சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மரண தண்டனையும் பயங்கரவாதமும்

பயங்கரவாதம், தேசத் துரோகம் ஆகியவை தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு அதிக அளவு தண்டனையான மரண தண்டனை தேவையில்லை என்று

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:39 am

பழ. நெடுமாறன்

பயங்கரவாதம், தேசத் துரோகம் ஆகியவை தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு அதிக அளவு தண்டனையான மரண தண்டனை தேவையில்லை என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
 உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசரான ஏ.பி.ஷாவைத் தலைவராகவும், 9 உறுப்பினர்களையும் கொண்ட இந்தச் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஒரு முழு நேர உறுப்பினர், இரண்டு அரசுப் பிரதிநிதிகள் ஆகியவர்களைத் தவிர பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
 மரண தண்டனையை இரத்து செய்வதற்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டாலும், அது விரைவாகவும் திரும்பப் பெறப்படாததாகவும் இருக்க வேண்டும் என்று கூறும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் அளிக்கப்படும். பிறகு, மத்திய சட்ட அமைச்சகம் சட்ட முன்வடிவைத் தயாரித்து மத்திய அரசின் துறைகளுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி கருத்து கேட்கும்.
 அதன்பிறகு, சட்ட முன்வடிவு இறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன் வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாகி நடைமுறைக்கு வரும்.
 தமிழ்நாட்டில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் நீண்ட காலமாக பல்வேறு மாநாடுகளையும், கருத்தரங்குகளையும், பேரணிகளையும் நடத்தி வந்துள்ளது. 25 இலட்சம் மக்களிடம் கையெழுத்துகளைத் திரட்டி தமிழக அரசிடம் அளித்துள்ளது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானும் இயக்கத்தில் அங்கம் வகிக்கும் தோழர்களும் சட்ட ஆணையத்தின் பரிந்துரை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
 எங்களைப் போலவே இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மரண தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் அனைவருக்கும் சட்ட ஆணையத்தின் பரிந்துரை முழுமையான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 இந்தியாவில் மனித உரிமை இயக்கங்கள், மரண தண்டனை ஒழிப்பு இயக்கங்கள் ஆகியவற்றின் தந்தையாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவருமான உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
 1974-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் எடிகா அன்னம்மா வழக்கில் முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதியரசர்களில் ஒருவரான நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது என காந்தியடிகள் கூறியதை மேற்கோளாகக் காட்டி அந்த இளம் பெண்ணைத் தூக்கில் இடக்கூடாது எனத் தீர்ப்பளித்தார்.
 1979-ஆம் ஆண்டிலும் மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பினையே அவர் வழங்கினார். இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் பெரும் கூக்குரல் எழுந்தது.
 உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் மரண தண்டனை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளபோது, அதற்கு எதிரான தீர்ப்பை நீங்கள் வழங்குவது சரியா என உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் அவரை அழைத்துக் கேட்டபோது, மரண தண்டனை விதிக்கலாமா, கூடாதா என்பதற்கான வரையறை வகுக்கப்பட வேண்டும், இந்த வரையறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து, அப்படிக் கடைப்பிடித்தால் நடைமுறையில் மரண தண்டனையே இல்லாமல் செய்துவிடலாம் என்றார் வி.ஆர். கிருஷ்ணய்யர்.
 இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. இந்த ஆயம் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறியது.
 ஆனால், அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு எத்தகைய விளக்கமும் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு சில நீதியரசர்கள் தாங்கள் விதிக்கும் மரண தண்டனைகளுக்கு இது அரிதினும் அரிதான வழக்கு என்று காரணம் காட்டுகிறார்கள்.
 நீதிமன்றம் விதித்த தண்டனையால், ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்தத் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டார். ஆனால், எத்தனை நீதியரசர்களுக்கு இத்தகைய மனித நேய உணர்வும், மனச்சான்றும் இருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாகும்.
 சட்டத் தொகுப்பில் மரண தண்டனை பற்றிய விதிமுறைகள் இருக்கும்வரை நீதியரசர்கள் இதுபோன்ற முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சட்ட ஆணையத்தின் பரிந்துரை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதற்கான சட்ட முன்வடிவை மத்திய அரசு உடனடியாகக் கொண்டுவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் நம்புகின்றனர்.
