மக்கள் விழிப்புணர்வும் தேர்தல் அறிக்கையும்
அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் வெளியிடும் தேர்தல் "மேனிபஸ்டோ', தேர்தல் பிரகடனம், தேர்தல் வாக்குறுதி, தேர்தல் அறிக்கை என்று சொல்லப்படுவது


அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் வெளியிடும் தேர்தல் "மேனிபஸ்டோ', தேர்தல் பிரகடனம், தேர்தல் வாக்குறுதி, தேர்தல் அறிக்கை என்று சொல்லப்படுவது எல்லாம் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதுதான். கட்சிகளின் அடிப்படை லட்சியத்தையொட்டிய செயல் திட்டங்கள், சமூக நீதியை நிலைநாட்டும் வகைகள், மகளிர் முன்னேற்றம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, கல்வி, சுகாதார மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம், சுற்றுப்புறச்சூழல் பேணுதல், தொழில் வளரத் தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது என்ற அடிப்படை அம்சங்களைத் தேர்தல் அறிக்கைகள் கொண்டிருந்தன.
ஜனநாயகம் வளர்ச்சி பெற்றதும், அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பதவி ஆசை ஒவ்வொரு கட்சிக்கும் வந்துவிட்டது. எனவே, தேர்தலில் வெற்றி பெற வாக்காளப் பெருமக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது, கடனில் வட்டியைத் தள்ளுபடி செய்வது, மானியம் கொடுப்பது, விலையில்லாமல் பொருள்கள் தருவது, பொழுது போக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது என்ற திட்டத்தோடு தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் இறங்கின. அதில் கட்சிகளுக்கு இடையில் போட்டியே வந்துவிட்டது. தேர்தல் அறிக்கை என்பதே இலவசங்களின் பட்டியலாகியது.
பெரும்கூட்டங்களில் ஆரவாரங்களுக்கிடையில் தலைவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையைப் பெரும்பாலும் மக்கள் படிப்பதில்லை. அது தமிழ்நாட்டில், இந்தியாவில் என்றுதான் இல்லை. பல ஜனநாயக நாடுகளின் நிலையும் அதுவே. காரணம், தேர்தல் அறிக்கைகள். சாத்தியமே இல்லாதவற்றைச் சாதித்துவிடுவோம் என்று பொய்யுரை புகழ்கின்றன. மக்கள் அவற்றைப் புறந்தள்ளி விடுகிறார்கள். ஆனாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல பெரு முயற்சி செய்கின்றன.
தேர்தலில் அரசியல் கட்சிகள் கொடுப்பதாக வாக்களிக்கும் உறுதிமொழிகள் அவர்கள் கட்சி நிதியில் இருந்தோ, தலைவர் திரட்டிய தேர்தல் நிதியில் இருந்தோ கொடுக்கப்படுவது இல்லை. அது அரசின் கஜானாவில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது.
அதாவது அது மக்களிடம் இருந்து வரியாக வாங்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள், அனாதைகள், முதியவர்கள் தான் இலவசங்கள் பெறத் தகுதியானவர்கள் என்று சொன்னாலும், வாக்கு என்பது எல்லோரிடம் இருந்தும் பறிக்கப்பட வேண்டியது என்பதால் நிறைய விலக்குகள் கொடுத்து, வசதி படைத்தவர்களிடம் இலவசங்கள் பெறுவது குற்றம் இல்லை என்ற மனோநிலையை உருவாக்கிவிட்டார்கள்.
இலவசம் - விலையில்லாப் பொருள்கள், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், மிக்ஸி, கிரைண்டர் பெற்றவர்கள் பட்டியலில் உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், வணிகர்கள் என்று பலரும் இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாகத் தந்து ஆட்சிக்கு வந்ததும் கொடுக்கும் இலவசங்கள் அப்பட்டமான லஞ்சம். வாக்களிப்பதற்கு முன்னால் கட்சிகள் கொடுக்கும் பணம் லஞ்சம் என்றால், வாக்களித்தப் பின்னர் கொடுக்கப்படுவதும் லஞ்சம்தான். இலவசங்கள் கட்சிகளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய காரணியாக இருக்கிறது. அவற்றைச் சமூக நலத் திட்டம் என்றோ, சமூக நீதியை நிலைநாட்டுகிறது என்றோ சொல்ல முடியாது.
வாக்குகளைப் பறிக்கும் இலவசங்கள் கொண்ட தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது. அது ஜனநாயக மாண்பைக் குலைத்துவிடுகிறது. நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தாலும், வாக்குகளைப் பெற ஆசைகாட்டும் இலவசங்கள் கொண்ட தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரையில் சமூக நலனில், மனிதர்கள் மாண்பு மீது அக்கறை கொண்டவர்கள் சென்றார்கள்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் உறுதிமொழிகள் சட்டப்படியாக ஊழல் நடவடிக்கை இல்லை என்று இந்தியச் சட்டம் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டிய நீதிமன்றம், தேர்தல் ஜனநாயக முறை சமச்சீராக நடக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு வழிமுறைகள் வகுக்க ஆலோசனை வழங்கியது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை அழைத்து கூட்டம் நடத்தியது. பிரச்னைகளின் தீவிரத் தன்மையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே கட்சிகள் வழங்க வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகள் கூறின.
தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தால் தேர்தல் நடத்த அமைக்கப்பட்ட சுயேச்சையான, தன்னதிகாரம் பெற்ற அமைப்பு. ஆனால், அதன் முதல் பணி தேர்தலில் பெரும்பான்மையானவர்களை பங்கு பெற வைப்பதும், நேர்மையாகத் தேர்தலை நடத்துவதும்தான்.
