நிதியிழப்பு மட்டுமல்ல - பாதுகாப்பு அச்சுறுத்தலும்கூட!
மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனும், சன் நெட்வொர்க் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனும்


மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனும், சன் நெட்வொர்க் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பகம் நடத்திய முறைகேடு நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதை 4 ஆண்டுகளுக்கு முன்னரே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழும், "தினமணி'யும் அம்பலப்படுத்தின.
இந்த மோசடி 2011-இல் வெளிப்படுத்தப்பட்டபோது தரப்பட்ட விவரங்களில் இரண்டு தவறுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. சென்னை போட் கிளப்பில் உள்ள மாறன் சகோதரர்களின் இல்லத்தில் பி.எஸ்.என்.எல். இணைப்புகள் மூலம் இயங்கிய சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தில் 323 அதிவேக தொலைபேசி இணைப்புகள் இருந்ததாக அப்போது குறிப்பிடப்பட்டது.
ஆனால், அந்த எண்ணிக்கை அதைப்போல இரு மடங்கு - 764 என்பது பின்னர் தெரியவந்தது. செயல்பாட்டில் இருந்த இணைப்புகளின் எண்ணிக்கை 323 அல்ல, 764!
அடுத்ததாக, இந்த சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பகம் 6 மாதங்கள் இயங்கியதாக 2011-இல் தொடங்கிய விசாரணையின்போது குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பகம் இயங்கிய காலம் ஜூலை 2004 முதல் ஜூலை 2007 வரையிலான 36 மாதங்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
அப்போது கிடைத்த இந்த இரு தகவல்களின் அடிப்படையில் 2011-இல் விசாரணை நடந்ததால் மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டுவிட்டது. அப்படிக் குறைத்து மதிப்பிட்டபோதிலும், அதுவே மாபெரும் அளவில் இருந்தது. தற்போது அது மேலும் பூதாகரமாகியுள்ளது.
இந்த மோசடியின் மதிப்பைக் குறைத்துக் காட்ட முயன்று, இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ.1.8 கோடி மட்டுமே என்ற செய்தியைச் சிலர், குறிப்பாக, மாறன் சகோதரர்களுக்கு நெருக்கமான ஊடக நண்பர்களும், அரசியல் தொடர்புகளும் பரப்ப முற்பட்டிருக்கிறார்கள்.
இந்த இணைப்புகள் அனைத்தும் "அலுவலகப் பயன்பாட்டுக்காகவே' உபயோகிக்கப்பட்டன என்ற தயாநிதி மாறனின் வாதம்தான் அதற்கு அடிப்படையாகக் கூறப்படுகிறது.
இந்த இணைப்புகள் அனைத்தும் திட்டமிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து திருட்டுத்தனமாக சன் டி.வி.யின் வர்த்தகப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டன என்பதற்கு அமைச்சர் மாறனின் இல்லத்திலிருந்து சன் டி.வி. அலுவலகம் வரை பூமிக்கடியில் ரகசியமாகப் புதைக்கப்பட்டு, யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்லப்பட்ட 764 பி.எஸ்.என்.எல். இணைப்புகளே போதுமான சாட்சி!
இந்த இணைப்புகள் அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டவை என்பது உண்மையென்றால், குற்றம் எதுவும் நிகழவே இல்லை. அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த இணைப்புகள் உபயோகிக்கப்பட்டன என்பது உண்மையென்றால், பிரச்னையே இல்லை.
அப்படியானால், அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கென அமைத்த 764 அதிவேகத் தொலைபேசி இணைப்புகளுடன் கூடிய இணைப்பகம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சென்னை டெலிபோன்ஸ் தலைமைப் பொது மேலாளர் (சி.ஜி.எம்.) பெயரில் நடத்தப்பட்டது ஏன் என்பதுதான் கேள்வி.
இதில் ரகசியம் பேணப்பட்டதும், "அலுவல் பயன்பாட்டுக்கு' அதிகாரப்பூர்வமற்ற வகையில் தொலைபேசி இணைப்பகம் இயங்க அனுமதிக்கப்பட்டதும் ஏன்?
