திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மத நேயமும் மனித நேயமும்!

இந்திய நாட்டின் 66-ஆவது குடியரசு தின விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:32 am

உதயை மு. வீரையன்

இந்திய நாட்டின் 66-ஆவது குடியரசு தின விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

வரலாறு காணாத பாதுகாப்புடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குண்டுகள் துளைக்காத அரங்கிலிருந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

குடியரசு நாளையொட்டி, குடியரசுத் தலைவர் பொதுமக்களுக்கு நிகழ்த்திய உரையின்போது, "மதத்தின் பெயரால் வன்முறை கூடாது' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

"ஒற்றுமைக்கான சக்தியை வழங்குவது மதம்; அதை வன்முறைக்கான ஆயுதமாக மாற்றிவிடக் கூடாது. இந்தியப் பாரம்பரியம் நமக்குக் கற்பித்தது ஒற்றுமை என்பது பலம், வேறுபாடு என்பது பலவீனம் என்பதாகும்' என்று பேசியுள்ளார்.

மேலும், ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புப் புத்தகம்தான் புனித நூலாகும் என்றும், பிரிந்து கிடக்கும் சமூகத்தை நல்வழிப்படுத்தவும், சகிப்புத் தன்மையை எதிர்ப்பவர்களை திருத்துவதற்கும் நன்னடத்தைக் கொள்கை தேவைப்படுகிறது என்றும், அரசியலில் ஏற்படும் கட்டுப்பாடற்ற போட்டி சமூகத்தின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடுகிறது என்றும், நாவால் பேசும் வன்முறைப் பேச்சு மக்களின் இதயங்களைக் காயப்படுத்தி விடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை ஆமோதிப்பது போலவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், "நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்' என்று பேசியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மதத்தைத் தேர்வு செய்யவும், பின்பற்றவும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. எந்தவித அச்சுறுத்தலும், பயமுமின்றி மதத்தை அவர் பின்பற்றலாம். இதற்கு இருநாட்டு அரசியலமைப்புச் சட்டங்களிலும் இடம் உள்ளது.

இதனிடையே தங்கள் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர்கள், சகிப்புத் தன்மையின்றி வன்முறை, பயங்கரவாதம் ஆகிய செயல்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்பவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் பேசியிருப்பது இந்த நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலகம் முழுவதற்குமான அறிவுரையாக ஒபாமாவின் பேச்சு இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மத சகிப்புத் தன்மை குறைந்து வருவதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார் என்று இங்குள்ள எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இந்தியா சுதந்திரம் பெற்ற போதே மதத்தின் அடிப்படையில் நாடு இரண்டுபட்டது. என்றாலும் பிரச்னை தீரவில்லை, அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு நாளும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் வேளையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்திய விடுதலை பற்றி பேச்சு தொடங்கிய போதே முஸ்லிம்களுக்குத் தனிநாடு பற்றிய கோரிக்கையும் எழுந்தது. 1940 மார்ச் 23-இல் அகில இந்திய முஸ்லிம் லீக் லாகூர் தீர்மானம் எனப்படும் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஆனால், லாகூர் தீர்மானத்தில் "பாகிஸ்தான்' என்ற வார்த்தையே காணப்படவில்லை. பின்னரே "பாகிஸ்தான் தீர்மானம்' என்று பெயர் சூட்டப்பட்டது. ஜின்னாவின் செல்வாக்கும், சொல்வாக்கும் ஓங்கியது.

இதனை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும், இராஜாஜியும் ஆதரித்தனர். முஸ்லிம்கள் தனிநாடு கேட்பதற்கு உரிமை உண்டு எனவும், அதனை இந்துக்கள் எதிர்ப்பதில் பொருளில்லை எனவும் டாக்டர் அம்பேத்கர் 1941-இல் 'பட்ர்ன்ஞ்ட்ற்ள் ர்ய் டஹந்ண்ள்ற்ஹய்' என்ற நூலில் கூறியிருக்கிறார்.

முஸ்லிம்களின் தனிநாடு கோரிக்கைக்கு இராஜாஜி அளித்த ஆதரவுக்கு "ராஜாஜி திட்டம்' என்றே பெயர்.