இலவசங்கள் கொடுக்கப்படுவதாகத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படுவதைத் தடுக்க அதற்கு அதிகாரம் இல்லை. அதுபோல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இந்திய அளவில் கட்சிகள் சர்வ வல்லமை பெற்றவை. அவை அரசியல் சட்டத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவை. எனவே, அரசியல் சட்டம் இலவசங்கள் கொடுப்பதைத் தடுக்கவில்லை. எனவே, எவ்வளவு அதிகமான இலவசங்கள் கொடுக்க முடியும் என்று கற்பனைச் செய்து அந்த அளவிற்கு இலவசங்கள் பற்றி உறுதிமொழி வழங்கலாம்.
ஓர் அரசியல் கட்சி ஆளும் கட்சியாக மாறினால்தான், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இலவசங்கள் பற்றி யோசிக்க வேண்டும். அது ஆளும் கட்சியாக வந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த நிறுவனமும் அதுபற்றிக் கேள்வி கேட்க முடியாது. தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்ட இலவசங்கள், மானியங்கள், வட்டி தள்ளுபடிகள் என்பனவற்றையெல்லாம் அமல்படுத்துவது வாக்களித்தக் கட்சியின் உரிமை, கடமை கிடையாது.
இரண்டொரு எளிய, சாதாரணமான இலவசங்கள் கொடுத்துவிட்டு, "மற்றவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரிய திட்டங்கள் நிபுணர்கள் ஆய்வில் இருக்கிறது. சுற்றுப்புறச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காகத் காத்துக் கொண்டிருக்கிறது;
எங்கள் ஒரே இலட்சியம் தமிழ் மக்கள் வாழ்வில் வசந்தமும், தென்றலும் வீச வேண்டும் என்பதுதான்; அதற்காகவே அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்; எங்கள் அடிப்படை நோக்கம் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை எல்லாம் செய்வதுதான்; அதோடு சொல்லாத பல சிறப்பான திட்டங்களையும் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
உங்கள் எதிர்க்கட்சிகள் உலகமே வியக்கத்தக்க உன்னத கனவுத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டு வருகின்றன. அவற்றையெல்லாம் உங்கள் பேராதரவு கொண்டு முறியடித்துவிடுவோம்; ஏனெனில், உங்களுக்காகவே நாங்கள். எங்களை விட்டால் உங்களுக்கு நாதி கிடையாது. அதனை எங்களைவிட வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்' என்று சூளுரைக்கிறார்கள்.
வாக்களிக்கும் மக்களுக்கு தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு முன்னால் பணம் கொடுத்தால் அது லஞ்சம். தண்டனைக்குரிய குற்றம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அரசின் இருப்பில் இருந்து பணத்தை எடுத்து இலவசம், மானியம், நல உதவிகள் என்ற பெயரில் கொடுப்பது குற்றம் என்று சிலர் பேசியும், எழுதியும் வருகிறார்கள். நீதிமன்றம் வரையில்கூட சென்று பார்த்தார்கள். பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை.
இலவசம், மானியம் ஆகியவற்றுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள் முதலில் சொல்வது, "நமது சமூகம் ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. மனிதர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றாலும் சமூக, கலாசார பொருளாதார நிலைகளில் ஒன்றில்லை. உலக மகா பணக்காரர்கள் பலர் வாழும் நாட்டில்தான் வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஒருவேளை சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் அலையும் அவர்களின் பசியை ஆற்றுவது ஜனநாயக அரசுகளின் கடமை.
ஜனநாயகம் என்பது அதன் அடிப்படியிலேயே மென்மையானது. அது அதிகாரத்தின் பக்கம் இழுத்துச் செல்லக்கூடியது. எனவே, ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள், ஆள்வதற்குத் துடித்துக்கொண்டிருக்கும் கட்சிகள் எல்லாம் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஜனநாயகம் என்பதை எந்த அளவுக்கு வலுவிழக்கச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்கிறார்கள். அதற்கு மக்களையும், சட்டப் பேரவைகள், நாடாளுமன்றத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அரசியல் கட்சிகளுக்குத் தன் கட்சி நலம், தலைவர் விருப்பம் என்பதுதான் முக்கியமாகிவிடுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் அதிகாரம் பெற எளிய மக்களை ஏமாற்றுவதிலும், வஞ்சிப்பதிலும் ஒன்றாகவே இருக்கின்றன.
ஜனநாயகம் என்பதின் கோட்பாடு மக்களிடம் இருந்து அரசு அதிகாரம் பெறுகிறது. அரசிடம் இருந்து மக்கள் அதிகாரம் பெறுவதில்லை என்பதுதான். ஆனால், அரசு சர்வ வல்லமை கொண்டது போலவும், மக்கள் அதனிடம் இருந்து சிற்சில சலுகைகள், இலவசங்கள் பெற மட்டும் உரியவர்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டில் அதிகமான ஊழல், லஞ்சம் நிலை கொள்ள இலவசம் என்பது காரணமாகிவிட்டது. கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் மக்களிடம் இருந்து அதிகாரத்தை அபகரிக்கப் பொய்யுரைகள் கொண்டதாக - இலவசம் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாக இருக்கக் கூடாது என்ற சொல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் மக்கள் எந்த அளவிற்குப் பூரண விழிப்புணர்வுடன் இருக்கிறார்களோ, அந்த அளவிற்குத்தான் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் மக்கள் நலம் சார்ந்தும், சமூக நீதி அடிப்படையிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்து நிலையிலும் இருக்கும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...