இன்னுயிர் ஈந்தது எதற்காக?
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கொதித்து எழுந்து 1965-ஆம் ஆண்டு சனவரி 25-ஆம் நாளில் நடத்திய போராட்டம் வரலாறு காணாத போராட்டமாகும்.


இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கொதித்து எழுந்து 1965-ஆம் ஆண்டு சனவரி 25-ஆம் நாளில் நடத்திய போராட்டம் வரலாறு காணாத போராட்டமாகும். இப்போராட்டத்தில் கீழப்பழுவூர் சின்னச்சாமி உள்பட ஏழு பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். இருவர் நஞ்சுண்டு மாண்டனர். மாணவர் இராசேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
கோவை குமாரபாளையம், வெள்ளக்கோவில், திருப்பூர், கரூர், மணப்பாறை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூறு பேருக்கும் மேல் இறந்தனர்.
தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்திற்கு இணையான ஒரு போராட்டம் இதற்கு முன்னரோ, பின்னரோ நடைபெற்றது இல்லை. தங்களது எதிர்காலம் இந்தித் திணிப்பால் பாதிக்கப்படும் என்ற உணர்வினால் உந்தித் தள்ளப்பட்டு மாணவர்கள் தன்னிச்சையாக நடத்தியப் போராட்டம் இந்தப் போராட்டம்.
தமிழக அரசியலில் மகத்தான மாற்றத்தை இந்தப் போராட்டம் ஏற்படுத்திற்று. இப்போராட்டம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து தமிழகமெங்கும் மொழிப் போராட்டத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போராட்டம் என்ன நோக்கத்திற்காக நடைபெற்றதோ அந்த நோக்கம் இந்த 50 ஆண்டு காலத்தில் ஒரு சிறிதளவேனும் நிறைவேறியிருக்கிறதா என்பதை நாம் எண்ணிப் பார்ப்போமானால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்.
இந்தி அரியணை ஏறினால் தாய்மொழியான தமிழ் பின்னுக்குத் தள்ளப்படும்; நமது வாழ்வுரிமையும் பறிபோகும் என்பதற்காகத்தான் மாணவர்கள் போராடினார்கள். ஒன்பது பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் உயிர்த்தியாகம் செய்தார்கள். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காவல் துறையின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இரையாகி மாண்டார்கள்.
மாணவர்களின் போராட்டத்தால் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், தமிழ்மொழி அரியணை ஏற்றப்படவில்லை. மொழிப்போரைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஆங்கிலத்திற்கு மகுடம் சூட்டின.
தமிழ்நாட்டில் இந்தியைத் தடுக்க வேண்டுமானால், ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் ஆக்கப்படவேண்டும். அதுதான் இந்தி உள்பட பிறமொழிகளின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் படராமல் தடுக்கும்.
ஆனால், திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தின் மூலம் மட்டுமே இந்தியைத் தடுக்க முடியும் என்று கருதின.
மூதறிஞர் இராஜாஜி கூறிய "என்றென்றும் ஆங்கிலம்; ஒரு போதும் இந்தி கூடாது' என்ற அறிவுரையை தங்களது வழிகாட்டு நெறியாக திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
காமராசரின் ஆட்சியில் உயர்நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது. அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏழு சதவீதமாக இருந்த கல்வியறிவு படைத்தவர்களின் எண்ணிக்கை, காமராசர் காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்தது. அவர் அமைத்த அடித்தளத்தின் விளைவாக இன்று தமிழகத்தில் 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
புகுமுக வகுப்பு வரை கல்வியை அவர் இலவசமாக்கினார். பட்டப்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியை கொண்டு வர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டு சகல துறைகளிலும் தமிழே ஆட்சி மொழியாகத் திகழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், "தமிழ்' "தமிழ்' என்று முழங்கியவர்களின் ஆட்சி நடைபெற்ற கடந்த 48 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. பள்ளிகளின் எண்ணிக்கையும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்தன.
புதிய பள்ளிகளைத் திறக்க அரசு முன்வருவதில்லை. இருக்கும் பள்ளிகளும் சீர்கேடுற்ற நிலையில் உள்ளன. ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் புற்றீசல்போல் பெருகிவிட்டன. கல்வி வணிகமாக்கப்பட்டு வசதிபடைத்தவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டுவிட்டது.
1978-ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளுக்கு மானியம் அளிப்பதை அரசு நிறுத்தியது. தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளாக மாறத் தொடங்கின. அரசே இதற்கு ஊக்கம் அளித்தது.
