ஜனநாயகத்துக்கு முட்டுக்கட்டை
அடக்குமுறைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் பெயர் பெற்ற மியான்மரில் முழுமையான ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்பு மீண்டும்


அடக்குமுறைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் பெயர் பெற்ற மியான்மரில் முழுமையான ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்பு மீண்டும் ஒருமுறை மங்கிப் போய் இருக்கிறது.
ஆட்சி நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதா தோல்வி அடைந்ததே அதற்குக் காரணம்.
"நாட்டைப் பாதுகாக்க ஆட்சி நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு இன்னும் மிக அவசியமாக இருக்கிறது' என நாடாளுமன்றத்தில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பேசியதிலிருந்தே தங்களது பிடியைவிட ராணுவ ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பின்னர், மியான்மரில் கடந்த அரை நூற்றாண்டாக ராணுவ ஆட்சிதான் நடைபெற்று வந்தது.
1990-இல் அங்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், சமூகப் போராளி ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அத்தேர்தல் முடிவுகளை ஏற்க ராணுவம் மறுத்து, அவரை வீட்டுச் சிறையில் வைத்தது.
மேலும், வெளிநாட்டவரை மணந்த ஒருவர் அல்லது வெளிநாட்டவரால் குழந்தை பெற்ற ஒருவர் அதிபராகவோ, துணை அதிபராகவோ தேர்ந்தெடுக்கப்பட முடியாது என சட்டமும் இயற்றியது.
ஆங் சான் சூகியின் கணவர் பிரிட்டீஷ் குடிமகன். அவர் மூலம் பிறந்த 2 மகன்களும் பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், ஆங் சான் சூகி அதிபராவதைத் தடுக்கும் நோக்கிலேயே அந்தச் சட்டத்தை ராணுவ ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர்.
அதன்பிறகு, நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து, 2011-இல் பெயரளவிலான ஒரு மக்கள் அரசிடம் ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் ஒப்படைத்தது.
அதற்கு முன்னதாக, 2008-இல் ஒரு சட்டத் திருத்தத்தை ராணுவ ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர். அதன்படி, நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பங்கு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அதாவது, மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்களாக இருப்பர். எந்த ஒரு முக்கியமான சட்ட மசோதாவையும் நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
இதன்படி பார்த்தால், எந்த ஒரு சட்டத்திருத்தத்தையும் நிராகரிக்கும் "வீட்டோ' அதிகாரம் ராணுவத்தின் வசம் இருக்கிறது.
இந்த வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்யவும், வெளிநாட்டவரை துணைவராகக் கொண்டவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தமுள்ள 664 உறுப்பினர்களில் 75 சதவீதம், அதாவது 498 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக 388 வாக்குகளே கிடைத்தன.
வழக்கம்போல, ராணுவத்தால் நியமிக்கப்பட்ட 25 சதவீத உறுப்பினர்களால் இந்தச் சட்டத்திருத்தத்தையும் தோல்வியடையச் செய்தனர் ராணுவ ஆட்சியாளர்கள்.
இதன்மூலம், நிகழாண்டு நிறைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றாலும், அவரால் அதிபராக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் எதை நினைத்தார்களோ அதைச் செய்து முடித்துள்ளனர் ராணுவ ஆட்சியாளர்கள்.
"ஆங் சான் சூகியை அதிபராக்கும் லட்சியம் இத்துடன் முடிந்துபோய்விடவில்லை. நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக மலரச் செய்வதற்கான அவசியம் குறித்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தொடர்ந்து பிரசாரம் செய்வோம்' என, ஆங் சான் சூகியின் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால், இத்தனை காலம் காத்திருந்தும், ஆங் சான் சூகி அதிபராக இல்லாத ஓர் ஆட்சியை மியான்மர் மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதே உண்மை.
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, 2012-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும், விரைவில் முழுமையான ஜனநாயகப் பாதைக்கு அந்நாடு திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்துக்கூட ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் பரிசீலனை செய்தன. ஆனால், அந்த நம்பிக்கை இப்போது தகர்ந்துபோய்விட்டது.
இன மோதல்கள் குறிப்பாக, ரோஹிங்யா முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை காரணமாக, சர்வதேச நாடுகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது மியான்மர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகாவது முழுமையான ஜனநாயகம் மலர்ந்து, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதுவும் இப்போது பொய்த்துப் போய் இருக்கிறது. இது மியான்மர் மக்களுக்கு மட்டுமல்ல, அதன் ராணுவ ஆட்சியாளர்களுக்கும்கூட நல்லதன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...