/

அணு ஆயுத ஆபத்தை முறியடிப்போம்!

அணு ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் பாரத நாட்டின் தலைநகர் புதுதில்லியை தாக்க முடியும் என்று பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதிர்கான் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

அா்ஜுன் சம்பத்

அணு ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் பாரத நாட்டின் தலைநகர் புதுதில்லியை தாக்க முடியும் என்று பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதிர்கான் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார். பாரத நாட்டில் இதற்கு வன்மையான கண்டனங்கள் எழுந்தன. "அப்படி ஒருவேளை அணுகுண்டு மூலம் புதுதில்லி தாக்கப்பட்டால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்கிற ஒரு நாடு இருக்காது' என இந்திய ராணுவ அதிகாரிகள் பதிலடி கொடுத்தனர்.

இந்தியாவில் 1940-களில் இந்திய அணுசக்தி விஞ்ஞானத்தின் தந்தை டாக்டர் ஹோமிபாபா இந்தியாவில் அணு ஆராய்ச்சி பணிகளை துவக்கினார். பண்டித ஜவார்ஹர்லால் நேரு தலைமையிலான அரசு, 1963-இல் இந்திய சீனா யுத்தத்தில் இந்தியா தோல்வி அடைந்தபிறகு இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 1964-இல் சீனா அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தியது. ஹோமிபாபா மூலம் அணுசக்தி மற்றும் ஆணு ஆயுத ஆராய்ச்சிகள் இந்தியாவில் வலுப்பெற்றன. பின்னர், டாக்டர் ஹோமிபாபா மர்மமான முறையில் விமான விபத்தில் இறந்தார்.

பஞ்சசீல கொள்கைகள் மற்றும் அணிசேரா நாடுகள் தத்துவத்தை உருவாக்கிய நேரு, அணுசக்தியை, மின் உற்பத்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் உலகில் சமாதானத்தை நிலைநாட்டவும் மட்டுமே பாரதம் பயன்படுத்தும் என்றும் அதே நேரத்தில் எங்கள் தேசத்தை பாதுகாக்க நாங்கள் தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் தயங்க மாட்டோம் என்று பிரகடனம் செய்தார். 1963ல் சீனாவிடம் நாம் தோற்ற பிறகு தற்காப்பிற்காக, 1964-இல் நாம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் பாரத நாட்டிற்கு எற்பட்டது.

1974 மே 18-இல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் அருகில் உள்ள பொக்ரான் பகுதியில் இந்திய விஞ்ஞானிகள், முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையை நிகழ்த்தினர். விஞ்ஞானிகள் ராஜா ராமன்னா, ஹோமிசேத்னா ஆகியோர் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தினர். மேலும் 1964-ஊல் சீனா அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தி தன்னை அணுஆயுத வல்லமை பெற்ற நாடாக பிரகடனம் செய்து பத்து வருடம் கழித்த பிறகே இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடாக இந்தியா மாறியது.

பாரத நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து நம்மோடு யுத்தம் செய்தது. நமது ராணுவம் போரில் வெற்றி பெற்ற போதும் காஷ்மீரில் மூன்றில் ஒரு பங்கு நிலப் பகுதியை நாம் இழந்தோம். அதன் பிறகு 1963-இல் சீன யுத்தத்தில் இமயமலையில் உள்ள திருக்கைலாயம், மானசரோவர் உள்ளிட்ட 40,000 சதுரமைல் நிலப்பரப்பை சீனா ஆக்ரமித்துக் கொண்டது. இன்றளவும் அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. 1965-இல் மீண்டும் பாகிஸ்தானுடனான யுத்தத்திலும் பாரத நாடு வெற்றி பெற்றது.

பின்னர் 1972-இல் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேச முஸ்லீம் மக்களை காப்பதற்காக பாகிஸ்தானோடு நாம் யுத்தம் செய்து பாகிஸ்தானை தோற்கடித்தோம். உலக வரைபடத்தில் வங்க தேசம் என்கிற புதிய இஸ்லாமிய நாட்டை இந்திராகாந்தி உருவாக்கினார். இந்தியாவுடனான போர்களில் தொடர்ந்து தோல்விகளையே கண்டுவரும் பாகிஸ்தான் எப்படியாவது பாரதத்தை அழிக்க வேண்டும் என இன்றளவும் செயல்பட்டுவருகிறது.

நமது முதல் அணு குண்டு வெடிப்பு சோதனை நடந்த உடனே பாகிஸ்தான் பிரதமர் ஜீபில்கர் அலி புட்டோ சொன்னார் நாங்கள் இலை, தழை, புல், பூண்டுகளை மட்டுமே தின்று ஒரு வருட காலம் பட்டினி கிடந்தாவது அணுகுண்டு தயாரிப்போம் என அறிவித்தார். சீனா, லிபியா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவின.

