தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தல்...
மே 16-இல் தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல். அங்கேயும், இங்கேயும் அலைபாய்ந்த கட்சிகள் தங்களது வசதிக்கேற்ப ஒன்று சேர்ந்து


மே 16-இல் தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல். அங்கேயும், இங்கேயும் அலைபாய்ந்த கட்சிகள் தங்களது வசதிக்கேற்ப ஒன்று சேர்ந்து பல அணிகளாக மாறியுள்ளன. நடைபெற இருக்கின்ற இந்தப் பொதுத் தேர்தல் சற்று வேறுபட்ட குழப்பங்களோடு கூடிய ஒன்றுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த தேர்தலில்தான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சி இனி வேண்டாம் என்ற கருத்தைப் பல அரசியல் கட்சிகள் சொல்லத் தொடங்கியுள்ளன. அதன் அடிப்படையில், புதிய அணிகள் உருவாகி தேர்தல் களம் சூடேறிக்கொண்டிருக்கிறது.
தேர்தல் முறைதான் ஒரு நாட்டின் ஜனநாயகத் தரத்தை உறுதி செய்கிறது. அதியற்புதமான இந்த அடையாளத்தைத்தான் நமது அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் போட்டி போட்டுக் கொண்டு சிறுமைப்படுத்திச் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. எப்பாடுபட்டாவது வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என்று அரசியல் கட்சிகள் நினைக்கின்றன, அவற்றின் வேட்பாளர்கள் நினைக்கிறார்கள்.
அரசு நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டு சுவைப்பதற்கும், சுகிப்பதற்கும் இங்கே கடும்போட்டி நிலவுகிறது. நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தானும் ஒரு சட்டப் பேரவை உறுப்பினராக வேண்டும் என்று கனவு கண்ட அரசியல் கட்சியினரின் எண்ணிக்கை எத்தனை லட்சம் என்பது தெரியவில்லை. ஆனால், பணக்கட்டுகளோடு கட்சிகளின் தலைமையகத்துக்கு வந்து விருப்ப மனு கொடுத்து, தாங்கள் போட்டியிடத் தொகுதிகளைக் கேட்டவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. மனுக்களோடு சேர்த்துக் கொடுக்கப்பட்ட அத்தனைப் பேருடைய பணமும் கட்சிக் கணக்கிற்குப் போய்விடும்.
விருப்ப மனு அளித்தவர்கள் தங்களது ஊர்களுக்குப் போய்விடுவார்கள். அவர்களது விருப்ப மனுக்களோ கட்சியின் பரண்களுக்குப் போய்விடும். நமது கட்சிகள் நடத்துகிற விருப்ப மனுக் கலாசாரத்தில் மனு மட்டும்தான் கட்சிக்காரர்களுடையது. யாரை களத்தில் நிறுத்த வேண்டும் என்கிற விருப்பம் கட்சியுடையது.
அவ்வகையில், தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு அணியும் தலா 234 வேட்பாளர்கள் எனும் கணக்கில் அனைத்து அணியும் சேர்ந்து சற்றேறக்குறைய மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை வரும் தேர்தலில் அதிகாரப்பூர்வமாகக் களமிறக்க இருக்கின்றன. சுயேச்சை வேட்பாளர்களால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். ஆக, இந்தத் தேர்தலில் சட்டப் பேரவை உறுப்பினர்களாகிவிட வேண்டும் என்று கனவு கண்டவர்கள் ஒரு லட்சம் பேர், களம் காண்பவர்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர், வெற்றி காண்பவர்கள் 234 பேர் எனும் கணக்கில் இந்த சட்டப் பேரவைத் தேர்தல் ஒரு முடிவுக்கு வர இருக்கிறது.
எது எப்படியிருப்பினும், 1,250-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் இந்தத் தேர்தலிலும் தோற்கப்போவது உறுதி. இது அபசகுன வார்த்தையல்ல. கண்கூடான உண்மை.
