விட்டுக்கொடுத்து செயல்பட்ட நேரு-படேல்!
யார் இந்த வல்லபபாய் படேல் - என்ற கேள்வியை எழுப்பினார் ராஜகோபாலாச்சாரியார். அதற்கு அவரே பதிலும் தந்தார்: ஓயாத உத்வேகம்,


யார் இந்த வல்லபபாய் படேல் - என்ற கேள்வியை எழுப்பினார் ராஜகோபாலாச்சாரியார். அதற்கு அவரே பதிலும் தந்தார்: ஓயாத உத்வேகம், என்றும் சாயாத துணிவு, மாறாத தன்னம்பிக்கை, மலை போன்ற ஆற்றல் - ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக அவதாரம் எடுத்து வந்தவர்தான் இந்த வல்லபபாய். இவரைப் போன்ற இன்னொருவரை நாம் மீண்டும் காணப் போவதில்லை என்றார் அவர்.
புதிய இந்தியாவை வடிவமைத்தவர், அதனை வலுப்படுத்தியவர், விடுதலைப் போராட்ட வீரர்களின் மாபெரும் தளபதியும் அவரே - எனப் புகழாரம் சூட்டினார் பண்டித ஜவாஹர்லால் நேரு.
என் மிகுந்த நம்பிக்கைக்குரிய, அஞ்சா நெஞ்சம் கொண்ட, அன்புக்குரிய சகா அவர் எனப் பாராட்டினார் காந்தி
யடிகள்.
படேல் இல்லை என்றால் காந்திஜியின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும், நேருஜியின் சித்தாந்தங்களை நிறைவேற்றுவதில் வாய்ப்புகள் குறைந்திருக்கும். இருபெரும் தலைவர்களின் எண்ணங்களைச் செயல்படுத்துவதில் துணை நின்ற தலைவர் அவர் - என்று மான்செஸ்டர் கார்டியன் என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகை பாராட்டியது.
ஒரு மனிதன் ஒரு போராளியாகவும், அரசியல் மேதையாகவும் (STATESMAN) பரிணமிக்க முடியாது என்பது பொது விதி. அதற்கு சர்தார் படேல் விதிவிலக்கு என்கிறார் மேலை நாட்டு அரசியல் விமர்சகர் ஒருவர்.
இவ்வாறு தேசத் தலைவர்களாலும், மேல்நாட்டு மேதைகளாலும் வியந்து பாராட்டப்பட்டவர், இரும்பு மனிதர் என்றும், இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் வரலாற்றில் இடம் பெற்றவர் படேல். பிறந்தது குஜராத் மாநிலம், நாடியாத் என்ற சிறிய நகரத்தில். அவரது பிறந்த நாள்: 31.10.1875. காந்திஜியைவிட ஆறு வயது இளையவர், நேருவைவிட 14 வயது மூத்தவர்.
ஆரம்ப காலத்தில் காந்திஜியின் சித்தாந்தத்தில் ஈர்ப்பு இல்லை. அது கவைக்கு உதவாத ஒன்று என விமர்சனமும் செய்தார் படேல். ஒரு முறை கோதுமையில் கல் பொறுக்கினால், சுதந்திரம் வந்து விடும் என்று சொன்னார் காந்தி. அதை நம்புவதற்கு நான் என்ன பைத்தியக்காரனா எனக் கேட்டவர் படேல்.
அடுத்த சில நாள்களில், குஜராத் சபைக்கு காந்திஜி வருகை தந்தார். வேண்டா வெறுப்பாக அந்நிகழ்ச்சிக்குச் சென்ற படேல், காந்திஜியின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டார். அண்ணலின் எளிமை, உள்ளத் தூய்மை, சத்தியம், அகிம்சை ஆகிய அம்சங்களால் கவர்ந்திழுக்கப்பட்டார். அன்றே, இவரே என் குருநாதர் என்று அண்ணலிடம் சரணடைந்தார்.
இரண்டு ஆண்டுகளாக தன் சத்தியாக் கிரகப் போருக்கு சரியான தளபதியைத் தேடிக் கொண்டிருந்த காந்திஜிக்கு படேல் கிடைத்தது ஒரு மனநிறைவைத் தந்தது.
பாபுஜி படேலின் மீது மிகுந்த அன்பு, பாசம் கொண்டிருந்தார்.
