மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மோடியின் மாயமான் வேட்டை

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு இந்திய - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது என்பதை கீழ்க்கண்ட அம்சங்கள் உறுதி செய்கின்றன.

Updated On :22 மார்ச் 2015, 7:56 pm

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு இந்திய - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது என்பதை கீழ்க்கண்ட அம்சங்கள் உறுதி செய்கின்றன.

சர்வதேச செலாவணிச் சந்தையில் இலங்கையின் ரூபாய் சந்தித்துள்ள பெரும் சரிவைச் சரிப்படுத்த இந்தியா 9,000 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கும்.

இந்தியச் சந்தையில் இலங்கை தயாரிப்புப் பொருள்கள் எளிதில் நுழைவதற்கும் விற்பனை செய்யப்படவும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். இந்தியாவிற்கு இலங்கைதான் நெருக்கமான பொருளாதாரக் கூட்டாளியாகும்.

இரு நாடுகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் இந்துமாக்கடல் இன்றியமையாதது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி ஒருவரின் நலனை மற்றவர் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

இலங்கையுடன் பாதுகாப்புக் கூட்டுறவையும், கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்தியா பெரிதும் விரும்பி மதிக்கிறது.

இலங்கையின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கு மிக முக்கியமானது.

இலங்கையின் முன்னேற்றத்தில் அதிக விருப்பம் கொண்டது இந்தியா. இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு எதுவென்றால் அது இலங்கைதான்.

இலங்கை அரசு தீவிரவாதத்தைத் தோற்கடித்து நீண்ட கால மோதலை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது. சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி அவர்களுடைய இதயங்களை வெல்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போரினால் புண்பட்டு அழியாத இரணமாக மாறியுள்ள தமிழர்களின் உள்ளங்களுக்கு மருந்தாக 13-ஆவது சட்டத் திருத்தத்தை மோடி பரிந்துரை செய்துள்ளார். 26 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய - இலங்கை உடன்பாட்டிற்கிணங்க, இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட 13-ஆவது சட்டத் திருத்தம் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், மாறாக பின்னோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் பிரதமர் மோடி அறிந்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

அப்போதைய இராஜீவ் அரசால் வட கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்த்தப்பட்ட வரதராஜ பெருமாள் சிறிய அதிகாரங்களைக்கூட பெறமுடியாமல் வெறுப்பின் உச்சக்கட்டத்தில் தமிழீழத் தனிப்பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்தார் என்பது வரலாறு.

இலங்கை அரசியல் சட்டத்திற்கான 13-ஆம் சட்டத் திருத்தமும் மாகாண சபையின் சட்டமும் ஒரே நாளில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 13-ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப்போக வைப்பதற்காகவே மாகாண சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஜெயவர்த்தனா, தங்களுக்கென மாகாணங்கள் கேட்காத சிங்களர்களுக்கு எட்டு மாகாணங்களையும் தமிழர்களுக்கு ஒரு மாகாணமும் கொடுத்ததோடு நிற்காமல், பெரும்பாலான மாகாண சபைகள் ஒப்புக்கொண்டவற்றை அனைத்து மாகாண சபையினரும் ஏற்கவேண்டும் என அச்சட்டத்தில் சேர்த்தார்.

வட - கிழக்கு மாகாணங்கள் சபை தாற்காலிகமாகவே இணைந்து செயற்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்பு குறித்து நாடாளுமன்றம் ஏதேனும் ஒரு சட்டத்தின் மூலம் தீர்மானிக்கலாம் என்று மட்டுமே கூறப்பட்டது. அதன்படி செய்யப்படவில்லை.

இதன் விளைவாக இராசபட்ச ஆட்சியில் அவருடைய மறைமுகத் தூண்டுதலின் பேரில் சிங்கள இனவெறிக் கட்சியொன்று வடக்கு - கிழக்கு இணைப்புச் செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றது.

மாகாண சபைகளுக்குச் சுதந்திரமாகச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருக்கவில்லை. சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.

மாகாண சபை நிறைவேற்றிய சட்டங்களை நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாகாண சபையின் அனுமதி இல்லாமலேயே திருத்தி அமைக்கலாம்.

