திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மக்களும் மக்களாட்சியும்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதைப் பொருத்தது என்றே பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:57 am

உதயை மு. வீரையன்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதைப் பொருத்தது என்றே பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

மாநில மக்களின் பசியைப் போக்கும் பெரும் பணியைச் செய்து கொண்டிருக்கும் சோழ மண்டலத்தின் உயிர்நாடியே விவசாயமாகும். ஆனால், அதுவும் இப்போது கிராம மக்களின் பாவப்பட்ட தொழிலாகிவிட்டது.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'

என்று பாடினார் பாரதியார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றார் திருவள்ளுவரும்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதை மறந்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்ற பெயரால், அன்னிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கிறார்கள். அதனால்தான், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினை அவசரச் சட்டமாகக் கொண்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பினைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

அன்று ஐரோப்பியர்கள் வணிகம் செய்ய வந்து இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பித்தனர். இன்று "அன்னிய முதலீடு' என்ற பெயரால் அவர்களைக் கெஞ்சி கெஞ்சி அழைக்கிறார்கள்; சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இது எதில் போய் முடியும் என்பதைப் பற்றிய சிந்தனை எவருக்கும் இல்லை.

காவிரியின் உதவியாலும், பருவ மழையின் கருணையாலும் சோழ வள நாடு முப்போகம் விளைந்தது. பின்னர், கர்நாடக மாநிலத்தின் கெடுபிடிகளாலும், பருவ மழையின் மாற்றங்களாலும் விவசாய நிலங்களின் விளைச்சல் குறைந்து இரண்டு போகமானது; இப்போது அதுவும் ஒரு போகமாகி விட்டது.

விவசாய செலவுகளும் பல மடங்காகி விட்டன. கூலி விவசாயிகளின் வருகையும் குறைந்துவிட்டது. விளைபொருள்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையும் கட்டுபடியாகவில்லை. இந்நிலையில், விவசாயத்தை நம்பியிருப்போரும் வேண்டா வெறுப்பாகவே தொடர்ந்து விவசாயம் செய்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இவற்றையெல்லாம் உணராமல் செயல்படுவதால்தான் காவிரி டெல்டா பகுதி போராட்டக் களமாக மாறியிருக்கிறது. அங்குள்ள மக்கள் சாதி மதங்களை மறந்து, கட்சி வேறுபாடுகளைத் துறந்து, போராடிக் கொண்டிருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் மீத்தேன் வாயுத் திட்டம்தான்.

பூமியைத் துளைத்து, பாறைகளை உடைத்து, ரசாயனக் கலவையை மண்ணுக்குள் செலுத்தி, நீரையெல்லாம் வெளியேற்றி, பூமியின் இடுக்குகளில் படிந்திருக்கும் - ஒளிந்திருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் இந்தத் திட்டத்தால் காவிரிப் படுகையின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாழ்படும் நிலை உருவாகியுள்ளது.

நிலத்தடி நீரெல்லாம் எடுக்கப்பட்டுவிட்டால் குடிக்கவும் நீரின்றி மக்கள் அப்பகுதியில் வாழ்வது எப்படி? விவசாயம் செய்வது எப்படி? "சோழ வள நாடு பாலைவனமாக மாறிவிடுமே' என்று அங்குள்ள மக்கள் அச்சமடைவது நியாயம்தானே?

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலின்போது இப்பகுதியில் இத்திட்டம் பற்றிய பிரச்னையே முக்கியப் பொருளாகப் பேசப்பட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த கட்சிகள் தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

வளரும் எரிவாயுத் தேவைகளுக்காக இந்த மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசாங்கம் இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மூலம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் கம்பெனிக்கு உரிமம் வழங்கியது. நாள்: 29.07.2010. மொத்த நிலப்பரப்பு: 691 சதுர கிலோ மீட்டர்.

இந்த நிறுவனம் அன்றைய தி.மு.க. அரசுடன் 2011-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டரில் எரிவாயு மற்றும் நிலக்கரி எடுப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், "மீத்தேன் திட்டத்துக்குத் தேவையான உரிமங்களை பல்வேறு துறைகளிலிருந்து பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும்...' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத் திட்டப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. மீத்தேன் வாயுத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கை வரும்வரை அந்நிறுவனம் எந்தப் பணியையும் தொடரக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கடந்த 2014 டிசம்பர் 31 உடன் முடிவடைந்துவிட்டது. இதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே தமிழகச் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

இதுபற்றி தமிழக முதல்வர் பேசுகையில், "மீத்தேன் திட்டம் குறித்து யாரும் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அந்தத் திட்டத்தை நிறுத்தி உத்தரவிட்ட நிலையிலும், பெட்ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையிலும் அதைப் பற்றிக் கவலை தெரிவிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத்தான்...' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு தமிழக மக்களுக்கு - குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகைப் பகுதி மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிடாத நிலையில் தங்கள் தலைக்கு மேல் கூரிய வாள் தொங்கிக் கொண்டிருப்பதாகவே நினைக்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஆண்டுக் கணக்கில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்; காவிரி டெல்டாவைச் சேர்ந்த மக்கள் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவிட ஒப்பதல் அளித்து 2015 ஜனவரி 5 அன்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத் திட்டம் பற்றிய செய்தி வெளியானதும் மாவட்ட மக்களும், தமிழக அறிவியலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், "இது முக்கியமான பிரச்னை. நியூட்ரினோ திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவர் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற விஷயங்களில் தமிழக அரசு மெளனமாக இருக்கக் கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த பதில் திருப்திகரமாக இல்லை.

நியூட்ரினோ திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி தமிழக அரசு தெளிவாகப் பதில் அளிக்க வேண்டும்...' என்று ஆணை பிறப்பித்துள்ளனர்.

உலகப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்திட இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் அமையவுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாரம்பரிய சின்னங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

இந்தப் பணியின்போது சுமார் 5 லட்சம் கிலோ வெடிபொருள்களைப் பயன்படுத்தி, சுமார் 8 லட்சம் டன் பாறைகளை உடைக்கப் போகிறார்கள். இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி அணுசக்திக் கழகமும், டாடா ஆராய்ச்சி நிறுவனமும் எந்தவித புவிசார் தொழில்நுட்ப ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

அதிக அளவிலான வெடிபொருள்களைப் பயன்படுத்துவது நில நடுக்கத்துக்கான சாத்தியக்கூறை அதிகரிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை என்பது பல்லுயிர்ச் சூழலில் முக்கியமான பகுதியாகும்.

எனவே மக்களை பாதித்து, சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனைக்கும் பிறகு இப்போது மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனை எல்லாத் தரப்பு விவசாயிகளும் முற்றாக எதிர்க்கின்றனர்.

அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் இதனை எதிர்த்துத் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்குச் சாதகமாகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்களித்த மக்களை ஏமாளிகளாக எண்ணாமல் அவர்களை மதித்து செயல்படுவதுதான் ஆட்சியாளர்களுக்கு நல்லது.

"ஒரு நாடு ஒழுங்கான முறையில் இருக்கிறது என்பது, பொதுமக்களிடையே பசி, பட்டினி இல்லாமல் இருப்பதைப் பொருத்ததேயன்றி, அந்நாட்டில் இருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல' என்றார் அண்ணல் காந்தியார்.

கோட்சேவுக்குக் கோயில் கட்டும் மும்முரத்தில் இருக்கும்போது காந்தியாரின் பேச்சையெல்லாம் யார் நினைக்கப் போகிறார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.