எவருக்கும் கட்டுப்படாத படேல், காந்திஜிக்குக் கட்டுப்பட்டார். அவர் சொல்லை கடவுளின் கட்டளையாகவே ஏற்று நடந்தார். ஆகவே தான் 1929, 1946 ஆகிய இரு தருணங்களில், படேலைத் தவிர்த்துவிட்டு, நேருவை காந்திஜி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்தபோது, அண்ணலின் முடிவை, முணுமுணுப்பு ஏதுமின்றி முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்.
நேருவே என் அரசியல் வாரிசு. எனக்குப் பின்னால் நேருவே என் குரலில் பேசுவார் - என்று அண்ணல் அறிவித்தபோது, சாதாரண மனிதராக இருந்தால் பெரும் சஞ்சலப் பட்டிருப்பார். ஆனால், படேல் அதனை அப்படியே ஏற்பது தான் எனக்கும் நல்லது, என் தேசத்திற்கும் நல்லது என ஏற்றுக் கொண்டார்.
சுதந்திர இந்தியாவில், பண்டித நேருவின் தலைமையில் அமைந்த அரசில், துணைப் பிரதமர் பொறுபேற்றார் படேல். உள்துறையையும், சமஸ்தானங்கள் துறையையும் கவனித்து வந்தார்.
சுதந்திர இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்பு ஓரு மாபெரும் வரலாற்றுச் சாதனை. மாறுபட்ட கலாசாரங்களை உள்ளடக்கிய விரிந்த தேசத்தில், சிதறிக் கிடந்த 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தது, ஜெர்மனியை உருவாக்கிய பிஸ்மார்க்-கின் சரித்திரச் சாதனைக்குச் சமமானது எனப் பாராட்டினார் இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் வெல்லெஸ்லி பிரபு.
சமஸ்தானங்கள் இணைப்பு முயற்சியில் நீங்கள் காட்டிய விவேகம், வேகம், உறுதி - என்னை வியக்க வைத்தது. அந்த முயற்சியில் நீங்கள் தோற்றிருந்தால், அதன் விளைவு இந்தியாவுக்கு அழிவைத் தந்திருக்கும் என படேலைப் பாராட்டினார் மௌன்ட் பேட்டன்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தனித்து இயங்கி வந்த அரசுகளை, இவ்வளவு எளிதில் தகர்த்து எறிய முடியும் என்று 6 மாதங்களுக்கு முன்பு நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்த அரிய சாதனையைப் புரிவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்திய துணைப் பிரதமர் படேலுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் - என்று நாடாளுமன்றத்திலேயே நேரு பாராட்டுத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா 8.15 கோடி மக்களையும், சுமார் ஐந்து லட்சம் சதுர மைல் பரப்பளவையும் இழந்தது. ஆனால், சமஸ்தானங்களின் இணைப்பால் 8.65 கோடி மக்களையும், சுமார் ஐந்து லட்சம் சதுர மைல் நிலப்பரப்பையும் இந்தியா பெற்றது. இவ்வாறு இந்திய தேசத்தின் பூகோள அமைப்பையே புரட்டிப் போட்ட புரட்சியாளர் சர்தார் படேல்.
அடுத்தது, அவர் நிகழ்த்திய சாதனை, நிர்வாக இயந்திரத்தை நெறிப்படுத்தி, வலுப்படுத்தியது தான். நிர்வாகத்தின் எஃகுச் சட்டம் (STEEL FRAME) என்று அழைக்கப்பட்டது இந்தியன் சிவில் சர்வீசஸ் (ஐ.சி.எஸ்). அப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளை அழைத்து, அவர்களிடம் நேரிடையாகப் பேசினார் படேல்.
நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் இதுவரை ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்தீர்கள். இனிமேல் இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்திருக்கும் நாங்கள் நிர்வாக அனுபவம் இல்லாதவர்கள். நீங்களோ அறிவாற்றலும், அனுபவமும் நிறைந்தவர்கள். அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறி வழிகாட்ட வேண்டும். சரியான ஆலோசனை தருவதில் தயக்கமோ, அச்சமோ ஏற்படுமானால், அந்த நிமிடமே நீங்கள் உங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்று விடலாம் என்றார்.
அவரது மறைவுக்குப் பின்னால் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு "எங்களுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரமும், எங்கள் பணியில் சுதந்திரமாகச் செயல்படும் உரிமையையும் வழங்கிய பெருமகன் வல்லபபாய் படேல்,' என புகழாரம் சூட்டினார்கள்.
வல்லபபாயின் 75-ஆவது பிறந்த நாள் ஆமதாபாதில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டபோது, மக்கள் புகழ்மாலை சூட்டினார்கள். அதற்குப் பதில் உரைத்த படேல், "நான் ஒரு சாதாரண விவசாயி. காங்கிரஸ் தொண்டன். காந்திஜியின் சீடன். ஜவாஹர்லாலின் தோழன். உங்கள் புகழுரைகள் எனக்கு உரியதல்ல, மக்களுக்கே உரியது,' என்றார்.
