கொள்கையே இல்லாத கூட்டணிகள்
தமிழகத் தேர்தல் பற்றிய கூட்டணி குழப்பங்களும், கூப்பாடுகளும் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டன என்றே கூறலாம்.


தமிழகத் தேர்தல் பற்றிய கூட்டணி குழப்பங்களும், கூப்பாடுகளும் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டன என்றே கூறலாம். ஆளும் அ.இ.அ.தி.மு.க., ஆண்ட தி.மு.க., தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர், பா.ஜ.க. என்று ஆறு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு இத்தனை காலம் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மேல் பற்று கொண்டவர்களைக் கலக்கமடைய வைத்துள்ளது.
எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஆளும் அ.இ.அ.தி.மு.க., ஆறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஏழு இடங்களை அறிவித்துவிட்டு, மற்ற இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தம் பரப்புரையைத் தொடங்கி விட்டார். கடைசி வரை எதிர்பார்த்த தமிழ் மாநில காங்கிரஸ் வேறு வழியில்லாமல் மக்கள் நலக் கூட்டணியில் போய் சேர்ந்துள்ளது.
ஐந்து முறை ஆட்சியமைத்த தி.மு.க. இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு,தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டணி பேரத்தின் காரணமாக தே.மு.தி.க.வில் பிளவு ஏற்பட்டு மக்கள் தே.மு.தி.க. முளைத்துள்ளது. தமிழ் மாநிலக் காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் பிரிந்து மறுபடியும் தாய்க்கட்சியில் சேர்ந்துள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியும், மற்றும் சில உதிரிக் கட்சிகளும் கூட்டணியில் சேர இடம் தேடி அலைகின்றன. இவை போதா என்று நடிகர் கார்த்திக் தலைமையில் ஒரு கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் வரலாற்றில் தனியொரு கட்சியின் ஆட்சி மறைந்து கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி தலைதூக்கும் காலம் இது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
அரசியல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டனர். அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைத் தேடி வருவதும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு மக்களை மறந்து விடுவதும், மக்களின் வெறுப்புக்குக் காரணம்.
திராவிடக் கட்சிகள் எனப்படும் தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி தமிழக அரியணையைப் பிடித்து ஆட்சி புரிந்தார்கள். இரண்டு கட்சிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டபோது மூன்றாவது நம்பிக்கையான ஒரு கட்சி கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், பாட்டாளி மக்கள் கட்சியும், மக்கள் நலக் கூட்டணியும் அந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்க முயல்கின்றன.
அந்தக் காலத்தில் கட்சிகள் தொடங்கப்பட்டபோது அதற்கென சில கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்தக் கொள்கைகளைப் பரப்பிட கொ.ப.செ. எனப்படும் கொள்கைப் பரப்புச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
ஆனால், எந்தக் கட்சியிலும் கொள்கைகள் பரப்பப்பட்டதாகத் தகவல் இல்லை. கூட்டணி சேர்வதற்காகக் கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாத கட்சிகளையே இப்போது பார்க்க முடிகிறது.
ஆட்சியைப் பிடிப்பதும், பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்வதும், பணம் சேர்ப்பதுமே ஒரே கொள்கையாகக் கொண்டு கூட்டணிகள் அமைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதனை நல்லவர்களும், நடுநிலையாளர்களும், மக்களாட்சியின் மேல் நம்பிக்கை கொண்டவர்களும் வேதனையோடு வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
கட்சிகளை உடைப்பதையே கலையாகக் கொண்ட சில கட்சிகள் பணம், பதவி இவற்றைக் காட்டி, செல்வாக்கு மிகுந்தவர்களை இழுக்கும் நிலை இப்போது அதிகரித்துள்ளது. கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாத போக்கு இதற்கு எண்ணெய் ஊற்றி எரியச் செய்கிறது. ஜனநாயகத்தை இப்படியா அவமானப்படுத்துவது?
தேர்தல் ஆணையம் பல கடுமையான சட்டதிட்டங்களைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உறுதி கொண்டுள்ளோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். இதனையே தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் வழிமொழிந்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி சென்னையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்திய பிறகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது பண நடமாட்டத்தைக் கண்காணிக்க வலிமையான கண்காணிப்பு அமைப்பு தேவைப்படுகிறது என்றும், இந்த அமைப்பில் மத்திய - மாநில அரசுகளின் அதிகாரிகள் இடம் பெறுவது அவசியம் என்றும், இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் உருவாக்கும் புதிய உத்திகளுக்கேற்ப அதனை முறியடிக்கும் உத்திகளையும் அரசியல் கட்சிகள் கண்டுபிடித்துக் கொண்டே போனால், இந்த மக்களாட்சி முறை எங்கே போய் முடியும்? நாகரிகமுள்ள ஒரு சமுதாயம் இதனை எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறது? வாக்காளர்களை வறுமையின் உச்சத்தில் வைத்துவிட்டு வாங்காதே என்றால் தடுக்க முடியுமா?
மதுவைக் கொண்டு வந்து மக்களை அடிமையாக்கியவர்களே அதை மூடுவதாகக் கூறி வாக்குக் கேட்பதும், மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எதுவும் செய்யாமல் இப்போதும் வாக்குறுதி தருவதும், விவசாயிகளின் தற்கொலையைக் கேலி பேசியவர்கள் கடன் தள்ளுபடி செய்வதாக அறிக்கை அளிப்பதும் தேர்தல் காலத் தந்திரம் என்பது தெரியாதா?
