அறிவுலகம் என்ன செய்யப் போகிறது?
ஒரு நாகரிகத்தின் சின்னமாகவும், அறிவுலகின் ஆயுதமாகவும் இருப்பவை புத்தகங்கள். அவற்றின் இருப்பிடத்தையே நூலகம் என்கிறோம்.


ஒரு நாகரிகத்தின் சின்னமாகவும், அறிவுலகின் ஆயுதமாகவும் இருப்பவை புத்தகங்கள். அவற்றின் இருப்பிடத்தையே நூலகம் என்கிறோம். அந்த நூலகமே பண்பாட்டை வளர்த்து நல்ல குடிமக்களையும் வளர்த்தெடுக்கிறது.
அணுவைக் கண்டறிந்த அறிவியல் மேதை ஐன்ஸ்டீனிடம், மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த விடை புத்தகம் என்பதாகும். அந்தப் புத்தகம் அறிவுள்ளவர்களுக்குப் பாதுகாப்பு கேடயமாகவும், மூடர்களுக்கு ஆபத்தான ஆயுதமாகவும் விளங்குகிறது.
மொழி அழிந்தால் அந்த இனமும் தானாக அழிந்துவிடும். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் தாய்மொழியை அழித்துவிட வேண்டும். மொழியை எப்படி அழிப்பது? அந்த மொழியின் உயிர்நாடியான இலக்கியங்களை அழித்து விடுவது என்பதே கடந்தகால வரலாறு.
அண்மையில், இலங்கைத் தமிழர்களை அழித்தொழிப்பதற்கு அடையாளமாக யாழ்ப்பாண நூலகம் குறிவைத்து எரிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் அங்குள்ள சிங்கள வெறியர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதன் பிறகுதான் தனித்தமிழ் ஈழம் உலகப் பிரச்னையாக உருவெடுத்தது.
இப்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வந்த திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப் பட்டுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழ் உள்ளமெல்லாம் பற்றி எரிகிறது. அறிவுலகம் இதனை எப்படிப் பொறுத்துக் கொண்டுள்ளது?
பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் அல்சூர் பகுதியில்தான் இது நடந்துள்ளது. அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் இந்த நூலகம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பழந்தமிழ் இலக்கியங்கள், புதினங்கள், ஆய்வு நூல்கள் இருந்துள்ளன.
கடந்த ஏப்ரல் 21 அன்று, அதிகாலை நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் நூலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை அள்ளி வீதியில் வீசியெறிந்துள்ளனர். இந்த நிகழ்வு பெங்களூரில் வாழும் தமிழ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய தகவல் அறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனமும், நூலகப் பொறுப்பாளருமான நல்ல பெருமாள் நடந்தவைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். செய்வதறியாமல் திகைத்து நின்று விட்டார். கூட்டம் கூடி அடுத்தக் கட்ட ஆலோசனை செய்துள்ளனர். இவரும், தமிழர் முழக்கம் ஆசிரியரும் மற்றும் சிலருடன் சேர்ந்து அங்குள்ள காவல் நிலயத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அவர்களை மாலை வரை அலைக்கழித்து விட்டு, வேண்டா வெறுப்பாக புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு திருக்குறள் மன்ற நூலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் நூல்களை வீதியில் எறிந்தவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பியுள்ளனர்.
தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட தமிழ் நூலகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், புதுப்பித்துத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன. அவர்கள் ஊர்வலமாகச் சென்று பெங்களூரு மாநகரக் காவல் துணை ஆணையரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்த நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அறிந்து, நூலகத்தின் நிலையை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெங்களூருக்கு வருகை தந்துள்ளார். அவரை வரவேற்று நூலகத்தைச் சுற்றிக் காண்பித்துள்ளனர். நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம், அதற்கான பின்னணி, நூல்கள் வீதியில் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் ஆகியவற்றை அதிகாரியிடம் விளக்கியுள்ளனர்.