தற்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைச்சரவைகளின் ஆலோசனைகளை ஆளுநர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அதிகாரிகளும் ஆளுநரின் கட்டளைப்படியே செயல்படுகின்றனர். இது குறித்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இலங்கையில் நிலம் ஒரு முக்கியப் பிரச்னையாகும். இந்திய - இலங்கை உடன்பாட்டின் கீழ் வட - கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், தமிழர் பகுதியில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் நிலங்களை இராணுவம் பறிக்கிறது. எனவே, தமிழர்கள் தங்கள் பகுதி நிலத்தின் மீது உள்ள அதிகாரம் தங்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

ஆனால், இலங்கை ஒரே நாடு ஆகையால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என சிங்கள அரசு அந்த அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது.

காவல் துறை, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றின் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது. மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என சிங்கள அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதைப்போலவே, கல்வித் துறையும் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே கொண்டுவரப்பட்டுள்ளது.

நீதித் துறை அதிகாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழேயே மாகாண நீதித் துறை கொண்டுவரப்பட்டுள்ளது. மாகாண அமைச்சரவைக்கும் நீதி நிர்வாகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களத்துடன் தமிழுக்கும் சம மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

மாகாண ஆட்சியை குடியரசுத் தலைவர் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம். பெரும் விளம்பரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்பாடு மேற்கண்டவாறு சிதைக்கப்பட்டும், சிறுமைப்பட்டும் போனபோது அதை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வரவில்லை. இந்த உடன்பாட்டுக்கு உத்தரவாதம் அளித்த இந்திய அரசு இதைத் தட்டிக்கேட்க முற்படவில்லை.

13-ஆவது சட்டத் திருத்தம் ஒரு மாயமான் வேட்டை போலாகிவிட்டது. ஒன்றுமே இல்லாத ஒன்றிற்குள் எதையோ தேடி அலைவதாகும்.

இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் எனவும் இதையொட்டி சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் இலங்கையின் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேசுவரன் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் இந்தக் கருத்தை மோடி மதித்ததாகத் தெரியவில்லை.

மோடியின் பயணத்திற்கு முன்பாக இலங்கைக் குடியரசுத் தலைவர் சிறீசேனா முன்னிலையில் பேசிய மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் "போரின் போது காணாமல் போன பலர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தமிழர்களுக்கு நல்லெண்ண சமிக்ஞையைக் காட்ட வேண்டும்' என வேண்டிக்கொண்டார். இந்தப் பிரச்னை குறித்தாவது இலங்கை அரசிடம் மோடி ஏதாவது பேசினாரா? அரசு ஏற்பாடு செய்த விழாக்களில் மோடி கலந்துகொண்டாரே தவிர, பாதிக்கப்பட்டத் தமிழர்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க அவருக்கு நேரமில்லை.

தனது தோல்விக்கு இந்தியாவின் "ரா' உளவுத் துறையே முக்கியக் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியவரும் தேர்தல் தோல்விக்குப்பின் தன்னைச் சந்திக்க வந்த பா.ஜ.க. உயர்மட்டக் குழுவைச் சந்திக்க மறுத்தவருமான இராசபட்சவுடன் பேச மோடி தவறவில்லை. ஏனென்றால், வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு இராச பட்வுக்கு உள்ளது.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள மலையகத் தமிழர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்துத் தங்கள் குறைகளை தெரிவிக்க விரும்பியபோது தில்லிக்கு வந்து பேசும்படி கூறிவிட்டார்.

மோடி இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கடுமையாகத் தாக்கியது.

இலங்கையில் இருந்து மோடி திரும்பிய மறுநாளே இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் உரிமை தங்கள் நாட்டின் கடற்படைக்கு உண்டு என பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

ஆசியப் பகுதியில் வலிமை வாய்ந்த சீனாவுடன் நெருக்கமான உறவு கொள்வதுதான் இந்தியாவைத் தன்னிடம் பணிய வைக்கும் என்ற உத்தியை சிங்களத் தலைமை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையை விடுவித்து தன்னுடன் நட்புறவுகொள்ள வைப்பதற்காக ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவளித் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் பலிகொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் சுவடுகளிலேயே மோடி அரசும் தடம் பதித்திருக்கிறது என்பதே உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.