இடதுசாரிகள் மக்களுக்காகவே அரசியல் நடத்துபவர்கள் என்று பாராட்டப்பட்டாலும், அவர்கள் வந்து விடக்கூடாது என்று ஆளும் சுயநல சக்திகள் திட்டம் போட்டுச் செயல்படுகின்றன. இடதுசாரிகளும் இந்தப் பணபலத்துடன் போராட முடியாமல் தடுமாறுகின்றன. நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னால் போதுமா?
இது மக்களாட்சி என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? எங்கும் ஆளும் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆளும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளும், சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. வாக்களித்த மக்களுக்குக் காட்டும் வழி இதுதானா?
அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற பெரிய நோக்கத்தில் உருவானது. தேச நலனுக்காக உடல், பொருள், உயிரை அர்ப்பணித்த தியாகிகளின் குருதியால் எழுதப்பட்ட பிரகடனம் அது. இப்போது அது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?
இன்று அரசியல் என்பது முதல் போடாமல், அதிக முயற்சியில்லாமல் செய்யப்படும் வணிகமாகி விட்டது. அரசியலில் ஈடுபடுவதன் நோக்கமே பணம், பதவி, உல்லாசம் என்று ஆகிவிட்ட பிறகு எல்லா நெறிமுறைகளும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. நல்லவர்களால் இந்தப் போட்டியில் ஈடு கொடுக்க முடியவில்லை.
சுதந்திரத்துக்கு முன் நிகழ்ந்த முதல் பொதுத் தேர்தல் 1920-ஆம் ஆண்டு. அதில் நீதிக்கட்சி 98க்கு 63 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்த சர்.பிட்டி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். அவர் பரிந்துரையின் பேரில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல்வரானார்.
பனகல் ராஜாவும், கே.வி.ரெட்டி நாயுடுவும் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1954-இல் ராஜாஜிக்குப் பிறகு காமராசர் முதலமைச்சரானார். சிறப்பாக ஆட்சி புரிந்த காமராசர், மூத்த தலைவர்கள் பதவி விலகிக் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற அவரது திட்டத்தின்படி 1963 அக்டோபர் 2 அன்று பதவியை விட்டு விலகினார். பதவிகளைத் துச்சமெனத் தூக்கி எறியும் இப்படிப்பட்ட தலைவர்களை எப்போது காணப்போகிறோம்?
ஆனாலும், இப்படிப்பட்ட உன்னதமானவர்களின் ஆட்சியை உருவாக்கப் போகிறோம் என்று பேசுகிறவர்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.
அரசின் அரியணையில் அமர்வதென்பது, புலியின்மேல் சவாரி செய்வது போன்றது. அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை, உல்லாச வேளையும் இல்லை என்று முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கூறினார்.
அந்தக் காலத்தில் அரசியல்வாதிகள் அப்படித்தான் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். புகழ் வருமானால் உயிரையும் கொடுப்பர்; பழி வருமானால் உலகமே கிடைப்பதாயினும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களால்தான் உலகம் நிலைபெற்று இருக்கிறது.
இன்றைய அரசியல் நிலை இதற்கு எதிர்மாறானது. ஆட்சியதிகாரத்திற்காக ஆலாய்ப் பறக்கிறார்கள். கொள்கைகளைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. எந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று தேடி அலைகிறார்கள். அங்கே இடம்பிடித்து ஆட்சியதிகாரத்தில் அமரவேண்டும். இதுதான் இப்போது ஒரே கொள்கையாக இருக்கிறது.
இதற்கு எப்படியாவது பணப் பட்டுவாடா செய்தாவது வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். எத்தனை பறக்கும்படை வந்தாலும் இதனை முற்றிலும் தடுத்துவிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. காவல்துறையும், சட்ட திட்டங்களும் இந்த முறைகேடுகளுக்குத் துணை போகின்றன.
ஒரு வேட்பாளர் முறைகேடாக வெற்றி பெற்றார் என்று தொடுக்கப்படும் வழக்கு ஐந்தாண்டுகளுக்குள் தீர்ப்பு கூறப்படுவதில்லை. தீர்ப்பு கூறப்பட்டாலும் பதவிக் காலத்தில் பெறப்பட்ட பணப்பலன்கள் திரும்பப் பெறுவதற்கு முறையான சட்டதிட்டம் இல்லை. பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் பதவிக் காலமே முடிந்து விடுகிறது.
பதவிக் காலம் முடிந்த பிறகு, வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு கூறப்பட்ட வேடிக்கையான வழக்குகளும் உண்டு. ஒவ்வொரு தேர்தலின் போதும் இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், மாற்றம்தான் ஏமாற்றமாக இருக்கிறது.
காட்டை அழிக்க வேண்டுமானால் ஆடுகளை விடு. ஆற்றைக் கெடுக்க வேண்டுமானால் நாணலை இடு. நாட்டைக் கெடுக்க வேண்டுமானால் அரசியலில் ஈடுபடு என்று கவிஞர் கண்ணதாசன் கேலியாகக் கூறியது சிரிப்பதற்கும், சிந்திப்பதற்குமே. இது உண்மையாகி விடக் கூடாது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...