உண்மை என்னவென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சி.ஜி.எம். பெயரில் 764 இணைப்புகளை சேவை இணைப்புகளாகக் கொண்டு மாறன் சகோதரர்கள் இவற்றைத் தங்களது வர்த்தகப் பயன்பாட்டுக்கு முறைகேடாக உபயோகித்திருக்கிறார்கள். அதற்காகவே, சென்னை போட் கிளப் பகுதியிலுள்ள மாறனின் இல்லத்தில் இந்த இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. "அலுவலகப் பயன்பாட்டுக்கானதாகக் கூறப்படும்' இந்த 764 சேவை இணைப்புகளைப் பதிக்க ஆன செலவுதான் ரூ.1.8 கோடி.
இந்தத் தொகையைத்தான் மோசடியின் சிறு இழப்பாகக் குறைத்துக் காட்ட முயல்வோர் தெரிவித்துள்ளனர். 764 அதிவேக இணைப்புகளும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்தப்பட்டன என்று சொன்னால் அதை முட்டாள்கள்கூட நம்ப மாட்டார்கள்.
இந்த 764 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் வர்த்தகப் பயன்பாட்டிற்காகவே உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு இயல்பான ஆதாரமாக இருப்பது, சென்னை - ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தயாநிதி மாறனின் போட் கிளப் இல்ல சந்திப்பிலிருந்து அண்ணா சாலையிலுள்ள சன் டி.வி. அலுவலகத்துக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் ஆகும்.
இந்த கேபிளின் மூலமாகத்தான் 764 அதிவேகத் தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டுள்ளன. எனவே, இந்த இணைப்புகள் அனைத்தும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கானவை என்றும், இதன் இழப்பு ரூ.1.8 கோடி என்றும் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகத்தான் இருக்கும்.
சன் டி.வி. லாபம் பெறுவதற்காக, பொதுமக்களை பல நூறு கோடி ரூபாய் இழப்புக்கு உள்ளாக்கிய குற்றம் இது. இந்த 764 இணைப்புகளும் வர்த்தக நோக்கில் மோசடியாக உபயோகிக்கப்பட்டுள்ளன.
இந்த 764 அதிவேக இணைப்புகளையும் சன் டி.வி.க்கு பி.எஸ்.என்.எல். வர்த்தகரீதியாக வழங்கியிருந்தால், அதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும்? சன் டி.வி. உபயோகித்துவரும் ஒவ்வோர் அதிவேகத் தொலைபேசி இணைப்புக்கும் ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்துகிறது. இது குறிப்பிட்ட இலவச அழைப்புகளுக்கு மட்டுமே. அதற்கு மேல் வரும் அழைப்புகளுக்கு தனிக் கட்டணம் உண்டு.
அந்த அடிப்படையில் கணக்கிட்டால் 764 அதிவேக இணைப்புகளுக்கு சன் டி.வி. ஆண்டுக்கு ரூ.76.4 கோடி செலுத்தியிருக்க வேண்டும். 2004 முதல் 2007 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் இந்த இணைப்புகளுக்கு மும்மடங்காக ரூ.229.2 கோடி செலுத்தியிருக்க வேண்டும்.
இந்த இணைப்புகளுக்கு உரிய கட்டணம் மட்டும்தான் இந்தத் தொகை. இந்த இணைப்புகள் அனைத்தும் கணக்கீட்டு வளையத்துக்குள் வராத வகையில் அமைக்கப்பட்டதால் இதன் உண்மையான
உபயோகக் கட்டணத்தை கணக்கிட முடியாது.
உபயோகக் கட்டணத்தைக் கணக்கிட முடியாத வகையில் தந்திரமாக இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், 30 இணைப்புகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு மாதம் 45 நிமிடங்கள் என்று உபயோகத்தைக் கணக்கிட்டாலும் அவற்றின் மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பல நூறு கோடி ரூபாயாக இருக்கும்.
இதெல்லாம் போதாதென்று, இந்தப் பிரத்யேகத் தொலைபேசி இணைப்பகத்தின் இலவசத் தொலைபேசி சேவையைத் தனக்கு நெருக்கமான பலருக்கும் மாறன் சகோதரர்கள் அளித்துள்ளனர். இது ஒருவகையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட தொலைபேசி சேவையாகும்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் நடத்திய புலனாய்வில், சன் டி.வி.யின் அலுவலர்கள் பலருக்கு மாறன் சகோதரர்களின் இந்த இலவசத் தொலைபேசி அமைப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்தச் சட்ட விரோதமான, திருட்டுத்தனமான தொலைபேசி இணைப்புகள், அரசுக் கருவூலத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய சட்டரீதியான மோசடி மட்டுமல்ல. கண்காணிப்பில்லாத தனியொரு தொலைபேசி இணைப்பே தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் விசாரணைக்கு உரியதுமாகும்.
