக்குடன் தீர்வு ஏற்படுகின்றது. ஆனால், ராஜீவ் படுகொலையில் ஏழு பேர் விடுதலை 25 ஆண்டுகள் ஆகியும் தீர்வு எட்டாமல் இருக்கிறது.

நீதித்துறைக்குத் தேவையான தொகை யை மத்திய - மாநில அரசுகள் ஒதுக்குவது இல்லை. தில்லியில் சமீபத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் உரையாற்றும்போது, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை நியமிக்காததை கண் கலங்க எடுத்துரைத்தார்.

நீதிபதி கிருஷ்ணய்யர், "நாம் இன்றைய நீதிபதிகள் அமைப்பை முற்றிலும் மாற்றவேண்டும். அதன் தீர்ப்புகள் மாற்ற முடியாத புனிதம் கொண்டவை என்ற மூட நம்பிக்கையை அகற்றவேண்டும்.

நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பெரிய புனிதப் பிறவிகள் அல்ல. அச்சுறுத்தும் ஆடை, அடைமொழி, புறத்தோற்றம் ஆகியவை புனிதத்தோற்றம் என்று கட்டமைக்கப்படுகின்றது. இவை சாதாரண மக்களை அச்சுறுத்துகின்றன. இன்னும் பிரிட்டிஷ் மகாராணி காலத்தின் மதிப்பீடுகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்மைகளை உறங்க வைப்பது நியாயம் கிடையாது.

சட்ட விதிமுறைகளும், சிவில், கிரிமினல் சட்டங்களும், சிறை விதிகளும், காவல் துறை செயல்பாட்டு விதிகளும் டென்னிசும், மெக்கலேயும் உருவாக்கியது. இவற்றை நாட்டு விடுதலைக்குப் பின் நம்முடைய தேவைக்கேற்ப நாம் மாற்றிக்கொள்ளவில்லை.

இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நீதித்துறை பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்து நீதிக்கு நாம் மரண சாசனம் எழுதும் துணிவைப் பெறவேண்டும். அதற்கு பதில் உயிர்துடிப்புமிக்க மக்கள் நல புதிய புரட்சி நீதியை நிலைநாட்டுவோம்' என்று கூறியுள்ளார்.

இதுதான் இன்றைய நீதித்துறை. யாரும் புனிதர்கள் அல்ல. எல்லோரும் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்தான். எல்லாவற்றிலும் மாற்றங்கள் உண்டு. அந்த மாற்றம் நீதித்துறையிலும் வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர்:

வழக்குரைஞர்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.