/

மாநில அதிகாரத்தைப் பறிக்கும் மசோதா

ஜி.எஸ்.டி. என்ற மூன்று எழுத்துகளை இன்று நாடே உச்சரித்துக் கொண்டிருக்கிறது. தொழில்துறையைச் சேர்ந்தவர்களும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:10 pm

முனைவா் வைகைச்செல்வன்

ஜி.எஸ்.டி. என்ற மூன்று எழுத்துகளை இன்று நாடே உச்சரித்துக் கொண்டிருக்கிறது. தொழில்துறையைச் சேர்ந்தவர்களும், பொருளாதார வல்லுநர்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து அதன் சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரமா, சாபமா என்பது குறித்த தெளிவான விவாதங்கள் இதுவரை நடத்தப்படவில்லை.

உலகமயம் என்ற ஒற்றைச் சொல்லின் பக்கவிளைவாகவே இதனை நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி என்றால் உலகமயம் என்பது என்ன மாதிரியான நிகழ்வுகளை இந்த மண்ணில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் தொடங்கி இதன் சங்கிலித்தொடர் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பன்முகச் சூழல் கொண்ட இந்த உலகப் பந்தில் இன்று ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றைச் சூழல் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. பன்மைத்தன்மை என்பதே இயல்பு. அதை மீறிய ஒற்றைத் தன்மை முரணாகத்தான் முடியும்.

இந்தியாவும் அடிப்படையில் பன்மைத் தன்மை கொண்ட தேசம்தான். உலகளாவிய மிகப்பெரும் வணிக நிறுவனங்கள் (வால்மார்ட்) இந்தியச் சந்தைக்குள் கால் வைக்கும்போது இங்கிருக்கும் சின்னஞ்சிறு வணிகர்களின் வாழ்வு சிதறிப் போகும்.

அதனால்தான் தமிழக முதல்வர், ஏற்கெனவே சிறு வணிகர்களின் நலன் காக்கும் பொருட்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் தீவிர நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

இந்த புதிய மசோதா குறித்த தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் இது கடந்த காங்கிரஸ் ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டு பலத்த எதிர்ப்புக்கு ஆளான மசோதா. அப்போது பா.ஜ.க. உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இதனை எதிர்த்ததால் நிறைவேற்ற முடியாமல் போனது.

ஆனால் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் இம்மசோதாவை நிறைவேற்ற தீவிரமாக முனைப்பு காட்டியது. இப்போதும் துவக்கத்தில் காங்கிரஸ் எதிர்த்தது. ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மீண்டும் மக்களவைக்கு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டுள்ளது என்பதே சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டாலும், வாக்கெடுப்பின்போது நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியினர் இதைப் பண மசோதாவாக அல்லாமல் நிதி மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வரி அளவு 18 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மசோதாவின் ஸ்திரமற்ற தன்மையைக் காட்டுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளம் உற்பத்தி மாநிலம் அல்ல. அதனால் அதற்கு இம்மசோதா பயன்தரக்கூடிய ஒன்று. ஆனால் தமிழகம் பெருமளவு உற்பத்தி மாநிலம். எனவே வரி இழப்பு நமக்கு அதிகம். பன்மைத் தன்மை கொண்ட தேசத்தில் ஒற்றை முனை வரி எப்படிப்பட்ட பாதிப்புகளை உருவாக்கும் என்பது போகப் போகத்தான் புரிய வரும்.

அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுகளின் வருவாய் இழப்பிற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் மைய அரசால் வழங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்கிற உத்தரவாதமும் உறுதியான புரிதலின் அடிப்படையில் அமைந்ததல்ல.

இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது தமிழ்நாட்டின் சிறு வணிகர்கள், தொழில் முனைவோர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் எந்த வரியுமே விதிக்கப்படாத 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.

புதிய வரி மசோதா நடைமுறைக்கு வரும்போது வரி இல்லாத பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்பதால் பல்வேறு பொருட்களின் விலை உயரும்.

மேலும், இந்தியாவில் 10 சதவீத கடைகள்கூடக் கணினிமயமாக்கப்படவில்லை. இந்நிலையில் இது கூடுதல் குழப்பத்திற்கே வழிவகுக்கும். இம்மசோதா குறித்த ஐயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த காரணத்தால்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ய நேரிட்டது.