 பயங்கரவாதம், தேசத் துரோகம் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என சட்ட ஆணையம் அளித்துள்ள பரிந்துரை விவாதத்துக்கு உரியதாகும். பயங்கரவாதம் என்பதற்கு உலக அளவில் திட்டவட்டமான தெளிவான விளக்கம் இதுவரை யாராலும் கூறப்படவில்லை.
 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் இச்சொல்லுக்கான விளக்கத்தைக் கண்டறிய ஐ.நா. பேரவை செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஐ.நா. உறுப்பினர்களுக்கிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவின.
 தேசிய விடுதலைப் போராட்டங்கள், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களைப் பயங்கரவாதம் எனக் கூறக்கூடாது என்ற கருத்தே மேலோங்கி நிற்கிறது. ஒரு தரப்பினரால் விடுதலைப் போராட்ட வீரராகக் கருதப்படும் ஒருவரை மற்றொரு தரப்பினர் பயங்கரவாதி என கூறலாம்.
 கிரேக்க அறிஞர் சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்தும், ஜெருசலேத்தில் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தும், பிரான்சில் ஜோன் ஆஃப் ஆர்க்கை உயிரோடு கொளுத்தியும் சாகடித்தார்கள். ஆனால், அவர்கள் இன்றளவும் மக்களின் இதயங்களில் உயிர்த்தெழுந்து வாழ்கிறார்கள்.
 ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய முஜாகிதின் படையினரை அப்போதைய அமெரிக்க அதிபரான ரீகன் பாராட்டினார். இராணுவ ரீதியிலான உதவிகளையும் செய்தார்.
 பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானத்தில் பதவியிலிருந்த அரசு, வெளிநாட்டு சக்திகளால் அமைக்கப்பட்ட அரசு எனக் கருதிய அதே முஜாகிதின் படையைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்த்துப் போராடியபோது அவர்களை பயங்கரவாதிகள் என அமெரிக்காவின் அதிபராக அப்போது இருந்த ஜார்ஜ் புஷ் குற்றம் சாட்டினார்.
 தென்னாப்பிரிக்கக் கருப்பர்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என குற்றம்சாட்டி 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. ஆனால், பிற்காலத்தில் அவரை சமாதானத் தூதுவராகப் பாராட்டி நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 இந்தியாவில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதி ராய் வெள்ளையர் ஆட்சியின்போது கடுமையான தடியடிக்கு ஆளாகி மரணமடைந்தார். அவருடைய சாவு கண்டு கொதிப்படைந்த பகத் சிங்கும், அவரது தோழர்களும் அதற்குக் காரணமான வெள்ளை அதிகாரியைச் சுட்டுக் கொன்றனர். ஆங்கிலேய ஆட்சி பகத் சிங்கையும், அவரது தோழர்களையும் பயங்கரவாதிகளாகக் குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது. ஆனால், நாட்டு மக்கள் இன்றளவும் பகத் சிங்கையும், அவரது தோழர்களையும் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களாகக் கருதிப் போற்றுகிறார்கள்.
 அரசுகளே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும்போது, அது அரசு பயங்கரவாதம் என அழைக்கப்படுகிறது. காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்திய இராணுவமும், மத்திய காவல் படைகளும் அப்பாவிப் பொது மக்களுக்கு எதிராகக் கையாளும் மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்முறைகளும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை அரசுகள் பாதுகாக்கின்றன என்பதைவிட வெட்கக்கேடு வேறு இருக்க முடியாது.
 ஓர் அரசே பயங்கரவாதத்தில் ஈடுபடும்போது மற்றவர்களைப் பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டும் தார்மிக உரிமை அந்த அரசுக்கு இருக்க முடியாது.
 எனவே, பயங்கரவாதம், தேசத் துரோகம் ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிப்பதாக இருந்தால் அரசு பயங்கரவாதத்தில் ஈடுபடும் படை வீரர்களுக்கும், காவல் படையினருக்கும் அதே தண்டனையை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 2010-ஆம் ஆண்டில் போலி மோதலில் அப்பாவி காஷ்மீர் மக்கள் சிலரை படுகொலை செய்ததாக இராணுவ நீதிமன்றம் ஆறு இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக அண்மையில் வெளியாகியிருக்கும் செய்தி இதைத்தான் உறுதி செய்கிறது.
 எனவே, உலக அளவில் பயங்கரவாதம் என்ற சொல்லுக்குச் சரியான விளக்கமே அளிக்கப்படாத நிலையில் அதன் அடிப்படையில் மரண தண்டனையை விதிப்பதென்பது நியாயமற்றதாகும்.
 உலகில் 109 நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்துவிட்டன. சட்டப் புத்தகத்தில் இருந்தாலும் நடைமுறையில் 8 நாடுகள் மரண தண்டனை விதிப்பதில்லை. மொத்தம் 117 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.
 புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் பிறந்த நாட்டில் மரண தண்டனை நீடிப்பது ஏற்கத்தக்கது அல்ல. சட்ட ஆணையம் அளித்த பரிந்துரைக்குப் பிறகாவது அதை அறவே ஒழிப்பது மேற்கண்ட மாபெரும் சான்றோர்களை மதித்துப் பின்பற்றுவதாக அமையும்.
 சட்டத் தொகுப்பில் மரண தண்டனை பற்றிய விதிமுறைகள் இருக்கும்வரை நீதியரசர்கள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சட்ட ஆணையத்தின் பரிந்துரை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.