சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சட்டப் பேரவை மாண்பைச் சீரழித்தது யார்?

நாடு விடுதலைப் பெற்றப் பிறகு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்ற 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:03 pm

பழ. நெடுமாறன்

நாடு விடுதலைப் பெற்றப் பிறகு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்ற 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை.
 காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சையாளர்கள் பலரைச் சேர்த்துக்கொண்டு முதல்வர் இராஜாஜி சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டினார்.
 ஆனாலும், சட்டப் பேரவையில் பல கட்சிகள் கூடி அமைத்த ஐக்கிய சனநாயக முன்னணி வலிமையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. டி.பிரகாசம், பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், உ. முத்துராமலிங்கத் தேவர், முகமது இஸ்மாயில், பி.டி. இராசன் போன்ற சிறந்த தலைவர்கள் தங்களின் வாதத்திறமையால் ஆட்சியாளர்களுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர். ஆனால், எந்தக் காலக் கட்டத்திலும் சட்டப் பேரவை மரபுகளுக்கு மாறுதலாகவோ, சனநாயக நடைமுறைகளுக்கு எதிராகவோ அவர்கள் ஒருபோதும் செயல்படவில்லை.
 1957-ஆம் ஆண்டில் முதல்வராக காமராசரும் எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க. தலைவர் அண்ணா, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவின் தலைவர் வி.கே. இராமசாமி முதலியார், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் உ. முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்டுத் தலைவர் எம். கல்யாண சுந்தரம், சோசலிஸ்ட் தலைவர் பி.எஸ். சின்னத்துரை போன்றவர்கள் வீற்றிருந்து மன்றத்தின் பெருமையை உயர்த்தினர்.
 முதுகுளத்தூர் கலவரத்தையொட்டி நடைபெற்ற அடக்குமுறைகளைக் கண்டித்து காமராசர் அமைச்சரவையின் மீது எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. ÷பதற்றம் நிலவிய அந்தச் சூழ்நிலையிலும் இருதரப்பிலும் கூச்சல், குழப்பம் எதுவும் இல்லாமல் வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக இருந்தாலும் சட்டப் பேரவையின் கண்ணியத்திற்கு எத்தகைய பங்கமும் நேரவில்லை.
 1962-ஆம் ஆண்டு முதல்வராக காமராசரும் எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவராக இரா. நெடுஞ்செழியன், சுதந்திரக் கட்சித் தலைவராக சா. கணேசன், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக டி.எல். சசிவர்ணத் தேவர், கம்யூனிஸ்டுத் தலைவர் எம். கல்யாணசுந்தரம் போன்றவர்களும் வீற்றிருந்து சட்டப் பேரவையின் உயர் மரபுகளைக் காத்தனர். வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தி.மு.க. தலைவர் அண்ணா அவர்கள் முதல்வரானார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.ஜி. கருத்திருமன், சுதந்திரக் கட்சித் தலைவராக ஹெச்.வி. ஹண்டே, மார்க்சிஸ்டுக் கட்சியின் தலைவர் என். சங்கரய்யா, பிரஜா சோசலிஸ்டுக் கட்சியின் தலைவர் ஏ.ஆர். மாரிமுத்து போன்றவர்கள் வீற்றிருந்தனர். அவையின் நடவடிக்கைகளில் சனநாயக மரபுகள் பேணப்பட்டன.
 1971-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தலைவரான மு. கருணாநிதி முதல்வராக இருந்தார். தி.மு.க.வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சியின் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்குகளை காட்டவேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார். இதன் விளைவாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். கருணாநிதி அமைச்சரவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது, அது நீடிப்பது சரியா என்ற கேள்வியை சட்டப் பேரவையில் எம்.ஜி.ஆர். எழுப்பினார். பேரவைத் தலைவராக இருந்த மதியழகன் சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு நின்று மக்களைச் சந்தியுங்கள் என்று கூறிவிட்டு பேரவையை ஒத்தி வைத்தார்.
 இதன் விளைவாக, சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவந்தது. இது குறித்து விவாதிக்க 2.12.1972 அன்று சட்டப் பேரவை கூடியபோது, பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முதலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும். எனவே, மதியழகன் தலைமை தாங்கக்கூடாது, என தி.மு.க. வலியுறுத்தியது.
 அக்கோரிக்கையை ஏற்க மதியழகன் மறுத்துவிட்ட காரணத்தினால், பேரவைத் துணைத் தலைவரான சீனிவாசன் பேரவைத் தலைவர் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து பேரவையை நடத்த முற்பட்டார். ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் தலைமை தாங்கும் கோமாளிக்கூத்து அரங்கேற்றப்பட்டது. இரு தரப்பிலும் கூச்சல் குழப்பங்கள் மேலிட்டன.
 மதியழகன் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் துணைத் தலைவர் சீனிவாசனும், அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மதியழகனும் அறிவித்தனர். அவையிலிருந்து மதியழகனும் எம்.ஜி.ஆரும் வெளியேறியபோது அவர்களை நோக்கிச் செருப்புகள் வீசப்பட்டன. சட்டப் பேரவை செத்துவிட்டதாகக் கூறிவிட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர். பின்னர் வரவேயில்லை.