1984-இல் பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தியது. உலகில் அணுஆயுத வல்லமை கொண்ட முதல் முஸ்லீம் நாடு என்கிற பெருமையை விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் மூலம் பாகிஸ்தான் பெற்றது. விஞ்ஞானி காதிர்கான் நெதர்லாண்ட் நாட்டில் அணு சோதனை மையத்தில் உலோகவியல் நிபுனராக 1975-இல் பணிபுரிந்த போது யுரேனிய தொழில்நுட்பம், அணு உலை வரைபடம் உள்ளிட்ட ரகசியங்களை கைப்பற்றினார்.

மேலும், பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க சீனா யுரேனியத்தையும், தொழில்நுட்பத்தையும் இரகசியமாக வழங்கி வருகிறது. 2004-இல் அணு ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பத்தை லிபியா, கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததாக காதிர்கான் பாகிஸ்தான் அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் சுதந்திர மனிதர் என அறிவிக்கப்பட்டார்.

சீனா அணு குண்டு வெடிப்பு சோதனையை 1964-இல் நடத்திய பிறகு சர்வதேச அளவில் NPT என்கிற அணு-ஆயுத பரவல் தடைச் சட்டம் (Nuclear Non Proliferation Treaty) மற்றும் CTBT என்கிற அணுகுண்டு சோதனை தடைச் சட்டம் (Comprehensive Test Ban Treaty) ஆகியவை உருவாகின. மேலும் NSG என்கிற அணுசக்தி வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு (Nuclear Supply Group) உருவாக்கப்பட்டது. இதில் அப்போது 18 நாடுகள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இக்குழுவில் உள்ளன.

புதிதாக அணுஆயுதங்கள் தயாரிக்க முயலும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அணுசக்தி மூலப்பொருட்களான யுரேனியம், புளுட்டோனியம், தோரியம் வழங்க தடை, தொழில்நுட்பம், வடிவமைப்புகள் வழங்கத் தடை என பல்வேறு தடைகள் உருவாக்கப்

பட்டன.

1974-இல் இந்தியா முதல் சோதனை நடத்திய பிறகு பாரத நாட்டின் மீது இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்தில் கையெழுத்து போடும்படி பாரத நாட்டின் மீது நிர்பந்தம் விதிக்கப்பட்டபோதும் இதுவரை பாரதநாடு இதில் கையெழுத்துப்போடவில்லை. அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 1998 மே மாதம் மீண்டும் ஒரு முறை பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தியது. அப்துல் கலாம் உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த இந்திய விஞ்ஞானிகள் மூலம் இச்சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி வழங்கும் நாடுகள் பட்டியலில் பாரதமும் இடம் பெற ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் சீனா நாடு எதிர்ப்பு தெரிவிக்கின்ற காரணத்தினால் நாம் இப்பட்டியலில் இடம் பெற இயலவில்லை. பாகிஸ்தானும் ஏட்டிக்கு போட்டியாக எங்களுக்கும் இடம் வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.

வாஜ்பாய் காலத்தில் நாம் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் நாம் தெர்மோ நியூக்ளியர் பாம் தயாரித்துள்ளோம் என்பதையும், யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரிக்கும் தொழில்நுட்பத்தையும், ஹெவிவாட்டரிலிருந்து டிரிடியத்தை பிரிக்கும் தொழில்நுட்பத்தையும் நம் வசம் பெற்றுள்ளோம் என்பதையும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் பாம் நம்மால் தயாரிக்க முடியும் என்பதையும் உலகின் முன் நிரூபித்துள்ளோம்.

நம்மிடமுள்ள அணு உலைகள் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. ஒரு போதும் பயங்கரவாதிகள் கையில் இவைகள் கிடைக்காது. நாம் யாருக்கும் நமது அணுசக்தி தொழில்நுட்பங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது இல்லை. பாகிஸ்தான் அணு விஞ்ஞானி காதிர்கான் கள்ளத்தனமாக கொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தான் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்கள் பயங்கரவாதிகள் கையில் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈரான் அரசிடமிருந்து செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை சமீபத்தில் கைப்பற்றி உள்ளது.

மேலும் சீன தேசம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும், மூலப்பொருட்களையும் ரகசியமாக வழங்கி வருகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் வசம் சென்றுவிடும் என்கிற அச்சம் சர்வதேச சமூகத்திடம் உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் அது பாரத நாட்டிற்குத்தான் மிகப்பெரிய ஆபத்து. பாகிஸ்தானில் அணு ஆயுத வல்லமையை முறியடிக்கக் கூடிய வகையிலும் சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையிலும் நமது வெளியுறவு கொள்கைகள் அமைய வேண்டும். சீனாவின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு அதையும் முறியடிக்க வேண்டும்.

அணுஆயுதத் தாக்குதல் என்பது பேரழிவாகும். பாகிஸ்தானின் அணுஆயுத வல்லமை பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சிக்கிவிடும் அபாயம் உள்ளது. பாரத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அணு ஆயுதம் பயங்கரவாதிகள் வசம் சென்றுவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். அணு ஆயுத ஆபத்திலிருந்து பாரதத்தையும் சர்வதேச சமூகத்தையும் காப்பாற்றுவோம்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.