ஒரு நாளேனும் நிறுத்துங்கள்...
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தாற்காலிகமாக முடிவு கட்டும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமை (பிப்ரவரி 27) முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு நெருங்கியுள்ளது.


சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தாற்காலிகமாக முடிவு கட்டும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமை (பிப்ரவரி 27) முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு நெருங்கியுள்ளது.
அமெரிக்கா - ரஷியா இடையே கடந்த பிப்ரவரி 22-இல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை சிரியா அதிபர் பஷார் அல் அசாத், அண்டை நாடான துருக்கி, சிரியாவின் அரசு எதிர்ப்புப் படைகள் என அனைத்துத் தரப்பினருமே ஏற்றுக்கொண்டிருப்பதால் ஐந்து ஆண்டுகால துப்பாக்கிச் சப்தம் சிறிது நாள்களாவது ஓயாதா என உலகமே எதிர்பார்க்கிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அரசுப் படைகளும், அரசு எதிர்ப்புக் குழுக்களும் சண்டையில் ஈடுபடாது. ஆனால், இஸ்லாமிய தேசம், அல்-காய்தாவின் சிரியா பிரிவான அல்-நுஸ்ரா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் தொடரும்.
"சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் மட்டுமன்று; அது பிராந்திய சக்திகள் இடையிலான மறைமுகப் போர்' என்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்ட விஷயம். ஒரு நாட்டை யார் ஆள வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்துவிட்டால் அந்த நாட்டில் நிம்மதி இருக்காது என்பது நடைமுறை யதார்த்தம்.
சிரியா அதிபராக பஷார் அல் அசாத் தொடரக்கூடாது என உறுதியேற்று அரசுக்கு எதிரான படைகளுக்கு வெளிப்படையாக முதலில் ஆயுதப் பயிற்சியளித்ததே அமெரிக்காதான்.
2011, மார்ச்சில் உள்நாட்டுப் போராகத் தொடங்கிய இந்த விவகாரம், 2012இல் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்தே அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் போராக மாறிப்போனது.
அண்மையில் அதிபர் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷியப் படைகள் களமிறங்கியதும், ஏதோ ஒரு முடிவு கிடைக்கும்போலத் தோன்றியது. ஆனால், வழக்கம்போல குடிமக்கள் மீதான தாக்குதலாகத்தான் ரஷியாவின் வான்வழித் தாக்குதலும் ஆகிப்போனது.
இந்த 5 ஆண்டு காலப் போருக்கு சிரியா கொடுத்த விலை மிக மிக அதிகம். அரசுப் படைகள் ஒருபுறம், அரசு எதிர்ப்புப் படைகள் மறுபுறம், இஸ்லாமிய தேசம், அல்-நுஸ்ரா போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றொரு புறம், இவை போதாதென சர்வதேச நாடுகளின் விமானத் தாக்குதல் என பலமுனைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 2.50 லட்சம் பேர். 1.10 கோடிப் பேர் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். 40 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சென்றடையும் நோக்கில், மத்தியதரைக்கடலை அபாயகரமான முறையில் கடந்து உயிரை இழப்பது தனிக் கொடுமை.
"சிரியாவில் நடைபெற்றுவரும் சண்டையால் நாட்டின் நவீன வரலாற்றில் 5 ஆண்டுகளைத் தொலைத்துவிட்டோம்; 40 ஆண்டுகால சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடு இழந்துவிட்டது' என்கிறார் மேற்கு ஆசியாவுக்கான ஐ.நா. சபையின் பொருளாதார, சமூக ஆணையத்தின் துணைச் செயலர் அப்துல்லா தர்கரி.
"சிரியா மக்களுக்கான மனிதாபிமான உதவியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், சுமார் 5 லட்சம் பேர் ஏதாவது ஒரு படையின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருப்பதாலும், 45 லட்சம் பேர் அணுகுவதற்கு கடினமான பகுதியில் இருப்பதாலும் அந்த உதவிகளைச் செய்வதற்கு இயலவில்லை' என்கிறார் சர்வதேச செஞ்சிலுவை சங்க கமிட்டி தலைவர் பீட்டர் மௌரர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு மூலம், டெய்ர்-எல்-ஷோர் என்கிற சிரியாவின் கிழக்குப் பகுதி நகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வான்வெளியிலிருந்து 21 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை போடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய தேச இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நகரத்தில், தாக்குதல் அபாயம் காரணமாக மிக அதிக உயரத்தில் இருந்து உணவுப் பொருள்கள் போடப்பட்டன. ஆனால், அவை இலக்கை சரியாக அடையாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
மேலும், பல பகுதிகளில் இந்த உணவுப் பொருள்கள் பயங்கரவாதிகள் கைவசமே சென்றடையும் அபாயம் இருப்பதால், வானில் இருந்து உணவுப் பொருள்களைப் போட அனுமதிக்கப்படவில்லை. சிரியாவின் உண்மையான நிலை இதுதான்.
உதவ முயன்றும் மக்களை அணுக முடியாத நிலை. இச்சூழ்நிலையில்தான் இச்சண்டைநிறுத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதுதான் ஆறுதலான விஷயம்.
இந்த தாற்காலிக சண்டைநிறுத்தத்தால் மட்டும் 5 ஆண்டுகால பிரச்னைக்கு உடனடியாக முடிவு கிடைத்துவிடப் போவதில்லை. சொல்லப்போனால், இந்த சண்டைநிறுத்தமே சில நாள்களுக்காவது நீடிக்குமா என்பதும் சந்தேகமே.
துருக்கியின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படாதவரையில் சண்டைநிறுத்தத்தை மீற மாட்டோம் என அந்த நாடு "உறுதி' அளித்திருப்பதும், "நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்; ஆனால், எங்களைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்' என அரசுக்கு எதிரான, அமெரிக்க ஆதரவுப் படைகள் "வாக்குறுதி' கொடுத்திருப்பதும், சண்டைநிறுத்தத்தை குலைக்கும் வகையில் தொடர்ந்து தாக்குவோம் என இஸ்லாமிய தேசம் கொக்கரித்திருப்பதுமே, இந்த சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின் பலவீனத்தைக் காண்பிக்கிறது.
"வரும் நாள்கள் மிக முக்கியமானவை' என இந்த சண்டைநிறுத்தம் குறித்து தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
ஆம், ஒரு நாளேனும் சண்டையை நிறுத்துங்கள், சில நூறு உயிரையாவது காப்பாற்ற...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...