/

உருவாகுமா உண்மையான கூட்டாட்சி?

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியா சிதறிப் போய்விடும் - என்று அரசியல் ஆரூடம் கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

முனைவா் அ. பிச்சை

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியா சிதறிப் போய்விடும் - என்று அரசியல் ஆரூடம் கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில். இந்தியா சிதறுண்டு போகாமல் தப்பித்தாலும், அது விரைவில் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துவிடும் - என்று இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் முழங்கினார் முல்லர் என்ற ஆங்கிலேயப் பெருமகன்.
 இத்தகைய அவநம்பிக்கைகளுக்கும், அரசியல் விமர்சனங்களுக்கும் மத்தியில்தான் இந்தியா விடுதலை பெற்றது. அதன்பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
 அக்காலகட்டத்தில், நியூயார்க் டைம்ஸ் என்ற புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனர் குடும்பத்தைச் சேர்ந்த சுல்ஸ் பெர்ஜர் என்பவர் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்தார். அப்பொழுது நேருஜியிடம் சிறிது அகந்தையோடு ஒரு கேள்வி கேட்டார்.
 பல்வேறு வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் கொண்ட இந்தியா ஒரே நாடாக நிலைத்திருக்கும் என நம்புகிறீர்களா?
 ஆம். உறுதியாக நம்புகிறேன். அதற்கு அடிப்படைக் காரணம் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், உறுதியான தேசிய உணர்வு தான். தேசம் பிரிந்து கிடந்ததும் உண்மை தான். ஆனால், அந்த அரசியல் சண்டைகளுக்கு, மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
 அவர்கள் பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக, ஏன் பூகோள ரீதியாகத் தங்களை இந்தியர்கள் என்றே உணர்ந்தார்கள். ஆங்கிலேய ஆட்சி செய்த ஒரு நல்ல செயல், இந்தியாவை அரசியல் ரீதியாக ஒன்றாக்கியது தான் - என்றார் பண்டித நேரு.
 தேசத்திற்கு வெளியே எழுப்பப்பட்ட ஐயப்பாடுகள், தேசத்திற்கு உள்ளே நிலவிய தேசிய உணர்வு, தேசத்தின் வரலாற்றுப் பின்னணி - ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் நம் தேசத் தலைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள்.
 நமது அரசியலமைப்புச் சட்டத்தை முன்மாதிரியான, முதன்மையான, சிறப்பான கூட்டாட்சி அமைப்பு முறை எனச் சொல்ல இயலாது. அது கொள்கை அளவில் கூட்டாட்சித் தன்மை கொண்டது. ஆனால், செயல் அளவில் மத்திய ஆட்சியையே மையமாகக் கொண்டது.
 அதன் சாரமும், சரத்துக்களும், சட்டப் பிரிவுகளும் மத்திய அரசு சார்புடையது மட்டுமல்ல, மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைத்து, மைய அரசை வலுவுள்ளதாக வரையறை செய்தது. இவ்வாறு மத்திய அரசை வலுவுள்ளதாக உருவாக்கியதற்கு ஐந்து காரணங்களை அரசியல் சட்ட மேதைகள் முன் வைக்கிறார்கள்.
 புதிய இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொள்வதற்குள், வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழுமானால், அதனைத் தடுத்து நிறுத்தி, தற்காத்துக் கொள்வதற்கு பலமான மத்திய அரசே தேவை எனக் கருதப்பட்டது.
 இரண்டாவதாக, இந்தியாவோடு இணைக்கப்பட்ட 565 சமஸ்தான மன்னர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் இழந்த அதிகாரத்தை மீட்க, போர்க்குரல் எழுப்பலாம். அதனை அடக்குவதற்கு வலிமையான மைய ஆட்சியால்தான் முடியும்.
 மூன்றாவதாக, தேசப் பிரிவினையைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்களை அடக்குவதற்கும், பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்த அகதிகளைக் காப்பதற்கும், முறையான மறு குடியிருப்பு செய்வதற்கும், அதிகாரங்கள் அதிகம் படைத்த மத்திய அரசே சமாளிக்க முடியும்.
 நான்காவதாக, சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவும் பரந்த இந்திய தேசத்தில், அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், மண் வளம், மனித வளம், நீர் வளம், பொருளாதார வளத்தைத் திரட்டி ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கும், வலிமையான மத்திய அரசே வழியாகத் தெரிந்தது.
 ஐந்தாவதாக, அன்றைய அரசியல் களத்தில், காங்கிரஸுக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும்தான் முன் நின்றன. அவைகள் பிராந்தியப் பார்வையைவிட தேசியப் பார்வை கொண்டிருந்ததால், வலிமையான மத்திய அரசை வரவேற்றன.
 இத்தகைய காரணங்களால் தான், மத்திய ஆதிக்கம் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி அமைப்பை நம் தேசத் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டம் மூலம் உருவாக்கினார்கள்.
 தேச வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் தீட்டுவதையும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமும் கொண்ட மத்திய திட்டக் குழுவும் மத்திய அரசின் கையில் சென்றது.
 இதையும் தாண்டி, மாநில அரசுகள் தடம் புரண்டால், சட்டம் - ஒழுங்கு காக்கப்பட முடியாத சூழல் உருவானால், அரசியல் சட்ட அமைப்புக்கு எதிராகச் செயல்பட்டால், அரசைக் கலைக்கும் அவசரகாலச் சட்டப் பிரயோக அதிகாரமும் மத்திய அரசுக்குதான்.