1978-ஆம் ஆண்டு வரை மெட்ரிக் பள்ளிகள் சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கின. அப்போது மொத்தம் 34 பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆங்கிலோ - இந்திய குழந்தைகளும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும் இவற்றில் படித்தன.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மால்கம் ஆதிசேஷையா, "மெட்ரிக் பள்ளிகளை நடத்துவது பல்கலைக்கழகத்தின் வேலையல்ல' என்று கூறி கைகழுவினார். எனவே, பொதுக்கல்வித் துறை இயக்குநர் மெட்ரிக் கல்வி அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தினார்.
இப்பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் சட்டத்திட்டங்களில் இல்லை. எனவே, இடப்பரப்பு, கட்டடம், சுகாதார வசதி, பயிற்சி பெற்ற போதுமான ஆசிரியர்கள் எதுவும் இல்லாமல் மெட்ரிக் பள்ளிகள் ஏராளமாக தொடங்கப்பட்டன.
மெட்ரிக் பள்ளிகளுக்கு போதுமான மாணவர்கள் வேண்டுமென்றால், ஆங்கில வழிக் கல்வி முறையில் அமைந்த மழலையர் பள்ளிகள் வேண்டும். எனவே அப்பள்ளிகளும் முளைத்தன.
தொடக்கக் கல்விச் சட்டப்படி இப்பள்ளிகளில் தமிழே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் பயிற்சி மொழியாக இருக்க முடியாது. எனவே ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள், இச்சட்டத்தின் கீழ் வராமல் இருப்பதற்காக தங்களைப் பதிவு செய்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது 3,000-த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அவற்றில் பாதி பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெறாதவையாகும்.
இந்தியாவிலேயே மெட்ரிக் பள்ளிகள் தமிழகத்தில்தான் அதிகம். திராவிடக் கட்சிகள் இவற்றுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்துவிட்டன.
ஆண்டுதோறும் வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
கல்வித் துறையை மேம்படுத்துவதைப்பற்றி ஆராய அமைக்கப்பட்ட பல நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆங்கில மழலையர் பள்ளிகள் 15,000, ஆங்கிலப் பள்ளிகள் 2,400, சி.பி.எஸ்.இ. 1,500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 150, ஆங்கிலோ - இந்திய பள்ளிகள் 42 ஆகியவை தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகக்கூட வைக்காமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களும் போதிய கல்வித் தகுதியற்றவர்களும் இவற்றில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்ச்சான்றோர் பேரவையும் பிற தமிழ் மன்றங்களும் 1999-ஆம் ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின.
அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனை அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழைப் பயிற்று மொழியாக்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர நீதியரசர் மோகன் தலைமையில் தமிழறிஞர் தமிழண்ணல், முத்துக்குமரன், இளங்குமரனார், வா.செ.குழந்தைசாமி ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரையில் தொடக்கப்பள்ளிகளில் தமிழ் மட்டுமே பயிற்சி மொழியாக இருப்பதற்கான சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டுவராமல் அரசு ஆணை மட்டும் பிறப்பித்தார்.
அந்த அரசாணையை எதிர்த்து ஆங்கில வழி பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த அரசாணையை செல்லாததாக்கின. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் போடப்பட்ட மேல் முறையீடு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்தை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தியது தி.மு.க. என்பது மறக்க முடியாத ஒன்றாகும். ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்தபோது, தமிழக சாலைகளில் உள்ள தொலை கற்களில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டன.
முதல் வகுப்பில் தொடங்கி பட்டப் படிப்பு வரை தமிழே கற்காமல் ஒருவர் பட்டம் பெற முடியும் என்ற நிலைமை தமிழகத்தில் நீடிக்கிறது. பிற மாநிலங்களில் அந்தந்த மொழிகளே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் அமைந்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் சவலைப் பிள்ளையாக கவனிப்பாரற்று மூலையில் கிடக்கிறது.
மொழிப்போரில் தமிழுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார்கள்?
ஆங்கிலத்தை அரியணை ஏற்றுவதற்காகவா? தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலப் பதாகையை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காகவா அந்தத் தியாக சீலர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள்?
அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் தமிழைக் காக்க உயிரிழந்தும், சிறைக்கொட்டடிகளில் சொல்லொண்ணாத கொடுமைகளைத் தாங்கியும் எண்ணற்ற வகையில் போராடியவர்களின் தோள்களின்மீது ஏறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திராவிடக் கட்சிகள், தமிழை அரியாசனத்திலிருந்து கீழிறக்கி ஆங்கிலத்தை ஏற்றி அமர வைத்துவிட்டன.
ஆனால், இன்னமும் தமிழ் தமிழ் எனப் பேசி மக்களை மயக்குவதற்கு முயற்சி செய்யும் துணிவு அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...