மண்ணை வணங்கும் மக்கள்
இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்னும் ஐந்து ஆற்றல்மிகு சக்திகளால் உருவாக்கப்பட்டது


கிராமப்புற விவசாயிகளுக்கு நிலம் என்பது
உடைமையல்ல, உயிரோடு கலந்த உறவு.
ஆண்டாண்டு காலமாக அவர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் இணைந்து வளர்ந்த அடையாளம். அந்த அடையாளத்தை இழந்துவிட
அவர்கள் மனம் ஒருபோதும் இடம் தருவதில்லை.
இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்னும் ஐந்து ஆற்றல்மிகு சக்திகளால் உருவாக்கப்பட்டது. இதில் முதலில் வைத்து எண்ணப்படுவது நிலம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதும், அவற்றைத் தாங்கியிருப்பதும் நிலமே.
÷இந்த ஐந்தும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவை பொதுவாக இருக்கும்போது நிலத்தை மட்டும் தனியுடைமையாக்கி உரிமை கொண்டாடுகின்றனர். இதற்கு அரசும் துணை போகிறது.
÷உலகம் தொடங்கிய காலத்திலிருந்தே மண்ணுக்கும், பெண்ணுக்குமான போர்களே அதிகம். "உழுபவனுக்கே நிலம்' என்ற முழக்கம் எழுந்தபோது ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். புதிய புதிய சட்டங்களும் போடப்பட்டன; புதிய புதிய போராட்ட வடிவங்களும் பிறந்தன. இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான போராட்டத்துக்கு முடிவு ஏது?
÷"பொதுவான நன்மைக்காகப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் அன்றி பலாத்காரத்தோடு கூடிய ரத்தம் சிந்தும் புரட்சி ஒரு நாளைக்கு ஏற்பட்டே தீருவது நிச்சயம்...' என்று காந்தியடிகள் கூறுவதற்கான காரணம் இதுதான். இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து களைவதற்கான முயற்சிகளும் தொடர்ந்தன.
÷உழுகிறவனுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற சமரச நோக்கில்தான் வினோபா பாவேயின் "பூமிதான இயக்கம்' தோன்றியது. இமயம் முதல் குமரி வரை நடையாக நடந்து, நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று நிலம் இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த காந்தியப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், கொள்கையளவில் அதன் சாதனை பெரியதுதான்.
÷இந்நாட்டு கிராமப்புற மக்கள் "மண்ணின் மைந்தர்கள்' என்று அழைக்கப்படுவதிலிருந்தே நிலத்துக்கும், அவர்களுக்குமான உறவு வெளிச்சமாகும்.
இந்த நிலையில்தான், விவசாயிகள் என்னும் "பூமி புத்திரர்கள்' போராடுகின்றனர். இந்தப் போராட்டம் ஆங்கில ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்கிறது; காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தியபோதும் போராடினர். இப்போதும் போராடுகின்றனர்.
÷முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசரச் சட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிறப்பித்தது. அதில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
÷இதனிடையே, மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபின், மக்களவையில் புதிய மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
÷விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது மகாராஷ்டிரத்தின் விதர்பாவில் தொடங்கி நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் தேசிய அவமானம் என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகத்துக்கே உணவு தரும் விவசாயி வாழ முடியாமல் மடிவதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டாமா?
÷மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இரண்டாவது முறையாக அவசரச் சட்டத்தின் மூலம் பிறப்பித்து உள்ளது. இச்சட்டம் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்று எதிர்க்கட்சியினரும், விவசாயிகளுக்குச் சாதகமானது என்று ஆளும் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நிற்கின்றனர்.
÷சமூக ஆர்வலர் ஹசாரே அண்மையில் தொடங்கி வைத்த விவசாயிகளின் பேரணி தலைநகர் புது தில்லியையே குலுங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து நாடெங்கும் விவசாயிகள் விழித்தெழுந்தனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியினரும் விவசாயிகளைத் திரட்டி மத்திய அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
÷நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஏப்ரல் 22-இல் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகமும் நிகழ்ந்தது.