வெற்றிபெறுவதே வேட்பாளர்களின் நோக்கமாக இருப்பதால் தங்களது வெற்றிக்காக அவர்கள் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். அதிகாரபூர்வமாகத் தேர்தல் களத்தில் இறங்கிப் போட்டியிடுகின்ற ஒவ்வொரு வேட்பாளரும், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், வெற்றி பெற்றதும் எல்லாம் சரியாகிவிடும் என்றும், கட்சித் தலைமை தனக்களித்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விடமாட்டேன் என்றும் முதலில் தனது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் உத்தரவாதம் அளித்து அதன் பின்னரே வீதிக்கு வந்து வாக்காளப் பெருமக்களுக்கு வேண்டிய வழக்கமான வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
ஒரு தொகுதியில் அதிகாரபூர்வமான ஒரு வேட்பாளர் செலவு செய்கின்ற பெரும் பணம் ஒரு முதலீடாகக் கருதப்படுவதும், பொதுப்புத்தியில் அது அங்கீகரிக்கப்படுவதும், வெற்றி பெற்ற பிறகு செலவுத் தொகையை முன்னிறுத்தி ஊழல் தொகையை மறைக்க முயல்வதும் நமது ஜனநாயகத்திற்கு நேர்ந்திருக்கின்ற மாபெரும் அவலம்தான்.
இதுவரை நடந்த பல தேர்தலில் செலவு செய்யப்பட்ட தொகை அனைத்தையும் பல்வேறு புதிய தொழில்களில் முதலீடு செய்திருந்தால் அதன் விளைவாக நாட்டின் தொழில் வளர்ச்சி எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
நெடுங்காலத் தேர்தல் அனுபவங்களையும், பல ஆண்டுகளாக பல களங்களில் இருந்தும் துளைபோட்டு உறிஞ்சியெடுத்த பெரும் பண பலத்தையும், தாங்கள் வசப்படுத்திய அதிகார வர்க்கத் துணையையும் கொண்ட அரசியல் கட்சிகளே தேர்தல் ஆணையத்துக்கும், நடுநிலைத் தேர்தல் முறைகளுக்குமான பெருஞ்சவால்களாக இருக்கின்றன.
நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்த பின்னரும் வறுமை ஒழிக்கப்படவில்லை. தேர்தல்களில் பண பலமும் அதிகார பலமும் தேர்தலுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதோடு தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களும் குவிந்து கொண்டே இருக்கின்றன.
தேர்தலில் பணம், மது போன்றவை வாக்காளர்களுக்குக் கைமாறுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு உரிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார் தற்போதையத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி. அவரது நடவடிக்கைகளில் பெரும்பாலானவை வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படக்கூடிய பணத்தை மையமிட்டவைகளாகவே இருக்கின்றன. அந்த அளவுக்கு தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சிகளின் பணம் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிற கலாசாரம் கடந்த 1962-ஆம் ஆண்டு தேர்தலிலேயே பரவலாகக் கவனம் பெற்றது.
"ஐந்து ரூபாய் பணத்தின் மீது வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுக்கிறீர்களே, இதற்கெல்லாம் கூடவா வெங்கடேச பெருமாள் சாட்சியாக இருப்பார்? அதுவா அவரது வேலை? என்மீது உங்களுக்குக் கோபம் என்றால் என்னை ஏசுங்கள், ஒன்டிச் சண்டியாய்ப் போகும்போது அடித்துப் போடுங்கள். ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளாதீர்கள்' என்று தான் போட்டியிட்ட காஞ்சிபுரத்தில் பணம் கொடுத்த எதிர்கட்சிக்காரர்களைப் பார்த்து அண்ணாதுரை கேட்டுள்ளார்.