 1952-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை ஆளுங்கட்சியினாலும், எதிர்க்கட்சிகளாலும் கட்டிக் காக்கப்பட்ட சட்டப் பேரவையின் சிறந்த நெறிமுறைகள், உன்னதமான மரபுகள், எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணியம் ஆகியவை காற்றில் பறக்கவிடப்படும் நிலை தி.மு.க., அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆண்ட காலத்தில்தான் உருவானது.
 1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் அ.தி.மு.க. செயலலிதா அணி என்றும் சானகி அணி என்றும் இரண்டாகப் பிளவுபட்டது. முதல்வராக சானகி அம்மையார் பொறுப்பேற்றார். 28-1-1988 அன்று அவர் அமைச்சரவை மீதான நம்பிக்கைத் தீர்மானம் சட்டப் பேரவையில் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்பட்டபோது வரலாறு காணாத கலவரம் மூண்டது.
 இரு தரப்பினரும் ஒலி பெருக்கிகளைப் பிடுங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும் சட்டப் பேரவைக்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். சட்டப் பேரவை உறுப்பினர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
 இவ்வளவு கலவரங்களுக்கிடையே, செயலலிதா ஆதரவு 33 உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்திருப்பதாகவும் அமைச்சரவையின்மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் சட்டப் பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் அறிவித்தார். ஆனால், 30-1-88 அன்று மத்திய அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கெட்டுவிட்டதாகக்கூறி தமிழக அரசைப் பதவி நீக்கியது. சட்டப் பேரவை கலைக்கப்பட்டது.
 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது. அ.தி.மு.க. செயலலிதா அணி 27 இடங்களிலும், சானகி அணி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் 26 இடங்களைப் பெற்றது.
 25-03-1989 அன்று சட்டப் பேரவைக் கூடியபோது முதல்வர் கருணாநிதி வரவு-செலவு திட்ட உரையைப் படிப்பதற்காக எழுந்தார். உரையைப் படிக்கக்கூடாது என செயலலிதா எதிர்த்ததைத் தொடர்ந்து பெரும் அமளி மூண்டது. தான் தாக்கப்பட்டதாகக் கூறி செயலலிதா அவையை விட்டு வெளியேறினார்.
 1991-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று செயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்றார். தி.மு.க.வின் சார்பில் கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். இதன் விளைவாக, அவர் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
 அதற்குப் பின்னர், 1996-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா சட்டப் பேரவைக்குச் செல்வதில்லை. அதைப்போல, அ.தி.மு.க. ஆளுங்கட்சியானால், தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைக்குச் செல்வதில்லை. இவர்களின் இந்தத் தவறான வழிமுறையை தே.மு.தி.க. எதிர்க்கட்சியான போது அதன் தலைவர் விஜயகாந்த் பின்பற்றி சட்டப் பேரவைக்குச் செல்வதைப் புறக்கணித்தார்.
 மாநில முதல்வர் பதவி எந்தளவுக்குப் பொறுப்புமிக்க பதவியோ அந்த அளவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் மிக மிக முக்கியப் பதவியாகும். சட்டப் பேரவையில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதும் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாகும். கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வகித்தவர்கள் சட்டப் பேரவைக்குச் சென்றதே கிடையாது.
 சட்டப் பேரவைக்குச் சென்றால் முதல்வராக மட்டுமே போவது என்ற முடிவுடன் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் யாராக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டப் பேவைக்கு அனுப்பப்படுகிறார். சட்டப் பேரவைக்குச் சென்று கடமையாற்ற விருப்பமில்லாவிட்டால் பதவியைவிட்டு விலகி மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட வழிவிடவேண்டும். சட்டப் பேரவைக்கும் போவதில்லை; பதவியைவிட்டும் விலகுவதில்லை என்னும் நிலைப்பாடு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, சனநாயகத்தைத் துச்சமாக மதிக்கும் போக்காகும்.
 கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்தவர்கள் சட்டப் பேரவைக்குச் சென்று தங்களின் சனநாயக கடமையைப் பொறுப்புடன் ஆற்றாத காரணத்தினால்தான் ஆட்சியில் இருப்பவர்கள் தங்குதடையில்லாத ஊழல்களிலும் நிருவாகச் சீர்கேடுகளிலும் இயற்கை வளங்களைச் சூறையாடுவதிலும் ஈடுபட முடிந்தது.
 அது மட்டுமல்ல, சட்டப் பேரவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் துணிவு ஆளுங்கட்சியினருக்கு ஏற்படுகிறது. சட்டப் பேரவை கூடும் நாள்களும் குறைந்துவிட்டன. கூடினாலும் கூச்சல் குழப்பத்துடன் ஒத்தி வைக்கப்படுவது பெருகி
 விட்டது. மக்கள் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தகுதியற்றப் பிரச்னைகள் முன்னுக்கு வைக்கப்படுகின்றன. இத்தகைய தவறுகளுக்கெல்லாம் ஆளுங்கட்சி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. எதிர்க்கட்சிக்கும் அக்குற்றத்தில் சரிசமமான பங்குண்டு.
 முச்சந்திகளில் நின்று முழக்கமிடாமல், சட்டப் பேரவைக்குள் சென்று அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்துத் திருத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பெரும் கடமையாகும். அவர் அவ்வாறு செய்யத் தவறினால் ஆட்சி சீர்கெட்டுப்போகும் என்பதை வள்ளுவர் -
 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 கெடுப்பார் இலானுங் கெடும்
 - என்றார்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 உலகத் தமிழர் பேரமைப்பு.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.