 நேரு - படேலின் கூட்டுத் தலைமையும், அதன்பின் மக்கள் செல்வாக்குப் பெற்ற நேருவின் தலைமையும் தொடர்ந்த வரை, இந்திய தேசிய உணர்வு தேயவில்லை. அதற்குப் பின்பு மொழி உணர்வை முன் நிறுத்தி, தேசிய உணர்வு பின்னுக்குத் தள்ளப்பட்டது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் வலுப்பெறத் தொடங்கியது.
 பீறிட்டு எழுந்த மொழி உணர்வின் காரணமாகத்தான் ஒன்றுபட்ட பம்பாய் மாநிலத்திலிருந்து. குஜராத்தி பேசும் மக்களை உள்ளடக்கிய குஜராத் மாநிலமும், மராத்தி பேசும் மக்களை உள்ளடக்கிய மகாராஷ்டிர மாநிலமும் 1960-இல் உருவானது. 1966-இல் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஹிந்தி பேசும் மக்களைக் கொண்ட ஹரியாணா மாநிலம் பிறந்தது.
 பிராந்திய உணர்வுகள் தலை தூக்கியதால் தான் உத்தராகண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாகின. இத்தகைய பிரிவினைக் கதை மேலும் தொடரும்: முடிவதற்கான வாய்ப்புகள் இல்லை.
 தமிழ்நாட்டில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றும் வடவர் ஆதிக்கத்தை ஏற்கமாட்டோம் என்ற குரலும், கோஷமும் 1960-களில் ஓங்கி ஒலித்தது.
 ஆனாலும் தேசத்திற்கு அச்சுறுத்தலும், அபாயமும் ஏற்படும் போதெல்லாம், நேருஜி சொன்ன தேசிய உணர்வு நெருப்பாகவும், தீயாகவும் தேசமெங்கும் பரவி நின்றது. பிராந்திய உணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
 குறிப்பாக, 1962-இல் சீனப்படை எடுப்பு, 1965-இல் பாகிஸ்தான் உடன் போர், 1971-இல் வங்க தேச விடுதலைப் போர் ஆகிய தருணங்களில் தேசிய உணர்வு காட்டுத் தீ போல் பரவியதைக் கண்டோம்.
 அதேபோல், வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, பொக்ரானில் அணு ஆயுத சோதனை, பசுமைப் புரட்சி ஆகிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் போதும் தேசிய உணர்வு அருவிபோல் பெருகி ஓடியதை நாம் அனைவரும் பார்த்தோம்.
 மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்த காலம் வரை, மாநில அரசுகள் மத்திய அரசோடு இணக்கமாகச் செயல்பட்டன. பிரச்னைகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்பட்டன. 1967-க்குப் பின்பு மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி என்பது அருகிக் கருகிவிட்டது. அதன் உச்சகட்டமாக, 1996-இல் பிராந்தியக் கட்சிகள் கைகோர்த்து தேவேகவுடா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றின. தேசியக் கட்சிகளோ ஆட்சிக்கு துணைநிற்கும் இரண்டாம் கட்டத்திற்குத் தள்ளப்பட்டன.
 இன்று மத்தியில் பா.ஜ.க. ஆளும் கட்சி. ஆனால் பா.ஜ.கட்சி தனித்து எட்டு மாநிலங்களிலும், கூட்டணி அமைத்து ஐந்து மாநிலங்களிலும் ஆக மொத்தம் 13 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. பிற 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பா.ஜ.க. தவிர்த்த மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளன.
 இதிலிருந்து நாம் அறிவது: பெரும்பான்மையான மாநிலங்கள், மாற்றுக் கட்சியினர் வசம் உள்ளன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பிகார், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
 இன்றும்கூட தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் புறந்தள்ளிவிட்டு எந்த அரசியல் இயக்கமும் தமிழகத்தில் வேர் பிடிக்க முடியாது.
 இத்தகைய பிராந்திய உணர்வுகள் காரணமாக, இனி வருங்காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலக் கட்சியே ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்புகள் வளரலாம். ஆனாலும் தேசிய உணர்வு இந்தியர் ஒவ்வொருவர் உள்ளத்தில் இருக்கும் வரை, மத்தியில் ஒரு தேசியக் கட்சியே ஆட்சியில் அமரும் வாய்ப்புக்களே அதிகம். ஏனெனில், மாநிலத்தின் வளர்ச்சியையும், தேசத்தின் வலிமையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் நம் மக்கள்.
 இத்தகைய சூழல் உருவானால், வலிமைமிக்க மாநிலத் தலைவர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசையே கட்டுப்படுத்தும் காலம் வரலாம்.
 வருங்காலத்தில் எழும் இத்தகைய விளைவுகளை இப்பொழுதே எதிர் கொள்ளத் தயாராக வேண்டும். அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இன்று பெயர் அளவில் உள்ள கூட்டாட்சியை, செயல் அளவில் மாற்ற வழி காண வேண்டும்.
 ஏற்கெனவே ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கைகூட, அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே உள்ள கூட்டாட்சி தொடர்பான முக்கிய குறியீடுகளை மாற்றவில்லை. வண்ணத்தை மட்டுமே மாற்றியுள்ளார் வடிவத்தை மாற்றவில்லை. ஆகவே, அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கலாமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.
 பெயர் அளவில் அல்லாமல், செயல் அளவில் உண்மையான கூட்டாட்சி உருவாவதற்கு என்ன வழி என்பது விவாதப் பொருளாக்கப்பட வேண்டும்.
 இன்றும்கூட தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் புறந்தள்ளிவிட்டு எந்த அரசியல் இயக்கமும் தமிழகத்தில் வேர் பிடிக்க முடியாது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.