÷இதுபற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "விவசாயிகளின் உயிரைக் காப்பதைவிட முக்கியமானது எதுவும் இல்லை. அவர்களுடைய பிரச்னைகள் காலங்காலமாக வேரூன்றி உள்ளன. விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண தகுந்த ஆலோசனைகளை யார் வழங்கினாலும் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
÷ நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை இரண்டாவது முறையாகக் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கொண்டு வந்துள்ள பிரதமர், ஆலோசனைகளை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
÷இந்தச் சட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவோம் என்று முடிவு செய்து முழங்கும் இவர் எப்படி திறந்த மனதோடு விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கப் போகிறார்?
÷ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட "நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894' என்பது அன்னிய அரசு, நிலவுடைமையாளர்களான விவசாயிகளின் நிலங்களைத் தன்னிச்சையாக எடுத்துக் கொள்வதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். இதையே சுதந்திர இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த நினைப்பது என்ன நியாயம்?
÷இதுபற்றி தொடர்புடைய பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்களிடையே கடந்த 30 ஆண்டுகளாக விவாதங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் "நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மாற்றிடம் - 2013' என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
÷அப்போது இதனைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த பா.ஜ.க.வும்,அ.தி.மு.க.வும் இப்போது அதனைவிடக் கடுமையான திருத்தச் சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பதுதான் வேடிக்கை.
÷2013-ஆம் ஆண்டுச் சட்டம், பலபோகச் சாகுபடி நிலங்களை தொழிற்சாலைகள் கையகப்படுத்துவதைத் தடை செய்கிறது. அதன்மூலம், நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஆனால், இந்தத் திருத்தச் சட்டம் உணவுப் பாதுகாப்பை விடப் பெரிய தொழிலதிபர்களின் நலனையே பெரிதாக மதிக்கிறது; பலபோகச் சாகுபடி நிலங்களையும் தொழிலதிபர்கள் கையகப்படுத்திட அனுமதி வழங்குகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
÷இதனால், இப்போதைய சட்டம் விவசாயிகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. "எந்த நேரத்தில் தம் நிலம் பிடுங்கப்படப் போகிறதோ?' என்ற அச்சத்திலேயே வாழும்படி ஆக்கிவிட்டது.
÷2013-ஆம் ஆண்டுச் சட்டம், தனியாருக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் நில உரிமையாளர்களில் 80 விழுக்காடு பேர் தங்களது நிலத்தை விற்பனை செய்வதற்குச் சம்மதம் தெரிவித்து எழுதிக் கொடுத்தால்தான் மீதி 20 விழுக்காட்டை நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும்.
÷அதுவே பொது - தனியார் கூட்டுத் திட்டம் என்றால் 70 விழுக்காடு நில உடைமையாளர்கள் தங்கள் நிலங்களை விற்கத் தயாராக இருந்தால் மட்டுமே மீதமுள்ள 30 விழுக்காடு நிலத்தைக் கையகப்படுத்த முடியும். இந்த உறுதிமொழிகள் இந்தத் திருத்தச் சட்டத்தால் பறிக்கப்படுகின்றன.
÷அதாவது, ஐந்து வகையான திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று இச்சட்டத்தின் பிரிவு 10(ஏ) இல் சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைத் திட்டங்கள், தொழில் துறைக்குத் தேவைப்படும் நிலங்கள், வீடமைப்புத் திட்டங்களுக்கான நிலம், கிராமப்புற அடித்தளக் கட்டமைப்பு, சமூக அடித்தளக் கட்டமைப்புக்காகத் தேவைப்படும் நிலங்கள் ஆகியவை.
÷நிலங்களைக் கையகப்படுத்தி வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் மீண்டும் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று முந்தைய 2013 சட்டம் தெரிவித்தது. ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தின்படி திரும்ப ஒப்படைக்க வேண்டியது இல்லை.
÷கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்தச் சட்டம் அச்சத்தை உருவாக்குமா? ஆறுதலைக் கொடுக்குமா? எண்ணிப் பார்க்க வேண்டிய இறுதி நேரம் இது.
÷கிராமப்புற விவசாயிகளுக்கு நிலம் என்பது உடைமையல்ல, உயிரோடு கலந்த உறவு. ஆண்டாண்டு காலமாக அவர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் இணைந்து வளர்ந்த அடையாளம். அந்த அடையாளத்தை இழந்துவிட அவர்கள் மனம் ஒருபோதும் இடம் தருவதில்லை. ஏனென்றால், மண்ணை வணங்கும் மக்கள் இவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...