/

காற்றை மாசாக்கும் கட்டடக் கழிவுகள்

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கைகள் மக்களால் முன் வைக்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:35 am

என்.எஸ். சுகுமார்

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கைகள் மக்களால் முன் வைக்கப்படுகின்றன. அரசுகளும், வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை ஆய்வு செய்கின்றன. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 வளர்ச்சிப் பணிகளின் தொடக்கம் கட்டுமானப் பணிகளாகும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், வீடுகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவை கட்டுமானப் பணிகளில் அடங்கும்.
 இவை அனைத்துமே வளர்ச்சிப் பணிகள் என்றபோதிலும், கட்டுமானப் பணிகளால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.
 கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களான செங்கல், ஜல்லி, கிரானைட் கற்கள், மணல், சிமெண்ட் உள்ளிட்டவற்றுக்காக இயற்கை வளங்கள் ஏராளமாக சுரண்டப்படுகின்றன. கிரானைட் கற்கள், கருங்கல், ஜல்லிகளின் தேவைக்காக ஏராளமான மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டன.
 மணல் தேவைக்கு ஆற்றுப் படுகைகளிலிருந்து பல அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படுகிறது.
 கட்டுமானப் பணிக்கு இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது. கட்டுமானப் பணிகள் மட்டுமன்றி, கட்டடக் கழிவுகளாலும் சூழல் சீர்கேடு அதிகரிக்கிறது.
 இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்திர குமார் தலைமையிலான அமர்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: வளர்ச்சித் திட்டங்களில் கட்டுமானப் பணி முதன்மையானது. எனினும், இதன் மூலம் காற்றில் மாசு அதிகரித்து வருகிறது. தேசியத் தலைநகர் வலயப் பகுதிகள் மற்றும் தில்லி மாநகரில் மட்டும் நாள்தோறும் சுமார் 4,000 டன் கட்டடக் கழிவுகள் சேர்கின்றன.
 ஆனால், சேகரிக்கப்படும் கழிவுகளில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால், தேங்கியுள்ள மற்ற கட்டடக் கழிவுகளால் பொது மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
 தற்போது தில்லியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முறையான அனுமதி பெற்றுத்தான் நடைபெற்று வருகிறதா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
 அனுமதியின்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனம் மீது தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
 அவசரத் தேவையாகக் கருதி அரசு, தனியார் இணைந்து நடத்தி வரும் தில்லி புராரி கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 பழைய, பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்படும்போதும், செப்பனிடப்படும்போதும் அதிக அளவு மாசு ஏற்படுகிறது.
 கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் காற்று மாசின் பாதிப்பு குறையும். கட்டடக் கழிவுகளிலிருந்து உதிரிக் கற்கள், ஜல்லிகள், கம்பிகள் கிடைக்கின்றன.
 இவற்றைப் பிரித்தெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே மறுசுழற்சியாகும். கட்டடக் கழிவுகளை உடைத்தல், அழுத்துதல், சரியான வடிவம் கொடுத்தல், கழிவுகளை நீக்குதல் என பல வழிகளில் மறுசுழற்சிக்கு உள்படுத்தி பயன்படுத்தப்படுகிறது.
 முன்பெல்லாம் சாலைகள் அமைக்கும்போது லேயர் லேயராக தார் சாலை போடப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
 தற்போது நடைபெறும் சாலைப் பணிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை அகழ்ந்தெடுத்து சரிசெய்த பின்னர், மீண்டும் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதனால் ஜல்லிக் கற்களின் தேவை குறைவதுடன், சாலையின் உயரம் அதிகரிப்பதும் தவிர்க்கப்படும்.
 பழைய கட்டடங்கள் இடிக்கப்படும்போது சுற்றிலும் தடுப்புத் திரைகள் அமைத்தால் பெருமளவு காற்று மாசு குறையும். ஆனால், சில இடங்களில் மட்டுமே கட்டட இடிப்புப் பணிகளில் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
 கட்டடக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மையங்கள் மூலம் செயற்கையாக மணல் உற்பத்தி செய்ய முயற்சி செய்யலாம். இதனால், மணல் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம். செயற்கை மணல் உற்பத்தியை அதிகரித்தால் மணல் கடத்தலை கணிசமான அளவு தவிர்க்க வாய்ப்புண்டு.
 கட்டுமானப் பணிகளில் பள்ளமான இடங்களை மேடேற்றுவது, சாலையோர நடைமேடைகள் அமைப்பது, சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைப்பது போன்றவற்றுக்குக் கட்டடக் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.
 நாட்டில் ரயில் நிலையங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால், பல இடங்களில் ரயில் நிலைய நடைமேடைகள் இல்லை. பல ரயில் நிலைய நடைமேடைகள் தாழ்வாக உள்ளன.
 இதுபோன்ற ரயில் நிலையங்களில் நடைமேடைகள் அமைக்கவும், நடைமேடையின் உயரத்தை அதிகரிக்கவும் கட்டடக் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.
 கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் கட்டுமானப் பணிகளுக்கான செலவு கணிசமாகக் குறையும். மேலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும் பெருமளவு தவிர்க்கப்படும்.
 குப்பைகளிலும், திறந்தவெளிகளிலும் கொட்டப்பட்டு காற்று மாசு உள்ளிட்ட சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் கட்டடக் கழிவுகள் தேங்குவதும் குறையும்.
 கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய அதற்கான மறுசுழற்சி மையங்களை அதிக அளவில் அமைக்க அரசு, தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.