எந்தக் கண்காணிப்பிலும் இல்லாத 764 அதிவேகத் தொலைபேசி இணைப்புகள் - அதாவது கட்டுப்பாட்டிலேயே இல்லாத முழுமையான தொலைபேசி இணைப்பகத்தின் நிலையை என்னென்பது?
அதுவும் தனியார் ஒருவரின் இல்லத்தில் அதிகாரியின் பெயரில் திருட்டுத்தனமாக செயல்பட்டு வந்திருக்கிறது இந்த இணைப்பகம். அதன் பயன்பாட்டை மறைத்து அப்படி இயக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அப்போது பி.எஸ்.என்.எல்.லின் சென்னை டெலிபோன்ஸ் தலைமைப் பொது மேலாளராக இருந்த எம்.பி. வேலுசாமி யார் தெரியுமா? மத்திய முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளுக்கு உதவியதற்காகத் தடா சட்டத்தின் கீழ் கைதானவருமான சுப்புலட்சுமி ஜெகதீசனின் நெருங்கிய உறவினர் இவரது மனைவி.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்த மூத்த அதிகாரி ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய சி.ஜி.எம். பதவி உயர்வைத் தவிர்த்து, வேலுசாமியை அந்த இடத்தில் அமர வைத்தவர் அமைச்சர் தயாநிதி மாறன். இப்படியோர் இணைப்பகத்தை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு வேலுசாமி சி.ஜி.எம்.ஆக நியமிக்கப்பட்டிருந்தால்கூட அதில் ஆச்சரியப்படத் தேவையில்லை.
எனவே, இந்த மோசடி தொலைபேசி இணைப்பகத்தால் ஏற்பட்ட பாதிப்பு, நிதி இழப்பு, பாதுகாப்புப் பிரச்னைகள் மட்டுமல்லாது, வேறு பல கவலைக்குரிய கேள்விகளையும் எழுப்புகிறது.
சி.ஜி.எம்.ஆக இருந்த வேலுசாமி இந்த சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பகத்தைத் தனது பெயரில் இயக்கியதுடன், இதன் அழைப்புகளைக் கண்காணிப்பதைத் தவிர்த்திருப்பது புதிரானதாக உள்ளது. இந்த மோசடியான இணைப்பகத்தைத் தேச விரோத சக்திகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதால் இதை அவர் தீவிரமாக விசாரித்திருக்க வேண்டாமா? அமைச்சர் தொடர்புள்ளது என்பதால், மத்திய அரசின் புலனாய்வுத் துறையினரும் கண்காணிக்காமல் இருந்திருக்கிறார்களே, அது எப்படி சரி?
இந்தத் தொலைபேசி இணைப்பகம் நடத்தப்பட்ட அதே 2004 - 2007 காலகட்டத்தில்தான் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தை அடைந்திருந்தது. எனவே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான தடா கைதியுடன் நெருங்கிய தொடர்புடைய, சென்னை டெலிபோன்ஸ் சி.ஜி.எம். பெயரில் நடத்தப்பட்ட - இந்த 764 அதிவேகத் தொலைபேசி இணைப்புகள் குறித்து தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ஏன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை, மேற்கொள்ளக் கூடாது?
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முறைகேடு கடந்த 10 ஆண்டுகளாக, பத்திரிகைகளில் வெளிவந்து 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு, வழக்குத் தொடரப்படாமல் இருப்பதற்கு மாறன் சகோதரர்களின் அரசியல் தொடர்புகள்தான் காரணம்.
அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது தொலைக்காட்சி நிறுவனத்துக்குத் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும் இன்னும் விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. "கே' (கலாநிதி), "டி' (தயாநிதி) சகோதரர்களின் சாமர்த்தியம் காரணமா, அரசு இயந்திரத்தின் மெத்தனம் காரணமா?
சட்ட விரோத இணைப்பகத்தைத் தேச விரோத சக்திகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதால் இதை சி.ஜி.எம். தீவிரமாக விசாரித்திருக்க வேண்டாமா? அமைச்சர்
தொடர்புள்ளது என்பதால் மத்திய புலனாய்வுத் துறையினரும் கண்காணிக்காமல் இருந்தது எப்படி சரியாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...