"பிரிவினையை காங்கிரஸ் ஏற்பதென்பது தமது சடலத்தின் மீதுதான் நடைபெற முடியும்' என்று கூறிவந்த காந்திஜியும், பிரிவினை இல்லையென்றால் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என்பதை உணர்ந்து பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தார்.

இந்திய விடுதலை நாள் நெருங்க நெருங்க வகுப்புக் கலவரங்கள் அதிகரித்தன. அதனால், மக்கள் ஒரு பக்கமிருந்து மறுபக்கம் அகதிகளாகச் செல்லத் தொடங்கினர்.

எல்லாத் தடைகளையும் மீறி எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிகழ்ந்தன. அப்போது மொத்தத்தில் இரண்டு லட்சம் பேர் மடிந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது.

வாழ்வாதாரங்களை இழந்து, எங்கே போவது என்றே தெரியாமல் தெருவில் நின்றோரின் தொகைக்குக் கணக்கே இல்லை. இந்திய விடுதலை வரலாற்றில் கறைபடிந்த பக்கங்கள் இவை.

இந்திய அரசியல் நிருணய சபை தில்லியில் ராஜேந்திர பிரசாத்தின் தலைமையில் கூடியது.

பாகிஸ்தான் அரசியல் நிருணய சபை கராச்சியில் கூடி ஜின்னாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து. இரண்டு நாடுகளும் விடுதலையடைந்தன.

மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினை ஏற்பட்டுவிட்டால், எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று அப்போது கூறப்பட்டது. இன்றுவரை எந்தத் தீர்வும் ஏற்படவில்லை என்பதே உண்மை நிலை.

இந்திய அரசியலமைப்பு ஒரு பொறுப்புள்ள அரசு முறையினை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவை சமயச் சார்பற்ற அரசாக அமைத்துள்ளது. எல்லாக் குடிமக்களுக்கும் தாங்கள் விரும்பும் எச்சமயத்தையும் பின்பற்ற அரசு உரிமை வழங்கியுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சோசலிஸம் ஆகிய சொற்கள் இடம் பெறவில்லை.

இந்த விளம்பரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வினா எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், "42-ஆவது சட்டத் திருத்தத்தில்தான் மேற்கூறிய சொற்கள் இடம் பெற்றிருந்தன.

தற்போது விளம்பரத்தில் வெளியிடப்பட்டிருப்பது அரசில் சாசனம் இயற்றப்பட்டபோது அதன் முன்னுரை குறித்த படமாகும்' என்று கூறியுள்ளார்.

"மதச்சார்பின்மை' என்பதற்கு ஒவ்வொருவரும் அவரவருக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ளுகின்றனர். அரசாங்கம் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று கூறுவோரும், அரசாங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உள்ளனர்.

இதுபற்றி காந்தியடிகள் கூறுவது என்ன? "நான் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும், அரசாங்கமும் தனித்தனியாக இருக்கும். என் மதத்தில் உறுதியுடன் நிற்பேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன்.

ஆனால், மதம் என் சொந்த விஷயம். அரசாங்கத்திற்கும், அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்பதை அவர் கருத்து.

எவ்வாறாயினும், எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையுமே போதிப்பதாகக் கூறுகின்றன. அப்படியானால், உலகில் இத்தனை போரும், பூசலும், பயங்கரவாதமும் ஏன்? இந்த வினாவுக்கு விடை இல்லை.

தங்கள் சமயம் மட்டுமே உயர்ந்தது என்றும், மற்றவை தாழ்ந்தவை என்றும் பரப்புரை செய்யப்படும் போதுதான் பிரச்னை உருவாகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

மதம் மாறுவது என்பது வேறு, மதம் மாற்றப்படுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் மதமாற்றத் தடைச் சட்டம் என்பது யாருக்கும் எப்போதும் தேவைப்படாது.

"இந்த உலகமே என் வீடு; உலக மக்களே என் உடன்பிறப்பு; அவர்களுக்குச் சேவை செய்வதே என் மதம்' என்றார் வீரத் துறவி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் ஞானிகள் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்களுக்குள் சண்டை இல்லை. எனவே, சமாதானமும் தேவை இல்லை.

மத நேயம் என்பதும், மனித நேயம் என்பதும் இப்படித்தானே இருக்க

வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.