அத்துடன், "வாக்களிக்கப் பணம் வாங்குகின்ற வாக்காளர்களே... அந்தப் பணத்தை வாங்காதீர்கள். அது லஞ்சப் பணம். ஊழல் செய்து, கொள்ளையடித்துச் சம்பாதித்த பணம். அந்தப் பணம் பாவத்தின் சின்னம்; அதை வாங்குவதற்குக் கைகள் நடுங்க வேண்டும்; அதைப் பார்ப்பதற்கே கண்கள் கூச வேண்டும். வாக்களிக்கப் பணம் பெற்றுக்கொண்டு ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள்,' என்று வாக்காளர்களைப் பார்த்தும் உருக்கமானதொரு நீண்ட உரையை நிகழ்த்தினார்.
இதுவரை நமது தமிழ்நாடு 14 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. அத்தனைத் தேர்தல்களிலும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போவதாகவே முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அனைத்து நிலைத் தொழிலாளர்கள் நலன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகவே கையேந்திக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் இன்னமும் நீடிக்கிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகான முதல் மூன்று, நான்கு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களால் மட்டுமே கல்விக் கூடங்களும், அணைகளும் பல்வேறு தொழிற்சாலைகளும் தமிழக மக்களுக்குக் கிடைத்தன. அதன் பிறகு அமைந்த அரசுகள் அடிப்படையான அந்த மூன்று வசதிகளையும் மேம்படுத்தியும் விரிவுபடுத்தியும் நிர்வகிக்காமல் சீர்குலையவிட்டன.
பிரமாண்டமான மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும், விளக்கக் கூட்டங்களும், போட்டா போட்டிகளும், பதிலடிகளும், லாவணிகளும், கண்டனக் கூட்டங்களும், அறிக்கைப் போர்களுமே கடந்த காலங்களில் பல்லாயிரக் கணக்கில் நடந்தேறின. மக்களுக்குத்தான் எதுவும் நடக்கவில்லை.
வலிமையான, தூய்மையான கரங்களோடு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முடியாத சுயநலம் நிறைந்த கையறு நிலையே நமது பெரிய, பெரிய அரசியல் கட்சிகளை வாக்குகளுக்குப் பணம் கொடுக்கிற நிலைக்குத் தள்ளின. வாக்குகளுக்குப் பணம் தருவது என்கிற செயல் மக்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது, கேள்வி கேட்க முடியாதவர்களாக அவர்களை மாற்றுகிறது, கீழான ஒரு பழக்கத்திற்கு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதையெல்லாம் நமது அரசியல் வாக்கு வாங்கிகள் சிந்திக்க மறுக்கின்றனர்.
இத் தேர்தலில் பணத்தின் விளையாட்டுகள் எத்தகைய வீரியம் மிக்கதாக இருக்கும் என்பதைத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகளில் இருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டியவர்கள், வாக்கு உரிமையை பணத்துக்கு விற்பனை செய்யக் கூடாது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் வாக்காளர்களேயாவர். மேலும், நமது அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என்ற பெயரில் தங்களுக்கு உகந்தவர்களையே மக்கள்மீது திணிக்கும். இதிலும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் வாக்காளர்களேயாவர்.
ஒரு தொகுதியில் எந்தக் கட்சியின் எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் அவர்களில் மக்கள் நல உணர்வு மிகுந்த ஒருவரை மனதளவில் தேர்வு செய்து அத்தகையோரையே சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
வரும் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்ற 5.79 கோடி வாக்காளர்கள் கூடுதல் விழிப்புணர்வோடு இருந்து வாக்களித்து இதைச் சாத்தியப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகத் தகவல் தொடர்பில் தேர்ந்த கல்வியறிவு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலின் தரத்தை உயர்த்தக் கடமைப்பட்டவர்களாக உள்ளனர்.
அதாவது, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இல்லையென்றால், "வாக்குகளுக்குப் பணம் கொடுத்து தேர்தல் ஜனநாயகத்தைக் கொன்றால் பாவம்; அந்தப் பாவம் தேர்தலில் வென்றால் போச்சு' என்று நினைத்து செயல்படுகின்ற அரசியல் கட்சிகளின் கீழ்மை, தேர்தல் தோறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...