அவரது மகள் மணிபென், ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
"நேரு ஒரு சித்தாந்தவாதி, படேல் ஒரு செயல் வீரர். ஒருவர் லட்சியவாதி, அடுத்தவர் யதார்த்தவாதி. ஒருவர் சொல்லாற்றல் மிக்கவர், அடுத்தவர் செயலாற்றல் மிக்கவர். காங்கிரஸ் படேலின் கைக்குள் இருந்தது, மக்களோ நேருவிற்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். உணர்வு பூர்வமான பிரசாரத்தால் மக்களைத் திரட்டினார் நேரு. வேட்பாளர்கள் தேர்வும், தேர்தலுக்கு நிதி திரட்டுவதும் படேல்'.
ரஷியாவை நண்பனாகக் கொள்ளலாம் என்பார் நேரு. மேற்கத்திய நாடுகளை நம்பலாம் என்பார் படேல். இப்படி இரு வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் தான் நேருவும், படேலும்.
அவர்கள் இருவரையும் கைக்குள், தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவர் காந்தி மகான். இருவரையும் இணைந்து செயல்பட வைத்தது மகான் காந்தியின் மகத்தான சாதனை.
இருவருக்கும் இடையே வேறுபாடுகள் இருந்திருக்கலாம் ஆனால், இணைந்தே செயல்பட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக, தோழனாக, பாதுகாவலனாக, அதேசமயம் பிரேக் அல்லது தடுப்புக் காவலாக (CHECK MATE) விளங்கினார்கள்.
இந்தியா குடியரசு ஆனபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியே குடியரசுத் தலைவர் பதவி ஏற்பது சரியாக இருக்கும் என்றார் நேரு. ஆனால், படேலின் எண்ணமும், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும், ராஜேந்திர பிரசாத் அப்பதவிக்கு வருவதையே ஆதரித்தனர். நல்ல ஜனநாயகவாதியான நேரு, படேலின் கருத்துக்கு மதிப்பளித்து விட்டுக் கொடுத்தார்.
இவ்வாறு பல காலக் கட்டங்களில் நேருவும், படேலும், தேச நலன் கருதி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தே செயல்பட்டிருக்கிறார்கள்.
இறுதிக் காலத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு, வயிற்றில் புற்று நோய்க்கும் உள்ளான படேல், தான் இனி நீண்ட நாள் வாழ முடியாது. தனது இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என உணர்ந்தார். அப்பொழுது, என் மறைவுக்குப் பின்னால் ஜவாஹர்லாலின் தோள் மீது பெருஞ்சுமை இருக்கிறது. அவருக்கு இறைவன் துணை நிற்க வேண்டும் என்றார்.
அதற்குப் பின்னால் அவர் எதுவும் பேசவில்லையாம். காந்திஜி சுடப்படுவதற்கு முன்னால் அவர் கடைசியாகச் சந்தித்தது சர்தார் படேலைத்தான். அப்பொழுது அவர் பிறப்பித்த ஆணை நீங்கள் இருவரும் (படேல், நேரு) இணைந்தே செயல்பட வேண்டும் என்பதே.
காந்தியின் மரணம் அவர்கள் இருவரையும் மேலும் இறுக்கமாக இணைத்தது.
படேல் அதன்பின், நேருஜிக்கு எழுதிய கடிதத்தில் என் வாழ்நாள் இறுதிவரை உங்களுக்கு உதவியாக, உறுதுணையாக, விசுவாசமாகவே இருப்பேன் - என்று உறுதிமொழி தந்தார். ஆனால், அந்த உறுதிமொழியை மூன்றாண்டுகளுக்கு மேல் படேல் நிறைவேற்ற முடியாமல் காலன் அவரை அழைத்துக்கொண்டான்.
ஓயாத உழைப்பிலும், ஒற்றுமையிலும்தான் வளர்ச்சியும், வெற்றியும் அடங்கியிருக்கிறது. வீண் கோஷங்களை மூட்டை கட்டி எறியுங்கள். உருப்படியான வேலைகளைப் பாருங்கள். அதுவே உயர்வுக்கு வழி - என்றார் வல்லபபாய் அவர்காட்டிய வழி நடப்போம்!
இன்று சர்தார் வல்லபபாய் படேலின் 140}ஆவது பிறந்தநாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...