நூலகத்தில் நூல் வைக்கப் பயன்படும் மரச் சட்டங்கள், மேசைகள், அலமாரிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் நூலகம் பயன்படுத்த முடியாத நிலையில் சிதைந்து காணப்படுகிறது. அங்கிருந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சென்ற துணை இயக்குநர் அங்கு பல்வேறு தமிழ் அமைப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
நூலகத்தைப் புதுப்பிப்பது பற்றியே அனைவரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உதவி செய்யும் வரை காத்திருக்காமல் சூறையாடப்பட்டு வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்களை பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் தாற்காலிகமாகப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காகத் தனியறை ஒதுக்கவும் தமிழ்ச் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
நூல்கள் அறிவுக்கு வித்திடும் கருவிகள். அந்த நூல்களைச் சூறையாடி வீதியில் வீசியிருப்பது வேதனையளிக்கிறது. நூலகம் முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது; கட்டடமும் பலவீனமாகியுள்ளது. இதுபற்றி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடம் அறிக்கை அளிக்கப்படும். அதன்பிறகு நூலகத்தைப் புதுப்பிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அண்டையிலுள்ள ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உரிமையோடும், உறவோடும் வாழ்வதே ஒருவருக்கொருவர் நலம் பயக்கும். தமிழின் கிளை மொழிகளே தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று மொழி வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், நாம் ஒரு தாய் மக்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
தமிழ் மக்களுக்குரிய சட்டப்படியான அரசியல் சாசன உரிமைகளைக்கூட அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட ஏற்றுச் செயல்படுத்துவது இல்லை; காவிரி ஆணையம் அளித்த விகிதப்படியும் தண்ணீரைத் திறந்து விடுவதில்லை.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய காவிரியைத் தடுத்து அணைகள் கட்டுவதிலேயே கர்நாடகம் குறியாக உள்ளது. புதிய அணை கட்டுவதற்கும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த நாடுகளுக்குள் நதிநீர்ப் பங்கிடு செய்து கொள்ள முடிகிறது. ஆனால், அடுத்தடுத்த மாநிலங்களுக்குள் நீர்ப் பங்கீடு செய்து கொள்ள முடியவில்லை.
இப்படித்தான் தமிழர்களோடு பகைமைப் பாராட்டும் போக்கு கர்நாடகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியே திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட நிகழ்வு என்பதை மறந்துவிடக் கூடாது.
இது தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகும். இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக இருப்பதே அவர்களுக்கு மேன்மேலும் துணிச்சலைக் கொடுக்கிறது. இது சமூக ஒற்றுமையையும், தேச ஒருமைப்பாட்டையும் சிதறடித்து விடும்.
தேவையற்றவைகளுக்கெல்லாம் மாநில உரிமைகளில் தலையிடும் மத்திய அரசு, இப்படிப்பட்ட நேரங்களில் வாய்மூடி மெளனம் சாதித்து விடுகிறது. இந்த மெளனம் கலைய வேண்டும்.
அந்தக் காலத்தில் பகை மன்னர்கள் படையெடுத்து வெற்றி பெற்றதும், தோல்வியடைந்த மன்னனின் நாட்டைச் சூறையாடுவது வழக்கம். அப்போது அந்நாட்டுப் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்று வரலாறுகள் கூறுகின்றன. கலை பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் குறிவைத்துத் தகர்க்கப்பட்டன.
நாளந்தா பல்கலைக் கழகம் எரியூட்டப்பட்டதும் யாழ்ப்பாணத்துப் பொது நூலகம் கொளுத்தப்பட்டதும் அப்படித்தான். அண்மைக் காலத்தில் ஐ.நா. அறிவுறுத்தியும் கேட்காமல் ஆப்கானிஸ்தானில் தொல்பொருள் வரலாற்றுச் சின்னங்களான நெடிதுயர்ந்த புத்த விக்கிரகங்களும், கல்வெட்டுகளும் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதை உலகம் சோகத்தோடு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இவையெல்லாம் பகை மன்னர்களால் செய்யப்பட்ட கொடுஞ்செயல்கள்.
ஆனால், இப்போது நடப்பவையெல்லாம் உள்நாட்டிலேயே நடைபெறுகின்றன. சொந்தச் சகோதரர்களையே பகைவர்களாகப் பாராட்டிக் கொண்டு, அவர்களது பண்பாட்டு அடையாளங்களை அழிக்கின்றனர். இதனை அறிவுலகம் எப்படி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது?
ஒரு தடவை மகாத்மா காந்தியிடம் ஒரு கோடி ரூபாய் தங்களிடம் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று உடனடியாகக் கூறினாராம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நூலகம்தான் சூறையாடப்பட்டிருக்கிறது. இதனைத் தேர்தல் இரைச்சலில் அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது கேட்கிறோம், அறிவுலகம் என்ன செய்யப் போகிறது?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...