டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மியான்மரின் ஜனநாயகப் பயணம்

"எங்கள் இதயம் ஒரே மாதிரி துடிக்கிறது; நாங்கள் ஒன்றாக இணைந்து போராடினோம்; இப்போது நம்பிக்கையையும் இணைந்தே பெற்றுள்ளோம்,'

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

எஸ். ராஜாராம்

"எங்கள் இதயம் ஒரே மாதிரி துடிக்கிறது; நாங்கள் ஒன்றாக இணைந்து போராடினோம்; இப்போது நம்பிக்கையையும் இணைந்தே பெற்றுள்ளோம்,' மியான்மர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி பெற்ற அபார வெற்றிக்குப் பின்னர், அக்கட்சியின் தலைவரும் ஜனநாயகப் போராளியுமான ஆங் சான் சூ கி சொன்ன வார்த்தைகள் இவை.
 ஆம், இந்த வெற்றியின் மூலம் மியான்மரில் சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு முழுமையான மக்களாட்சி மலரும் தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஆங் சான் சூ கி தலைமையிலான, ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி 80 சதவீத இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருப்பதன் மூலம் ராணுவ ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது.
 மியான்மரின் அரசியல் சாசனத்தில் ராணுவ ஆட்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட திருத்தத்தின்படி, வெளிநாட்டவரை மணந்தவர் அதிபராக வர முடியாது. ஆங் சான் சூ கியின் கணவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பதால், ஆங் சானை குறிவைத்தே அந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
 ஆனால், "அதிபருக்கும் மேலே' இருந்து ஆட்சியை நடத்தப் போவதாக அவர் ஏற்கெனவே கூறியிருப்பதன் மூலம், இந்த முறை ஆட்சி அதிகாரத்தை அத்தனை எளிதில் விட்டுவிட மாட்டார் என எதிர்பார்க்கலாம்.
 மியான்மரின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறைப்படி, மேலவை, கீழவை மற்றும் ராணுவ நியமன உறுப்பினர்கள் பிரிவு சார்பில் தலா ஒருவர் என மூவர் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவர். பின்னர், இரு அவை உறுப்பினர்கள், ராணுவ நியமன உறுப்பினர்கள் வாக்களித்து மூவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பர். இதில் வெற்றி பெறுபவர் அதிபராகவும், தோல்வியடையும் மற்ற இருவர் துணை அதிபர்களாகவும் பதவி வகிப்பர்.
 ஆங் சான் சூ கி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இருப்பதால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
 எந்த ஒரு சட்டத்தையும், சட்டத் திருத்தத்தையும் யாரையும் எதிர்பார்க்காமல் ஆளுங்கட்சியால் நிறைவேற்ற முடியும் என்றாலும், ராணுவத்தின் மீது ஆளுங்கட்சியினருக்கு மட்டுமன்றி, மக்களுக்கும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சந்தேகத்துக்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில், மியான்மரின் கடந்தகால சரித்திரம் அப்படி.
 ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்ற பிறகு, சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட யூ நு-தான் மியான்மரின் கடைசி பிரதமர். அவர் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில், அப்போதைய ராணுவ தளபதி நி வின் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அன்றுமுதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருந்து வருகிறது.
 சர்வதேச நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து, 1990-இல் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், ஆங் சான் சூ கியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும், அந்தத் தேர்தல் முடிவை ராணுவ ஆட்சியாளர்கள் அங்கீகரிக்க மறுத்தனர். அதன்பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சுதந்திரமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில், ஆங் சான் சூ கியின் 25 ஆண்டு கடுமையான போராட்டம் அடங்கியிருக்கிறது.
 நவீன பர்மாவின் தந்தையாக கருதப்படும் ஆங் சானின் மகளான ஆங் சான் சூ கி, பிரிட்டனில் படித்துவிட்டு அந்நாட்டைச் சேர்ந்தவரை மணந்து அங்கேயே வசித்து வந்தார். நோய்வாய்ப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக, 1998-இல் மியான்மர் திரும்பினார்.
 அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக எழுந்த ஜனநாயகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அதன் எதிரொலியாக, 1989 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை அதாவது சுமார் 15 ஆண்டுகள் ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 இருப்பினும், தளர்ந்துவிடாமல் அவர் நடத்திய போராட்டமும், 2011-இல் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலையான பின்னர், சர்வதேச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்த்ததுமே, மியான்மரின் ஜனநாயகப் பாதையை இன்று திறந்துவிட்டுள்ளது.
 பொதுத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, நாட்டின் அதிகார மாற்றம் தொடர்பான, தேசிய நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கு ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹிலெய்ங், இப்போதைய அதிபர் தெய்ன் செய்ன் ஆகியோர் சம்மதித்து இருப்பதும், அதிகார மாற்றம் சுமுகமான முறையில் நடைபெறும் என அவர்கள் உறுதியளித்திருப்பதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
 ராணுவத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் மியான்மரின் பிரதானமான நோக்கமாக இருந்தாலும், பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையிலான சண்டை, சிறுபான்மை இனமான ரோஹிங்கியா முஸ்லிம்களின் குடியுரிமை எனப் பல்வேறு முக்கியப் பிரச்னைகளும் உள்ளன.
 ""மியான்மர் ஜனநாயகப் பாதையில் பயணிப்பதற்கும், வருங்காலத்தில் சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்துவதற்கும் இன்னும் கடுமையான பணிகள் காத்திருக்கின்றன'' என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் குறிப்பிட்டதும் இதைத்தான்.
 தன்னை தாயாகப் பார்க்கும் மியான்மர் பெரும்பான்மை மக்களுக்கு, இதைப் புரியவைப்பதில்தான் ஆங் சான் சூ கியின் முழுமையான வெற்றி அடங்கியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.