திருத்தங்களுடன் கூடிய பொது சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மக்களவையில் 443 உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து இருப்பதை நாடே வியந்து பார்க்கிறது. இந்த வெளிநடப்பு மாநில நலன் சார்ந்ததே என்பதை நாம் உணர வேண்டும்.

அனைத்து பொருள்களுக்கும் ஒரே வரிவிதிப்பு என்று எண்ணுகிறபோது வரிவிலக்குப் பெற்ற பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி சாமானிய மக்களின் தலைமீது ஏற்றப்படும் சுமையாக மாறிவிடும் என்பதாலும்தான் அ.தி.மு.க. இதில் மாற்று நிலைப்பாடு எடுத்துள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் காண்பதற்கு வழிவகை ஏதும் செய்யாமல், அவசர அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வருவதை எதிர்த்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே மத்திய, மாநில அரசுகள் தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழகம் ஒரு உற்பத்தி மாநிலம், ஜி.எஸ்.டி.யால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,270 கோடி இழப்பு ஏற்படும். இது சாதாரண இழப்பு அல்ல. இந்த இழப்பை ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்வதாகக் கூறுவதை, நிரந்தரமாக ஈடு செய்வோம் என்று மாற்றினால் மட்டுமே இந்த மசோதா மீது நம்பகத்தன்மை வரும்.

இந்த மசோதாவால், தமிழகம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு கடும் வரி இழப்பு ஏற்படும் என்றும், இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை என்றும் கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற முக்கிய கட்சிகளை சமாதானப்படுத்தும் விதமாக, மசோதாவில் கூறப்பட்ட மாநிலங்களுக்கான ஒரு சதவீத கூடுதல் வரியையும் ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

இது தவிர, மேலும் மூன்று முக்கிய திருத்தங்களுடன் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மக்களவையிலும் நிறைவேற்றபட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்டி. மசோதா நிறைவேற்றப்பட்டதும், மாநில அரசுகளும் இந்த மசோதாவை 30 நாட்களுக்குள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும். 30 மாநிலங்களில் 16 மாநில அரசுகளின் ஆதரவை மசோதா பெற்று விட்டால் உடனடியாக இந்த சட்டத்

திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்குவதற்கு ஒப்புதல் பெறப்படும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டுமானப் பொருட்கள் விலை குறையும், அதேவேளையில், மருந்து பொருட்கள் விலை அதிகரிக்கும். தொலைக்காட்சி, சலவை இயந்திரம், கட்டுமானப் பொருட்கள், மரப்பொருட்கள், பிஸ்கட் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கான வரி 24 அல்லது 25 சதவீதத்தில் இருந்து 17 அல்லது 18 சதவீதமாக குறையும்.

மருந்து பொருட்களின் வரி 5 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கும். 30 சதவீதமாக உள்ள விடுதி மற்றும் ஆடம்பர கார்களின் வரி 40 சதவீதமாக அதிகரிக்கும். அத்துடன் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் வரி 2 சதவீதத்திலிருந்து 5 முதல் 6 சதவீதமாக உயர்கிறது.

அதாவது எப்போதோ வாங்கும் பொருட்களுக்கு விலை வரிக்குறைப்பு அனுகூலமாக இருப்பதும், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரி அதிகரிப்பதும், சாமானியர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கும்.

இந்த மசோதா காரணமாக மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பெருமளவுக்கு மாற்றமடைகிறது. சொல்லப்போனால், மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரம் சுருங்குகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டங்களைப் பிழையில்லாமல் தயாரிக்க வேண்டும். பிறகு, அவற்றை முறையே நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவை

யிலும் நிறைவேற்ற வேண்டும்.

மாநிலங்களவையில் புதிய மசோதாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீதான விவாதத்தைத் தவிர்க்கும் வகையில், இதைப் பண மசோதாவாக அரசு கொண்டு வந்து நிறைவேற்றக் கூடும் என்ற பேச்சுக்கள் விரும்பத்தக்கதல்ல.

நாட்டில் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சூழலைக் கொண்டுவருதல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடவும் முக்கியமானது மத்திய அரசு தனக்கு இணையாக மாநிலங்களின் உரிமைகளைக் கருதுவதாகும்.

கட்டுரையாளர்:

முன்னாள் தமிழக அமைச்சர்.

வைகைச்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.